ஹாட் ஃப்ளாஷ் என்றால் என்ன தெரியுமா?

நாற்பது வயது கடந்த பெண்கள் கவனத்திற்கு...
ஹாட் ஃப்ளாஷ் என்றால் என்ன தெரியுமா?
Nicoleta Ionescu

பெண்களுக்கு நாற்பது வயதைக் கடந்தாலே பெரி - மெனோபஸ் அறிகுறிகளும் ஹார்மோன் மாற்றங்களும் உண்டாகத் தொடங்கும். அதில் மிக முக்கியமான நிலைதான் ஹாட் ஃப்ளாஷ் (Hot flash). இது பெண்களுக்கு உடலில் மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஹாட் ஃப்ளாஷ் என்பது உடலின் மேற்பகுதியில் திடீரென ஏற்படும் ஒரு வெப்பநிலை. முகம், கழுத்து, மற்றும் நெஞ்சு பகுதியில் அதிகமாக சிவந்துபோகும். உடல் முழுவதும் அளவுக்கு அதிகமாக வியர்த்து கொட்டும். இது ஐந்து நிமிடங்கள் வரை நீடிக்கும். பெண்களுடைய தினசரி வாழ்க்கை முறையை இது பாதிக்கும். இது ஏழு முதல் பத்து வருடங்கள் வரை நீடிக்கிறது.

ஹாட் ஃப்ளாஷ் அறிகுறிகள்:

1. உடல் திடீரென வெதுவெதுப்பாக இருப்பது போலத் தோன்றும். அதிகமாக  வியர்க்கும்.

2. வேகமான இதயத் துடிப்பு இருக்கும்.

3. மனக்கவலை, மன அழுத்தம் ஆகியவை உண்டாகும்.

4. உடல் சோர்வு, தலைவலி, மயக்கம் வருவது போன்ற உணர்வு இருக்கும்.

5. உடல் திடீரென குளிர்ச்சியாக மாறும்.

சமாளிக்கும் விதம்: அதீதமான வெப்பம் உடலில் தோன்றுவதால் பெண்கள் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் தவிப்பார்கள். ஏ.சி அறையில் இருந்தாலும் இவர்களுக்கு வியர்த்துக் கொட்டும். தூக்கத்தின் நடுவில் திடீரென விழிப்பு வரும். மறுபடி தூக்கம் வராது.

இவர்கள் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் செய்தால்தான் இந்த பிரச்னையை சமாளிக்க முடியும்.

1. பகல் முழுதும் வேலை செய்து வியர்த்த உடையுடனே இருக்காமல், மாலையில் குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக்கொள்ள வேண்டும். சௌகரியமான பருத்தி ஆடைகளை அணிவது நலம்.

2. அதிகமாக குளிர்ந்த நீர், இளநீர், எலுமிச்சை ஜூஸ் அருந்த வேண்டும்.

3. நீர்ச்சத்து அதிகம் கொண்ட பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம் சாப்பிடலாம்.

4. பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது மிகவும் அவசியம். அது பெண்களின் உடல்நிலையை மேலும் பாதிக்கும். வீடோ, அலுவலக வேலையோ எதையும் கடைசி நிமிடத்தில் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல் குறித்த நேரத்தில் செய்யப் பழக வேண்டும்.

5. சமையல் அறையில் அதிக நேரம் இருக்காமல் விரைவில் வேலையை முடித்துக்கொண்டு வெளியே வந்து காற்றாட அமர வேண்டும். வீட்டில் உள்ளோர் வேலைகளில் கண்டிப்பாக உதவ வேண்டும்.

6. பொதுவாக, ஹாட் ஃப்ளாஷ் காலை நேரத்தில் அதிகமாக இருக்கும். முன்கூட்டியே செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிடுதல் நலம். மறுநாள் காலையில் என்ன சமைக்க வேண்டும் என்பதை முதல் நாளே முடிவு செய்து அதற்குரிய ஏற்பாடுகளை செய்துவைத்து விட்டால் காலையில் டென்ஷன் இருக்காது. அதேபோல அலுவலக வேலையிலும் திட்டமிடல் அவசியம். இதனால் அடிக்கடி வரும் ஹாட் ஃப்ளாஷின் இடைவெளியைக் குறைக்கலாம்.

7. எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் மனதை லேசாக வைத்துக்கொள்வது அவசியம். மனதிற்குப் பிடித்த வேலைகளில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com