நம் முன்னோர்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் ஒரு காரண காரியம் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு அறிவியல் காரணங்களை அறிந்து வைத்திருக்கிறார்கள். அப்படித்தான் பெண்களுக்கு மூக்கு குத்துவதும். மூக்கு குத்திக்கொள்வது பெண்களின் அழகை அதிகரிப்பதுடன், ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் இந்த மூக்கு குத்திக்கொள்ளும் வழக்கம் உள்ளது.
வெளிநாடுகளைப் பொறுத்தவரை மூக்கு குத்திக்கொள்வது என்பது ஃபேஷனாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மூக்கு குத்திக்கொள்வது வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், பாரம்பரியத்தை பறைசாற்றுவதாகவும் உள்ளது. தங்க ஊசி கொண்டு குத்துவதும் நவீன முறைப்படி மூக்கைத் துளையிடும் கன்ஷாட் மூலமாகவும் மூக்கு குத்தப்பட்டு விதவிதமான டிசைன்களில் மூக்குத்தி அணியும் வழக்கம் உள்ளது.
பழங்காலத்தில் எல்லாம் குறிப்பாக ராஜா காலத்திலிருந்து தங்கத்தில் பெரிய பெரிய வளையங்களாக மூக்கின் இரண்டு பக்கத்திலும் மூக்குத்தி அணிந்திருக்கிறார்கள். மூளை பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருப்பதால், நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய, மூளை செயல்படத் துணையாக இருக்கக்கூடிய பகுதிகளை சிறப்பாக செயல்பட தூண்ட மூக்கு குத்தப்படுகிறது. மூக்கு இடது பக்கம் குத்துவதால் சிந்தனா சக்தியை ஒருநிலைப்படுத்தும். மனதை அமைதிப்படுத்தும். தியானம், பிரார்த்தனையில் ஈடுபட உதவும். நாளடைவில்தான் மூக்குத்தியின் அளவுகள் சுருங்கி விட்டன. மூக்குத்தி அணிவதால் நல்ல அதிர்ஷ்டத்தையும், அன்பும் ஆதரவும் நிறைந்த துணையையும் தருவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக, பெண்கள் இடது நாசியில் துளையிட்டு மூக்குத்தி அணிவது வழக்கம். ஏனென்றால், மூக்கின் இடது பக்கம் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளுடன் தொடர்புடையதாகும். ஆயுர்வேத சாஸ்திரங்களின்படி மூக்கின் இடது பக்கம் குத்தும்போது கருப்பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுடன் தொடர்புடைய நரம்புகள் வலுவடையும் என்று கூறப்படுகிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளை குறைப்பதில் இதன் பங்கு கணிசமாக உள்ளது. மேலும் குழந்தை பிறக்கும்போது பிரசவ வலியையும் குறைக்கிறது.
மகாலட்சுமியின் அம்சமாக மூக்குத்தி கருதப்படுகிறது. எனவே, மூக்கு குத்தும் பெண்களுக்கு மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஜாதக ரீதியாகவும் சந்திரன் அல்லது புதன் ஆறாம் வீட்டில் இருந்தால், மூக்கு குத்த ராசியில் உள்ள புதன் வலுப்பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஜோதிடப்படி மூக்கு குருவின் அம்சமாகவும், மூக்கின் முனை புதனின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. மூக்கு வழியாகப் பாயும் காற்று குரு எனவும் கூறப்படுவதால் மூக்கு குத்துவது ஜோதிட ரீதியாகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
தங்கத்தில் மூக்குத்தி அணிவது குருவின் அருளை ஈர்க்கக் கூடியதாக கூறப்படுகிறது. மூக்கு குத்தவும், புதிதாக மூக்குத்தி அணியவும் புதன்கிழமை ஏற்றது என்றும் கூறப்படுகிறது. அழகையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் மூக்குத்தியை அணியலாமே.