கடந்த காலத்தை நினைத்து முதியவர்கள் கவலைப்படும் விஷயங்கள் எவை தெரியுமா?

Do you know what old people worry about the past?
Do you know what old people worry about the past?https://companionsforseniors.com

னிதன் வளர வளர அவனுடைய வயது அதிகரிப்பதைப் போல, மனப் பக்குவமும் அதிகரிக்கிறது. சிலருக்கு அது வாய்க்கப் பெறுவதில்லை. மிகவும் வயதான பின்பே அது கிடைக்கிறது. ‘இளம் வயது அல்லது நடுத்தர வயதில் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தால் வாழ்க்கை இன்னும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும்’ என்று வயதான காலத்தில் சிலர் வருத்தப்படுவார்கள். அவை எவை என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. நெருங்கிய உறவு மேலாண்மை: மனிதர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கலே சக மனிதனுடன், குறிப்பாக உறவுகளுடன் சிக்கல் இல்லாமல் சுமுகமாகப் பழகுவதுதான். ஒரு குடும்ப உறுப்பினர்களுக்குள் கணவன், மனைவி இடையே கூட. ஒரு நல்ல உறவு நிலைத்திருக்க வேண்டுமானால் நிறைய விட்டுக்கொடுத்தல்கள் இருக்க வேண்டும். சில சமயங்களில் சின்னச் சின்ன தியாகங்களையும் செய்ய வேண்டி வரும். தனது துணையின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி, கூட அமர்ந்து ஆலோசித்து பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். ஆனால், இந்த உண்மையை சிலர் மிகவும் வயது முதிர்ந்த காலகட்டத்தில்தான் உணர்கிறார்கள். அதற்குள் காலம் கடந்து விடுகிறது.

2. தோற்றத்தை விட நடத்தையே முக்கியம்: இளம் வயதில் பிறர் கண்களுக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிய வேண்டும் என்பதற்காக மெனக்கெடல்கள் செய்து அதற்கு ஏற்ற உடை உடுத்துவது அதற்கான மேக்கப் என்று ஏகப்பட்ட மெனக்கெடல்கள் இருக்கும். ஆனால், வயதான பின்பே உருவத்தை விட ஒருவரது தன்னம்பிக்கை, ஒற்றுமை உணர்ச்சி, மேலாண்மை முதலியவை முக்கியம் என்று புரியவரும். உறவுகளிடம் பொறுமை, கருணை, நேர்மை, பெருந்தன்மையுடன் நடத்தல் மற்றும் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பது போன்ற குணங்களே ஒருவருடைய நடத்தையை அழகு செய்கின்றன.

3. பணத்தால் சந்தோஷத்தையும் திருப்தியையும் விலைக்கு வாங்க முடியாது: இளம் வயதில் ஏகப்பட்ட பணம் சம்பாதித்தால்தான் மனதுக்கு மகிழ்ச்சியும் வாழ்க்கையில் திருப்தியும் உண்டாகும் என்று தவறாக நினைக்கின்றனர் மனிதர்கள். அதற்காக தங்களது முழு உழைப்பையும் நேரத்தையும் செலவிடுகின்றனர். ஆனால், அதற்காக பலர் கொடுக்கும் விலை தன்னுடைய ஆரோக்கியம், குடும்ப உறவுகள், நட்பு முதலியவை.

4. பிடித்தவருடன் நேரம் செலவிடுதல்: மனதுக்குப் பிடித்தவருடன் செலவிடும் நேரம்தான் விலைமதிப்பற்றது என்பதை வயதான பின்பே பலரும் உணர்கிறார்கள். காசு பணம் தேடி ஓடி ஓடி, பிடித்தவர்களை ஒதுக்கி வைத்து விட்டு நிறைய பணம் பொருள், வசதிகள் சேர்த்து வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தால் மனதுக்கு பிடித்தவர் இல்லாமலே கூட இருக்கலாம். அல்லது அந்தக் காலகட்டம் வாய்க்காமலே கூட போகலாம்.

