தினசரி வாழ்வில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாத்திரங்களும் நாகரிக வளர்ச்சிக்கேற்ப அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. அன்றாடத் தேவைகளுக்கு நாம் பல்வேறு பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றினால் ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
மாவீரன் நெப்போலியன் தான் உணவு உண்பதற்கு அலுமினியத்தால் ஆன தட்டைத்தான் வைத்திருந்தானாம். அலுமினியம் அன்று விலை மதிப்பு மிக்கதாக இருந்தது. இன்று அது ஏழைகளின் பாத்திரமாக மாறிவிட்டது.
மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தார். அந்தப் போரில் கலந்து கொண்ட அவனது படை வீரர்கள் தீராத வயிற்று வலியில் அவதியுற்றனர். ஆனால், அவனது போர்ப்படை தளபதிகளுக்கு மட்டும் எவ்வித நோயும் வலியும் இல்லாமல் நலமுடனே இருந்தனர். அதற்குக் காரணம், படை வீரர்கள் அனைவரும் நீர் அருந்த வெள்ளீயத்திலான குவளையைப் பயன் படுத்தினர். ஆனால், படைத் தளபதிகள் வெள்ளியால் ஆன குவளைகளைப் பயன்படுத்தினர். வெள்ளி குவளையைப் பயன்படுத்திய படைத்தளபதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வெள்ளீயத்தை பயன்படுத்திய படை வீரர்கள் தீராத வயிற்று வலியால் அவதியுற்றதால் போர் புரிய போதிய வீரர்கள் இல்லாமல் போனதால் அலெக்சாண்டர் நாடு திரும்ப வேண்டியதாயிற்று.
அறிவியல் ஆய்வின்படி வெள்ளி உலோகத்துக்கு நோய்களை உண்டாக்கக்கூடிய 650 நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை உள்ளது. மேலும், ஒரு லிட்டர் தண்ணீரை சுத்தம் செய்ய 0.1 கிராம் வெள்ளியே போதுமானது. தண்ணீரிலுள்ள கிருமிகளை வெள்ளி தூய்மைப்படுத்துவது போல், பாலை வெள்ளி பாத்திரத்தில் இட்டு அருந்துவதால் பாலின் மூலம் பரவும் நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. வெள்ளி பாத்திரத்தை உபயோகிப்பதால் நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
தமிழக நாகரிகம் செம்பில் தொடங்கியதாகக் கூறுவர். தமிழகத்தில் செம்பு அதிக அளவில் கிடைத்ததால் தாங்கள் பயன்படுத்திய கருவிகளையும் பாத்திரங்களையும் செம்பில் செய்தனர். பழந்திராவிட மக்கள் அறுவை சிகிச்சைக்காக செப்புக் கத்திகளைப் பயன்படுத்தினர். இதனால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது என்று இன்றைய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சித்தர்களும் முனிவர்களும் செம்பினால் ஆன கமண்டலங்களையே உபயோகித்தனர். செம்புக்கு நீரிலுள்ள தீய நுண்ணுயிர்களை அழிக்கும் சக்தி உண்டு. செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால் பித்த நோய்கள், கபம், சுவாச நோய்கள், கண் நோய் ஆகியவை நீங்கிவிடும் என்று அறியப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் குடிநீரில் உள்ள கோலி ஃபார்ம் பாக்டீரியா வயிற்றுப் போக்கு, ஜுரம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால், செம்புப் பாத்திரத்தில் வைத்த நீர் இந்த பாக்டீரியாவை முற்றிலும் அழிப்பதாக தெரிவிக்கிறது.