இயற்கையை ரசிக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
https://tamil.nativeplanet.com

இயற்கையை ரசிக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வீட்டிற்குள்ளேயோ, அலுவலகத்திலேயோ முடங்கி விடாதீர்கள். கோடை விடுமுறையில் வெளியே வாருங்கள். இயற்கையை ரசிப்பத்தை அதிகரியுங்கள். இதனால் அளவற்ற நன்மைகள் உண்டு என்கிறார்கள். இயற்கை சூழ்ந்த பூங்காக்களில் நடக்கும்போதோ அல்லது பறவைகளின் இனிய சப்தங்களை கேட்கும்போதோ நமது மூளையிலுள்ள பிரிபரல் கார்டெக்ஸ் ஆற்றல் 10 சதவீதம் அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த கார்டெக்ஸ்தான் மூளையின் முக்கிய செயல்களான கவனம், நினைவு, முடிவு எடுக்கும் ஆற்றல் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றுகிறது.

இயற்கை சூழ்ந்த இடங்களில் 15 நிமிடங்கள் நடந்தாலே, அந்த நபரின் நேர்மறையான சிந்தனைகளை அதிகரித்து அவரின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல் அதிகரிக்கிறது என்கிறார்கள். ஒரே அறைக்குள் நாள் முழுவதும் இருப்பவர்களின் மூளையின் ஆற்றல் 55 சதவீதம் அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலேயே செலவிடுகிறது என்கிறார்கள்.

பொதுவாக, இயற்கைக் காட்சிகளை பார்ப்பது மனதுக்கு அமைதி அளிக்கும் என்பார்கள். நிறத்தின் அடிப்படையில் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே இதற்குக் காரணம். அதனால்தான் நீர் வீழ்ச்சி, பசுமையான வயல்கள், அடர்ந்த செடி கொடிகள், மரங்கள் மற்றும் புதிதாக துளிர்க்கும் இலைகளை பார்க்கும் போது நம்முடைய மனதில் ஒருவித பரவசம் உண்டாகிறது.

அதேபோல் மன அழுத்தத்தில் பாதிக்கப்படுகின்றவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு அடிக்கடி வானத்தை பார்ப்பது ஓர் சிறந்த வழியாகும். இது மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தை குறைக்க உதவும் என்கிறார்கள் .அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

வாரம் இருமுறை தோட்டப் பணிகளை செய்கிறவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு குறைவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நாம் வாழும் வீட்டைச் சுற்றி பசுமையான சுற்றுசூழல் நிலவினால் அது பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும் என்கிறது ஆய்வுகள். அதில் மேலும் ஒரு நன்மை பசுமை நிறைந்த சுற்றுச்சூழலில் வாழும் பெண்களுக்கு மெனோபாஸ் காலம் ஒரு வருடம் தள்ளிப் போகிறது என்பது தான். வழக்கமாக பெண்களின் மெனோபாஸ் 50 பிளஸ் என்றால் அவர்களுக்கு 51 பிளஸாக இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

வயதானவர்கள் வயதாகி விட்டதே என்று வீட்டிற்குள்ளேயே முடங்கி விடாதீர்கள். நீங்கள் எந்தளவு வீட்டை விட்டு சென்று வருகிறீர்களோ, அந்தளவுக்கு உங்கள் வாழ்நாள் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதையும் படியுங்கள்:
வெற்றுக்கூடு நோய்க்குறியை எதிர்கொள்வது எப்படி?
இயற்கையை ரசிக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இயற்கை சார்ந்த இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால், அவர்களது கோபம் குறையும் என்கிறார்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். தினமும் 20 நிமிடங்கள் உங்கள் மனம் விரும்பும் இயற்கை சார்ந்த வெளியிடங்களில் எந்தவித தொந்தரவுமின்றி அமர்ந்து இருந்தாலோ அல்லது நடைபயின்றாலோ போதும் உங்கள் மன இறுக்கம் குறையும் என்கிறார்கள். இதை அவர்கள், ‘இயற்கை மாத்திரை' என்கிறார்கள். இந்த 20 நிமிட இயற்கை மாத்திரை மன அழுத்தத்தை உருவாக்கும் கார்டிசால் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது என்கிறார்கள்.

இயற்கையோடு நேரத்தை செலவிடும்பொழுது கார்ட்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் உற்பத்தி குறைந்து உங்களுடைய மனநிலை மேம்பட்டு, மனத் தெளிவு கிடைக்கும். வாய்ப்பு இருந்தால் கோடை விடுமுறையில் காடுகளுக்கு ஒரு சிறிய பயணம் மேற்கொள்ளலாம். உங்களைச் சுற்றி இருக்கக்கூடிய இயற்கை சூழலை ஆழ்ந்து கவனித்து அனுபவிக்கவும். அங்கு ஏற்படக்கூடிய ஓசைகள் மற்றும் வாசனைகளை முழு உணர்வோடு உள்வாங்குங்கள். நிச்சயமாக மன மாற்றம் காண்பீர்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com