கண் அசைவைக் கொண்டு மனதைப் படிக்கும் கலை தெரியுமா?

கண் அசைவைக் கொண்டு மனதைப் படிக்கும் கலை
கண் அசைவைக் கொண்டு மனதைப் படிக்கும் கலைhttps://slovenvs.best
Published on

ண்கள் நம் உணர்வுகளை பிரதிபலிக்கும். கண்கள் பேசும் என்பது உண்மை. நம் உணர்வுகளை எளிதாக எதிராளிக்குக் காட்டிக் கொடுத்து விடும். உள்ளத்தின் ஆழத்தில் உணர்வதை வெளிக்காட்டும் சிறந்த கண்ணாடி இது. நாம் பேசும்போது எதிராளியின் கண்களை கவனித்துப் பேச அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் அந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் ஓரளவிற்கு நம்மால் கணிக்க முடியும்.

ஒருவரின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய அவர்களின் கண் அசைவுகளை வைத்தே நம்மால் உணர முடியும். கண்கள் மூலம் பிறரின் மனதை நம்மால் எளிதாகப் படிக்க (கணிக்க) முடியும். சிலர் கண்களைப் பார்த்துப் பேசாமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு பேசுவார்கள். அவர்களுக்கு உங்களுடன் பேச தயக்கம் இருப்பதை இது உணர்த்தும்.

எதிரில் நிற்கும் நபரின் கண்களைப் பார்த்து பேசுவது என்பது நம் தைரியம் மற்றும் ஆர்வத்தைக் காட்டும். நம்முடன் பேசும்பொழுது எதிராளியின் கண்கள் விரிவடைந்தால் அவர்கள் அன்பாகவும், ஆச்சரியப்பட்டுக் கொண்டும்  இருக்கிறார்கள் என்று அர்த்தம். கண்களைப் பார்த்து பேசும்போது எதிரில் இருப்பவர்கள் அடிக்கடி இமைகளை சிமிட்டிக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு மன அழுத்தம் அல்லது மனதில் நெருடல் இருப்பதை உணரலாம். இயல்பான கண் சிமிட்டல் இருப்பின் அவர்கள் டென்ஷன் எதுவும் இல்லாமல் ரிலாக்ஸ்டாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

சிலர் பேசும்பொழுது அவர்களின் கண்கள் இங்கும் அங்குமென அலைபாய்ந்து கொண்டிருக்கும். அப்படி அலைபாய்ந்து கொண்டிருந்தால் வஞ்சக எண்ணம் அல்லது வெறுப்புடன் இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம். சிலர் மகாகவி பாரதியார் கூறியபடி நேர்கொண்ட பார்வையுடன் நம் முகத்தைப் பார்த்துப் பேசினால் அது அவர்களின் தெளிவான மனநிலையை காட்டும். பொய்யாகப் பேசவில்லை எனப் பொருள் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 8 பயன்கள்!
கண் அசைவைக் கொண்டு மனதைப் படிக்கும் கலை

சிலர் பேசும்போது கண்களை மேல் நோக்கி ஒரு புறமாக பார்த்தவாறு இருந்தால் நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். சிலரின் பார்வை எதையோ பறி கொடுத்தது போல் வெற்றுப் பார்வையாக வெறிச்சென்று இருக்கும். அதைக்கொண்டு அவர்கள் ஏதோ கவலையில், வருத்தத்தில் இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம்.

சிலர் பேசும்பொழுது கண்களில் நீர் கோர்த்துக்கொள்ளும். இது சோகம் அல்லது ஆனந்தம் போன்ற எமோஷன்களில் உள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டும். நாம் ஒருவரிடம் பேசும்போது அந்த நபரின் கண்கள் மேல் இடது பக்கம் நகரும்போது நாம் சொல்வதை அவர்கள் காட்சிப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம். பொய் சொல்லும்போது கண்கள் படபடக்கும், எதிராளியின் முகத்தை நேராகப் பார்க்காமல் கீழ் நோக்கிய பார்வையாக இருக்கும்.

மொத்தத்தில், நம் கண்கள் ஆன்மாவின் ஜன்னல்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதை சிறு அசைவுகள் மூலம் வெளிப்படுத்துகின்றன. இது ஒரு தன்னிச்சையான எதிர்வினை. இதனை எதிர்தரப்பில் இருக்கும் மக்களால் எளிதாகப் படிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com