பொதுவாக, குளிக்கும்போது பச்சைத் தண்ணீரில் குளித்தால்தான் நல்லது. தலைக்கு குளிக்கும்போதும் சுடு தண்ணீர் உபயோகிக்கக் கூடாது என்கிறது ஆயுர்வேதம். ஆனால், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது நிச்சயமாக சுடுநீரில்தான் குளிக்க வேண்டும் என்றும் ஆயுர்வேதம் சொல்கிறது. அதற்கான காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தலைக்குத் தேய்க்க எந்த எண்ணெய் சிறந்தது?
ஆயுர்வேதம் மனிதர்களின் உடலை வாதம், பித்தம், கபம் என மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. ஒரு நபரின் சருமம் மற்றும் உடல் வகையைப் பொறுத்து தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம்.
நல்லெண்ணெய்: வாத உடம்பு கொண்டவர்களுக்கு நல்லெண்ணெய் சிறந்தது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் வறண்ட சருமத்திற்கு நல்லது.
தேங்காய் எண்ணெய்: பித்த உடம்புக்காரர்களுக்கு ஏற்றது. இது குளிர்ச்சி ஈரப்பதம் மற்றும் உணர்திறனை சருமத்துக்கு வழங்குகிறது. வெப்பமான கால நிலைக்கு ஏற்றது இது.
கடுகு எண்ணெய்: கப உடல் வாகு கொண்டவர்களுக்கு கடுகு எண்ணெய் ஏற்றது.
ஆலிவ் எண்ணெய்: இதை அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தலாம். குறிப்பாக, பித்த உடம்புக்காரர்களுக்கு மிகவும் ஏற்றது.
தீபாவளி பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் நடைமுறையில் இருக்கிறது. நல்லெண்ணெயைக் காய்ச்சி சிறிதளவு சீரகம், மிளகு, வெந்தயம், ஒரு பல் பூண்டு போட்டு இறக்க வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் குளிக்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்த பின் சுடுநீரில் தலைக்குக் குளிப்பதால் ஏற்படும் பயன்கள்:
ஆயுர்வேதத்தில் எண்ணெய்க் குளியலுக்கு வெந்நீர் பயன்படுத்துவது நீண்ட கால பாரம்பரிய நடைமுறை ஆகும். இது பல நூற்றாண்டுகளாக ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று கருதப்படுகிறது. சூடான நீர், எண்ணெய்யை உடல் திறம்பட உறிஞ்சுவதற்கு உதவுகிறது. சூடான நீரை உடலில் ஊற்றும்போது அது சருமத்தின் துளைகளைத் திறக்கிறது. எண்ணெய் நன்றாக உள்ளே ஊடுருவ அனுமதிக்கிறது.
சூடான நீர் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும், பயன்படுத்தப்படும் எண்ணெய்யின் நன்மைகளை உடலுக்கு அப்படியே வழங்குகிறது. வெந்நீர் குளியல் நிதானமாகவும் உடலை ஓய்வாகவும் வைக்கும். மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தைப் போக்க உதவும். ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது என்கிறது ஆயுர்வேதம்.
சுடுநீர் உடல் நச்சுக்களை வெளியிடுவதற்கு துணை புரிகிறது. வியர்வையின் வழியாக நச்சுக்களை உடல் வெளியேற்றுகிறது. இந்த செயல்முறை நச்சுத்தன்மையை அகற்றுகிறது.சுடுநீர், உடலின் தசைகள் மற்றும் மூட்டுகளைத் தளர்த்துகிறது. எண்ணெய்க் குளியல் உடல் வலிகள் மற்றும் அசதியைப் போக்க உதவுகிறது. எண்ணெய்யுடன் பயன்படுத்தப்படும் சூடான நீர் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் சருமத்தை ஹைட்ரேட் செய்யவும் உதவுகிறது. சருமத்தை வறட்சி அடைய செய்யாமல் மினுமினுப்புடனும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது.
தேய்த்துக் கொண்ட எண்ணெய்யின் நறுமணத்தை உடல் உறிஞ்ச சுடுநீர் உதவுகிறது. எனவே, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சுடு தண்ணீரை உபயோகப்படுத்துவது உடல், மனம் மற்றும் சமநிலைக்கு மிகவும் உதவும்.