மகிழ்ச்சியின் ரகசியம் தெரியுமா உங்களுக்கு?

Do you know the secret of happiness?
Do you know the secret of happiness?
Published on

நாம் மகிழ்ச்சியை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மகிழ்ச்சி நம்முள்ளேதான் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? நாம் மகிழ்ச்சியை எங்கும் தேட வேண்டாம். அது நம் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சின்ன நிகழ்வு இது.

வெளிநாட்டில் படித்த மகனை தனது தொழில் வாரிசாக அறிவித்தார் ஒரு தொழிலதிபர். அலுவலகத்துக்கு வந்த அவன், முதல் நாளிலிருந்தே எல்லோரிடமும் கடுமையைக் காட்டினான். கோபமாகப் பேசினான். அலுவலகச் சூழலையே கெடுத்தான். கவலைப்பட்ட அப்பா, அவனை ஓரிடத்துக்கு அனுப்பினார். "உலகிலேயே மிகச் சிறந்த ஞானி அங்கு வசிக்கிறார். மகிழ்ச்சியின் ரகசியம் என்ன என்று அவரிடம் தெரிந்துகொண்டு வா" என்று சொன்னார்.

யாரோ ஒரு துறவியிடம் சிக்கப்போகிறோம் என்று நினைத்தபடி கிளம்பினான் அந்த இளைஞன். பல நாட்கள் பயணத்துக்குப் பிறகு அந்த முகவரியை அடைந்தான். அவன் நினைத்தது போல அது ஆசிரமம் அல்ல. அரண்மனை போன்ற அழகிய மாளிகை. வாசலில் பாதுகாவலர்கள் யாருமில்லை. நிறைய பேர் உள்ளே போவதும், வருவதுமாக இருந்தார்கள். இவனும் உள்ளே போனான்.

மாளிகையின் ஒரு பக்கம் சிலர் சத்தமாக வியாபாரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு ஹாலில் நிறைய பேர் அமர்ந்து விருந்து சாப்பிட்டபடி இருந்தார்கள். இவன் சந்திக்க வந்த ஞானி ஒரு பெரிய ஹாலில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். மன்னர் போல உடை அணிந்து கம்பீரமாக இருந்த அவரைப் பார்க்க நிறைய பேர் காத்திருந்தார்கள்.

நீண்ட நேரம் காத்திருந்து அவரைச் சந்தித்து விவரத்தைச் சொன்னான். “ஓ! அவரின் மகனா நீ?அப்பா நலமாக இருக்கிறாரா? மகிழ்ச்சியின் ரகசியத்தை உனக்கு விவரிக்க நீண்ட நேரம் ஆகும். இப்போது வேலையாக இருக்கிறேன். நீ என் மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து வா" என்றார்.

எழுந்த அவன் கையில் ஒரு சிறிய கரண்டியைக் கொடுத்த அவர், அதில் சில சொட்டுகள் எண்ணெய் ஊற்றினார். "இதை கையில் பிடித்துக்கொள். மாளிகையைச் சுற்றிப் பார்க்கும்போது எண்ணெய் சிந்திவிடக்கூடாது" என்றார்.

அவன் கரண்டியில் இருக்கும் எண்ணெயைப் பார்த்தபடி மாளிகை முழுக்கத் திரிந்தான். இரண்டு மணி நேரம் கழித்து வந்தான். "என்னப்பா! பெல்ஜியம் கண்ணாடிகள். இத்தாலிய மார்பிள் தரை, பிரெஞ்சு விளக்குகள், துருக்கிய தரைவிரிப்புகள்... எல்லாம் பார்த்திருப்பாயே! மாளிகை எப்படி இருக்கிறது?" என்றார் ஞானி.

இதையும் படியுங்கள்:
மனக்கவலைகளை மாற்றும் மகத்தான 9 உணவுகள்!
Do you know the secret of happiness?

இளைஞன் தயங்கியபடி, "நான் எதையுமே பார்க்கவில்லை. என் கவனம் முழுக்க எண்ணெய் சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருந்தது” என்றான். "அப்படியென்றால் திரும்பவும் போய் ரசித்துவிட்டு வா. என் மாளிகையை ரசிக்காமல், நான் சொல்வதை நீ நம்பமாட்டாய்" என்றார் ஞானி.

அவன் மறுபடியும் போனான். எல்லாவற்றையும் பார்த்துவிட்டுப் பரவசமாக வந்தான். "ரசனையுடன் மாளிகையைச் செதுக்கி இருக்கிறீர்கள்” என ஞானியைப் பாராட்டினான். அவனுக்கு நன்றி சொன்ன ஞானி, அவன் கையிலிருந்த கரண்டியைக் கவனித்தார். "இதில் ஊற்றிய எண்ணெய் எங்கே?" என்று கேட்டார்.கரண்டி வெறுமையாக இருப்பதைக் கவனித்த இளைஞன் தலைகுனிந்தான்.

ஞானி இப்போது சொன்னார், "நமது கடமையை மறந்துவிடாமல், இந்த உலக வாழ்க்கையின் எல்லாச் சுவைகளையும் ரசிக்கப் பழக வேண்டும். மகிழ்ச்சியின் ஒற்றை ரகசியம் இதுதான்" என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com