திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

Newlyweds
Newlyweds
Published on

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் மிகவும் முக்கியமானது. அந்த சமயத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துச் சென்றால், திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

கருத்து வேறுபாடு: திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகள் ஆரம்பத்தில் மிகவும் அன்னியோன்யமாகவும், சலிக்காமல் ஒருவர் மேல் மற்றொருவர் அன்பைப் பொழிபவர்களாகவும் இருப்பார்கள். நாளாக ஆக தம்பதிகளுக்குள் யதார்த்தம் புரிய ஆரம்பிக்கும். அப்பொழுது ஏற்படும் கருத்து வேறுபாடுகளையும், விவாதங்களையும், சண்டைகளையும் வைத்து ஒருவருக்கொருவர் மதிப்பிட்டுக் கொள்ளவோ, சண்டையை வைத்து எதையும் முடிவு செய்யவோ கூடாது. புதிதாக ஒரு பந்தத்தில் இணையும்பொழுது இருவருமே புதிய சவால்களை எதிர்கொள்ளவேண்டி வரும்.  தயங்குவதும் பயப்படுவதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

குறை நிறைகளோடு ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்: எல்லாவற்றையும் தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள நினைப்பதும், முயல்வதும் பிரச்னையை உண்டுபண்ணும். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் அவர்களின் நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். இல்லையெனில் சண்டைகள் ஏற்படும். ஒருவரின் விருப்பம் மற்றவரின் விருப்பமாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வாழ்க்கை பயணத்தில் சண்டை இல்லாமல் சுமுகமாக பயணிக்க அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப் பக்குவம் வேண்டும்.

எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை உண்டு பண்ணும்: இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பே ஆணும் பெண்ணும் பேசிப் பழகத் தொடங்கி விடுகின்றார்கள். இதனால் திருமணத்திற்குப் பிறகு தாங்கள் எதுவும் சொல்லாமலே ஒருவர் மற்றவரை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது. அதிக எதிர்பார்ப்பு நிராசையில் கொண்டு விடும். ஏமாற்றத்தை அளிக்கும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அவகாசம் தேவை: காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், பெற்றவர்கள் பார்த்து நடத்தி  வைத்த திருமணமானாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள அவகாசம் தேவை. காதலிக்கும்போது இருக்கும் மனநிலை திருமணம் ஆனதும் இருக்காது. ஒரே கூரையின் கீழ் வாழத் தொடங்கும்பொழுது ஆரம்பத்தில் சிறந்த நடத்தையில் இருப்பதும், போகப்போக வாழ்க்கையை நடத்தத் தொடங்கும்பொழுது போராட்டம் தொடங்க ஆரம்பிக்கும். இதற்கு முதல் சில மாதங்கள் உறவின் அடித்தளத்தை பலப்படுத்துவதிலும், உறுதிப்படுத்துவதிலும் நிறைய மெனக்கிட வேண்டும். உறவில் மனக் கசப்போ, விரிசலோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பாண்டவர்களுக்கு நாரதர் கூறிய திலோத்தமாவின் கதை!
Newlyweds

சலிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுதல்: ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் அதிக ஈர்ப்பு இருப்பதும் போகப்போக சலிப்பு ஏற்படுவதும் இயல்பான ஒன்று. அதற்காக அப்படியே விட்டால் வருடங்கள் செல்லச் செல்ல இருவருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகிவிடும். எனவே, ஒவ்வொரு நாளையும் ரொமான்டிக்காக அணுகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றாகக் கைகோர்த்து நடந்து செல்வது, ஒன்றாக சேர்ந்தமர்ந்து பேசிக்கொண்டே உணவு சாப்பிடுவது, வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது, வார இறுதியில் உல்லாசப் பயணம் என்று இருவருக்குமான பிணைப்பை அதிகப்படுத்திக் கொண்டால் சலிப்பு என்பது ஏற்படாது.

வேலை பளு: எவ்வளவு வேலை பளுவுக்கு இடையிலும் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேசிக்கொள்வதும், துணையுடன் நேரத்தை செலவிடுவதும் கட்டாயமாக இருக்க வேண்டும். இருவரும் இணையும் தரமான நேரத்திற்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உறவு வலுவாக இருக்கும்.

துணைக்கான ஸ்பெஷல் இடத்தை ஒதுக்குதல்: நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நீங்கள் உங்கள் வாழ்க்கை துணைக்கு உங்கள் வாழ்வில் எவ்வளவு ஸ்பெஷலான இடத்தை கொடுத்திருக்கிறீர்கள் என்பதை உணர்த்தத் தவறக் கூடாது. எப்பொழுதும் அவர் உங்களுக்கு மிகவும் ஸ்பெஷலானவர், முக்கியமானவர் என்பதை சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் புரியவைத்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தாக போகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com