பீஜ் ஃபிளாக் (Beige flag) ஆசாமிகள் ரெட் ஃபிளாக் மற்றும் கிரீன் ஃபிளாக் ஆசாமிகளுக்கு இடைப்பட்ட நபர்களின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். ரெட் ஃபிளாக் ஆசாமிகளைப் போல ஆபத்தானவர்களோ அல்லது கிரீன் ஃபிளாக் ஆசாமிகளைப் போல நேர்மறை ஆசாமிகளோ அல்ல. இவர்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வித்தியாசமான பழக்க வழக்கங்கள்: இந்த வகையான மனிதர்களிடம் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே உணவை சாப்பிடுவதை வலியுறுத்துவது அல்லது ஹோட்டல்களுக்கு சென்றால் வழக்கமாக அமரும் மேஜையை தவிர வேறு எங்கும் அமராதது போன்ற அசாதாரணமான, ஆனால் ஆபத்து இல்லாத பழக்கங்கள் அவர்களிடம் இருக்கலாம்.
சலிப்பான நடைமுறைகள்: இவர்கள் கடினமான நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. ஆனால், சலிப்பான நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள். ஒவ்வொரு இரவும் படுக்கப்போகும் முன்பு ஒரு குறிப்பிட்ட டிவி நிகழ்ச்சியை பார்த்தால்தான் தூக்கம் வரும். வேலைக்கு போகும்போது எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் தான் செல்லும் அதே பாதையில்தான் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது போன்ற விசித்திரமான பழக்க வழக்கங்கள் இருக்கும். அவர்களது உரையாடல்களில் அடிக்கடி ஒரே மாதிரியான சொற்றொடர்களை பயன்படுத்துவார்கள். முதலில் கேட்க வசீகரமாக இருக்கும். பின்பு சலிப்பாக உணர வைக்கும்.
மிதமான உறுதியற்ற தன்மை: இவர்கள் எதிலும் சட்டென்று முடிவெடுத்து விட மாட்டார்கள். உறுதியற்ற தன்மை எல்லா விஷயங்களிலும் காணப்படும். உணவு உண்ணச் செல்லும் உணவகத்தை தேர்ந்தெடுப்பது முதல் ஒரு ஆடையை தேர்ந்தெடுப்பது போன்ற சிறிய முடிவுகளை எடுப்பதில் கூட சிரமப்படுவார்கள்.
நடுநிலை கருத்துக்கள்: இவர்கள் பெரும்பாலும் நடுநிலையான கருத்துக்களை கொண்டிருப்பார்கள். மோதல் போக்கு அல்லது வலுவான நிலைப்பாடுகளை கொண்டிருக்க மாட்டார்கள். அவற்றை தவிர்க்க விரும்புவார்கள். ஆணித்தரமாக வாதாடுவதோ, மனமுவந்து விட்டுத் தருதலோ இவர்களிடம் கிடையாது. அவர்களுக்கு இணக்கமாக தோன்றுபவற்றை சொல்வார்கள்.
அதிக எச்சரிக்கை உணர்வு: இவர்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம். எந்த புதிய விஷயங்களை செய்வதிலும் முயற்சி செய்வதிலும் தயக்கம் காட்டுவார்கள். தங்களுக்கு பழகிய விஷயங்களைத் தான் தொடர விரும்புவார்கள். புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள். பழகிப்போன விஷயங்களைத்தான் வசதியாக உணர்வார்கள்.
புதுமையை விரும்பாதவர்கள்: புதுமையான கருத்துக்களை ஏற்க மாட்டார்கள். எதைப் பற்றி பேசினாலும் ஒரே மாதிரியான யூகிக்கக்கூடிய, திரும்பத் திரும்ப அதே மாதிரி உரையாடல்களில் மட்டும்தான் ஈடுபடுவார்கள். தங்களது மிகவும் தெரிந்த தாம் பார்க்கும் வேலை, பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் வானிலை ஆகியவற்றைப் பற்றி பேசலாம்.
தீங்கு விளைவிக்காத நகைச்சுவை: இவர்களுடைய நகைச்சுவை உணர்வு பாதுகாப்பானது மற்றும் பாதிப்பில்லாதது. மிதமான நகைச்சுவையாக இருக்கும். யாருக்கும் தீங்கு விளைவிக்காததாகவும் இருக்கும். அதிகப்படியான கண்ணியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். சமூக விதிமுறைகளில் அக்கறை கொண்டவர்கள்.
மிதமான உற்சாகம்: இவர்கள் தங்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும்போது கூட மிதமான உற்சாகத்தைத்தான் வெளிப்படுத்துவார்கள். எதற்கும் அதிகமாக உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். எதையும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் மையமாக நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள்.
மொத்தத்தில் பீஜ் ஃபிளாக் ஆசாமிகளின் குணாதிசயங்கள் எதிர்மறையானவை அல்ல. அவை இனிமையான, சாதுவான, யூகிக்கக்கூடிய இயல்புகளாக இருக்கின்றன. இவர்கள் நம்பகமான ஆசாமிகள். பொதுவாக பெரும்பான்மையான மக்கள் இவர்களைப் போலத்தான் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலான விஷயம்.