வாசனைகளின் சிறப்பு தெரியுமா உங்களுக்கு?

திருமண சடங்கு
திருமண சடங்குhttps://www.seithipunal.com

பிறந்தது முதல் பலவிதமான வாசனைகளை அனுபவித்து வாழ்ந்து வருகிறோம். ஒருவர் உள்ளங்கையை இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டால் அவர்கள் குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் என்பார்கள். உதாரணமாக, அழுத்தமாக ஒருவர் ஒருவர் கை குலுக்கும்போது தன்னம்பிக்கை எனும் குணம் கடத்தப்படுகிறது. ஒத்த எண்ணம், குணம், மணம் கொண்டவர்களே  இறுதி வரை நட்புறவு கொள்வார்கள்.

இரு வேறு குடும்பங்களில் இருந்து வந்த ஆண் பெண் இருவரின் குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்,  திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின்  மனங்கள் ஒத்துப்போக வேண்டும்  என்பதற்காகவும் பல்வேறு திருமண சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒருவர் மாலையை ஒருவர் மாற்றிக்கொள்ளுதல், ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல், இருவர் உள்ளங்கையையும் சேர்த்து பாணி கிரகணம் என்ற பெயரில் பிடித்து வைத்தல், மெட்டி போடும் சடங்கில் ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல், அக்னி வலம் வரும்போது ஒருவர் கட்டிக் கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடிச்சு போடுதல், நலுங்கு  வைத்தல் போன்ற பல்வேறு ஸ்பரிசம் தரும் விளையாட்டுகள்  என்று இருவருடைய வாசனைகளையும் மற்றும் குணங்களையும் பரிமாறிக் கொள்ளும் சடங்குகளாக வைத்துள்ளனர். இதனால் அறிமுகமற்ற அவர்களுக்கிடையில் மணமும், குணமும், வாசனைகளும் ஒத்துபோனால் பிரச்னைகள் குறைந்து மன ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பதே இதற்குக் காரணம். இதனால்தான் சாஸ்திரங்களை மீறுவது பாதிப்பு தரும் என்கிறார்கள் பெரியவர்கள்.

மகான்களின் கால்களைப் பிடித்து விடுவது மற்றும் அவர்களுக்கு சேவைகள் செய்வதை பலரும் பாக்கியமாக கருதுவர். காரணம் மகானின் நற்குணங்கள் தங்களுக்குள் சிறிதாவது வரும் என்ற நம்பிக்கை. கோயில்களில் கடவுளின் பிரசாதம் மற்றும் அவர் அணிந்த மாலைகள், வஸ்திரம் போன்றவற்றை பலரும் பக்தியுடன் வாங்கிச் செல்வதன் அடிப்படை காரணமே கடவுளின் தெய்வீக மணத்தையும் குணத்தையும் அதன் மூலம் அனுபவித்து நன்மைகள் அடைய வேண்டும் என்பதே.

இதையும் படியுங்கள்:
முடிவை எடுக்கும் முன் முயற்சிகள் முக்கியம்! அதிகரிக்கும் விவாகரத்துகள்!
திருமண சடங்கு

ஆனால், ஒரு முக்கியமான பொருளுக்கு இந்த வாசனைகளை களையும் சக்தி உண்டு. ஆம், தண்ணீருக்கு இந்த வாசனைகளை போக்கும் சக்தி உண்டு. அதனால்தான் மகான்கள் ஒரு கமண்டலத்தில் தங்கள் அருகில் தண்ணீர் வைத்துக் கொள்கிறார்கள். தங்களிடம் வரும் எதிர்மறை சக்திகளைப் போக்கவும் தங்களை நாடி வருபவருக்கு நேர்மறை சக்தியைத் தரவும் அந்நீர் பயன்படுத்தப்படுகிறது.

திருட்டு போனபின் அவ்விடத்தில் வந்து திருடனின் வாசனையை மோப்பம் பிடிக்கும் காவல் நாய் தொடர்ந்து சென்று அவன் போகும் பாதையை கண்டுபிடிக்கலாம் . ஆனால், அவன் ஒரு நீர் நிலையை தாண்டிவிட்டால் அந்த நாயினால் அவனுடைய வாசனைகளை கண்டுபிடிக்க முடிவதில்லை என்கிறார்கள். தண்ணீரின் மகத்துவம் அறிந்தே  பெரியோர்கள் மகான்கள் அடிக்கடி குளித்துக்கொண்டே இருக்கிறார்கள் போலும்.

ஒரு துக்க நிகழ்வுக்கு சென்று வந்தால் அங்கிருந்து நாம் கொண்டு வரும் சோகமான எதிர்மறை ஆற்றல் நீங்கவே தலைக்கு தண்ணீர் ஊற்றிய பின் வீட்டுக்குள் நுழையும் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அட,  இத்தனை விஷயங்களா என வியக்காமல் முன்னோர் வகுத்த நியதிகளைத் தவிர்க்காமல் நல்ல எண்ணம், குணம் கொண்டவர்களுடன் பழகி நல்ல இறை சிந்தனையை வளர்த்து வருவதே நம் கடமை. மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமல் வாழும் எண்ணம் கொண்டவர்களுடன்  இணைந்து அந்த எண்ணம் நமக்குள்ளும் மென்மேலும் அதிகரித்து வாழ்வில் பல இன்பங்களை பெற்று மகிழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com