எந்த வகை ஃபைபர் ஆடைகளை வாங்க வேண்டும் தெரியுமா?

எந்த வகை  ஃபைபர் ஆடைகளை வாங்க வேண்டும் தெரியுமா?

தேனும் ஒரு விஷயம் ட்ரெண்டாகி விட்டால், நாமும் அதை பின்தொடர்ந்து நம்முடைய பங்களிப்பைத் தருவோம். நாம் அவ்வாறு பின்பற்றும் விஷயம் உண்மையாகவே அத்தனை பயனுள்ளதாக இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்வதும் அவசியமே. இன்னும் சிலருக்கு, நாம் எதைப் பின்பற்றுகிறோம் என்று தெரியாமலேயே தொடர்ந்து செய்கின்றனர், மற்றவர்கள் நம்மை பற்றி தவறாக நினைத்து விட கூடாது  என்பதற்காக. அப்படியொரு விஷயம் சில வருடங்களாக பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் நிறுவனங்ளிலும் மிகவும் பிரபலமாக உலா வந்துகொண்டிருக்கிறது. ‘சஸ்டேய்னபிலிட்டி’ [sustainability] என்பது தான் அந்த சமீபத்திய புகழ்வாய்ந்த ‘ட்ரெண்டிங்’ விஷயம், குறிப்பாக துணி மற்றும் ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் [textiles and apparel manufacturing industry].

நிலைத்தன்மை – சஸ்டேய்னபிலிட்டி [sustainability] என்னும் சொல்லின் தமிழாக்கம். இந்தப் புவியில் உள்ள புதுப்பிக்கத்தக்க வளங்களை நிகழ்காலத்தில் இருக்கும் நாம், எதிர்கால சந்ததியினருக்கு இடையூறு விளைவிக்காமல் அவற்றை பயன்படுத்தும் முறையே நிலைத்தன்மை எனப்படும். இதனால், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதாரம் போன்றவை சம நிலையில் காக்கப்படும். கடந்த சில வருடங்களாக நம் பூமி, சுற்றுச்சுழல் மாசுபாடு மற்றும் இயற்கை வளங்களின் சேதம் என பல இன்னல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் தான் நிலைத்தன்மை என்னும் விஷயம் இப்பொழுது மிகவும் பரவலாக பேசப்பட்டும், நடைமுறையில் செயல்படுத்தப்பட்டும் வருகிறது.

மேக்கப் சாதனங்கள், பெட்ரோல்-டீசல், மருந்து போன்ற பொருட்களைப் போல், துணி மற்றும் ஆடை தயாரிப்பதிலும் பல வித இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பெரும்பாலும் புதுப்பிக்க இயலாத வளங்களாகிய எரிபொருள், கனிமங்கள், நிலக்கரி போன்ற வளங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. நீர் மற்றும் காற்றின் உபயோகமும் இந்தத் துறையில் அதிகம் இருந்தாலும், அவையும் பெரிதளவில் மாசடைந்து பாதிப்படைந்து இருக்கின்றன. நாம் வெறும் வாடிக்கையாளர்கள் தானே, நம்மால் இந்தத் துறையில் ‘சஸ்டேய்னபிலிட்டி’ என்னும் விஷயத்தை எவ்வாறு நிலவ முடியும் என்று கேள்விக்கு விடை இதோ ;

நாம் வாங்கும் உடைகளை அவற்றின் ஃபைபர் தன்மையை பார்த்து வாங்கினாலே போதுமானது. பொதுவாக நமக்குத் தெரிந்த  ஃபைபர் வகைகள் காட்டன், பாலியஸ்டர், நைலான், பட்டு போன்றவை மட்டும் தான். இதைத் தாண்டி பல வித ஃபைபர்களாலும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. மேற்சொன்ன ஃபைபர் வகைகள் உற்பத்தியாகும் முறையில்  தான் பிரச்சனை. அவற்றை தயாரிக்க அதிக அளவு நீர், மின்சாரம், செயற்கை இரசாயனங்கள் தேவைப்படுகின்றன. இந்த வளங்களை உற்பத்தியாளர்கள் எத்தனை பேர் மறுசுழற்சி செய்கின்றனர் என்பது நமக்கு தெரியாது.

நாம் வழக்கமாக வாங்கும் ஃபைபர் வகை ஆடைகளை முடிந்த அளவிற்கு தவிர்த்து விட வேண்டும். ஆர்கானிக் காட்டன், சணல், லினென், மூங்கில் போன்ற ஃபைபர்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை வாங்குவது சிறந்தது. இந்த வகை ஆடைகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன இந்தியாவில், என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட காட்டன் மற்றும் பாலியஸ்டர் வகை உடைகளும் உள்ளன. இந்த ஃபைபர் வகைகளைக் கொண்ட ஆடைகளை உற்பத்தி செய்ய எல்லா வித வளங்களும் மிகவும் குறைந்த அளவில் உபயோகப் படுத்தப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. காரணம், இயற்கை வளங்கள் நிறைந்த இடங்களில் இந்தியாவும் ஒன்று என்பதால்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் காரணமே தெரியாமல், ஒன்றும் புரியாமல், யாரோ ஒருவர் ஆரம்பித்து வைத்த பாடலையோ நடனத்தையோ பின்பற்றுவதில் காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும்,  நம் வருங்கால சந்ததியினருக்கும், நம் மனித இனத்தை இத்தனை வருடங்களாக வாழ வைத்து, வளங்களை அள்ளித்தந்து வழங்கிக்கொண்டிருக்கும் இந்த புவிக்காக இந்த ‘சஸ்டேய்னபிலிட்டி’ ட்ரெண்டையும் நாம் வாங்கவிருக்கும் உடையிலிருந்து தொடங்கலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com