மகிழ்ச்சி என்பது திடீரென வந்துவிடக் கூடிய விஷயமல்ல. அதற்கு நிறைய பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தொடர் முயற்சிகள் செய்ய வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிகள் என்னவென்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
குடும்பத்தினரோடு நிறைய நேரம் செலவிடுங்கள்: சமூக வலைதளங்கள் நமக்கு போலி மகிழ்ச்சியைத்தான் தரும். எனவே, அதிக நேரம் சமூக வலைதளங்களோடு இல்லாமல், உண்மையான தொடர்புகளோடு, அதாவது நாம் தினமும் சந்திக்கும் நபர்களோடு, நண்பர்களோடு, குடும்பத்தினர்களோடு தொடர்பு கொள்வது உண்மையான மகிழ்ச்சியைத் தரும்.
கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்: வாழ்க்கையில் எப்பொழுதும் கற்றுக்கொண்டே இருங்கள். ஏனெனில். வாழ்க்கை உங்களுக்கு;ஃப் கற்றுக் கொடுப்பதை நிறுத்தாது. புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதால் நம் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். வேண்டாதவற்றை எண்ணி மனம் கலங்காது இருக்கப் பழகுங்கள்.
அக்கறையை வளர்த்துக் கொள்ளுங்கள்: நம் மீதும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மீதும் அக்கறை செலுத்துவது நம்மை மகிழ்ச்சியுடன் இருக்க வைக்கும். நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்ப நமது அக்கறையை, அன்பை பிறர் மீது வளர்த்துக் கொண்டால் மகிழ்ச்சிக்கு என்றும் குறைவிருக்காது.
அடிக்கடி மனம் விட்டு சிரியுங்கள்: வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பதை மறக்காதீர்கள். அதேபோல், பிறரின் தவறுகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நடந்து முடிந்ததை எண்ணி வருத்தப்படாதீர்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று நினையுங்கள். நல்ல நண்பர்களை சம்பாதிங்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள்.
வீட்டில் உள்ள குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். கள்ளம் கபடமற்ற அவர்களின் பேச்சு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எப்பொழுதும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள். தடைகளை உடைத்தெறிந்து மேலே வாருங்கள். அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தியானம் செய்யப் பழகுங்கள்.
இயற்கையோடு ஒன்றி வாழுங்கள். பறவைகளின் கிரீச் ஒலியும், மரங்களின் சலசலப்பும், இயற்கையின் வண்ணங்களையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மனநிறைவைத் தரும் செயல்களை தவறாமல் செய்யுங்கள். யாரிடமும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டாமல் எல்லோரையும் கொண்டாடக் கற்றுக் கொள்ளுங்கள். நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து ரசிக்கக் கற்றுக்கொண்டால் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. எதன் மீதும் அன்பும் அக்கறையும் இருந்தால் மனதில் மகிழ்ச்சிக்கு என்றும் குறைவேயிருக்காது.