5. ஆரோக்கியத்தை அலட்சியம் செய்வது: இளமையில் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற தைரியம் இருக்கும். ஆனால், வயதாக வயதாக உடல் தான் சொன்னபடி கேட்காமல் நோய்களையும் பலவித பிரச்னைகளையும் கொண்டு வந்து விடுகிறது. முதுமை காலத்தில் ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு நோயின் பிடியில் சிக்கும்போதுதான் தெரிகிறது ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்று. அது வாழ்க்கையின் ஆணி வேர் என்று புரிகிறது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் தேவையான உடற்பயிற்சிகள் செய்யாமல் ஒழுங்கற்ற வாழ்க்கை வாழ்ந்து விட்டு வயதான பின்பு புலம்பியோ வருத்தப்பட்டோ பயன் என்ன?

6. பேசுவதைப் போல கேட்பதும் மிகவும் முக்கியம்: பிறர் பேசுவதை காது கொடுத்து கேட்காமல் இடையில் குறுக்கிட்டு பேசுவது பெரும்பாலானோரின் பழக்கமாக இருக்கிறது. குறிப்பாக இளம் வயதினர் பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்பதே இல்லை. பெரியவர்கள் ஏதாவது சொல்ல வரும்போது பொறுமையாக கவனித்திருந்தால் அவர்களின் அனுபவம் இவர்களுக்கு உதவி இருக்கும். ஆனால், கேட்காமல் போனதால் பலவித சிக்கலுக்கு ஆளாகி தானாக தெரிந்துகொண்டே அந்த அனுபவத்தை அடைகிறார்கள். 'அவங்க சொன்னத அப்போதே கேட்டிருக்கலாமே? இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டேனே’ என்று வயதான காலத்தில் மிகவும் லேட்டாக சிலருக்கு ஞானோதயம் பிறக்கும்.

7. கருணையும் அனுதாபமும் மிகவும் முக்கியம்: எப்போதும் மனிதர்களை மதிக்காமல் எடுத்தெறிந்து பேசுவதும் தன்னுடைய உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதும் இளமையின் குணங்களாகத் திகழ்கின்றன. பிறர் மேல் குற்றம் காணும் அந்த மனது அவர்களிடம் இருக்கும் நல்ல குணத்தை காண முயல்வது இல்லை. அதேசமயத்தில் அவர்கள் மேல் கருணையோ அனுதாபமோ ஏற்படாமல் போவதும் நிகழ்கிறது. இளம் வயதில் இருந்து சக மனிதர்களுடன் அன்பாகவும் கருணையோடு நடந்து கொண்டால் அது வயதான காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும். சிறிய வயதில் தான் கொடுத்த அன்பும் பாசமும் பல மடங்காக திரும்பி வரும்.

இதையும் படியுங்கள்:
இந்த ஒரு இலை இருந்தால் போதும்; கால் வலி, மூட்டு வலி பறந்து போகும்!
Do you know what old people worry about the past?

8. தவறுகளை ஒப்புக்கொள்ளும் குணம்: தெரிந்தோ தெரியாமலோ தவறுகளை செய்து விட்டால் அதை ஒப்புக்கொள்ளும் குணம் இளம் வயதில் இருப்பதில்லை. வீம்பு, பிடிவாதத்தினால் இல்லை என்றே மறுப்பதும் நிகழ்கிறது. இதனால் நிறைய உறவுகள் உடைபட்டு விலகிப் போகக்கூட நேர்ந்திருக்கலாம்.

9. பொறுமையும் ஆழ்ந்த சிந்தனையும்: அதிக அளவு ஈகோ காரணமாக பொறுமை இல்லாமல் அலட்சியமாக பிறர் மனம் நோகப் பேசுவதும், மதிக்காமல் இருக்கும் குணமும் இளம் வயதில் இருந்திருக்கும். ஆழ்ந்து சிந்திக்கும் பக்குவம் இல்லாததால் அதைப் பற்றிய குற்ற உணர்வும் இருந்திருக்காது. வயதான பின்பு இப்படியெல்லாம் நடந்திருக்காமல் பொறுமையும் அன்பும் நிதானத்தையும் கடைப்பிடித்து இருக்கலாம் என்று சிலருக்குத் தோன்றக்கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com