கடிகாரம் என்பது நேரத்தைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவி. இதனை பெரும்பாலானவர்கள் இடது கையில்தான் அணிகிறோம். ஏன் வலது கையில் அணிவதில்லை? என்றாவது இதை யோசித்தது உண்டா? ‘எந்தக் கையில் கட்டினால் என்ன சார்? எங்க கட்டினாலும் ஒரே நேரம்தானே காட்டும்’ என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஆனால், ஏன் அப்படி கட்டுகிறோம் என்று யோசித்தால் நமக்கு அப்படி வலது கையில் கட்டுவது சௌகரியமாக இருக்கிறது என்பதுதான் காரணம்.
வலது கை பழக்கம் உள்ளவர்கள் இடது கையிலும், இடது கை பழக்கம் உள்ளவர்கள் வலது கையிலும் கடிகாரத்தைக் கட்டுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக, நாம் வலது கையை அதிகம் பயன்படுத்தி வேலைகள் செய்வோம். அதனால் வலது கையில் கட்டினால் கீழே விழுவதற்கோ, எங்காவது இடிபடுவதற்கோ, உடைவதற்கோ வாய்ப்பு அதிகம். இடது கையை நாம் வேலை செய்ய அதிகம் உபயோகிப்பதில்லை. எனவே, இடது கையில் கட்டினால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து கட்டுகிறோம்.
முன்பெல்லாம் கடிகாரத்தை யாரும் கையில் கட்டியதில்லை. சட்டை, பேண்ட் பாக்கெட்டில் அல்லது இடுப்பில் தொங்க விட்டிருப்பார்கள். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் கல்லூரி பேராசிரியை இடது கையில் உள்பக்கம் அணிந்திருப்பார். வெளியே வாட்சின் பட்டை மட்டுமே தெரியும். மணி பார்க்க உள்ளங்கை பக்கத்தை தூக்கி பார்ப்பார். அதனால் ஈர்க்கப்பட்டு சில காலம் நானும் என் சகோதரியும் அப்படியே கட்டினோம். ஆனால், வசதியாக இல்லை என்று பழைய படியே வெளிப்புறம் கட்டத் தொடங்கினோம்.
இப்போதெல்லாம் அழகுக்குதான் விதவிதமான வடிவில் வாட்ச் கட்டுகிறார்கள். மணி பார்க்கத்தான் நம்முடன் எப்போதும் செல்போன் இருக்கிறதே. அதுவும் டிஜிட்டல் கை கடிகாரம் வந்ததும் நாம் எவ்வளவு நடக்கிறோம், நம் இதயத்துடிப்பு எவ்வளவு, எத்தனை கலோரிகள் எரிக்கிறோம் என்பதையும் இதில் அறிந்து கொள்ள வசதியாக உள்ளது.
முன் காலத்தில் சூரியனின் ஒளியினையும் அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இரவில் சூரியனின் ஒளி கிடைக்காதபோது ஒரே சீராக எரியும் திரியினைக் கொண்டு இரவில் காலம் கணிக்கப்பட்டது. மணலை சிறு ஓட்டையில் வடித்தும் காலத்தை அளந்தார்கள்.
அதேபோல் தண்ணீரை பயன்படுத்தி நேரத்தை அறிந்தனர் நமது முன்னோர்கள். அதாவது, தண்ணீர் ஒவ்வொரு துளியாக கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டு திரட்டப்பட்ட நீரின் அளவைக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. பிறகு நவீன கடிகாரங்கள் புழக்கத்திற்கு வந்தன. நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரங்களை உருவாக்கினர். அதன் பிறகு பெண்டுலம் கடிகாரங்கள் பழக்கத்துக்கு வந்தது. தற்போது பல கம்பெனிகள் (டைட்டான், சிட்டிசன்) போன்ற கம்பெனிகள் உலக தரத்திற்கு கடிகாரங்களை தயாரித்து வருகின்றன.
எது எப்படியோ, இப்போதெல்லாம் அழகுக்காக மட்டுமே விதவிதமான கை கடிகாரங்கள் கட்டப்படுகின்றன. நாள் முழுக்க நம்முடன் இருக்கும் கைபேசியில்தான் நேரத்தை பார்க்கிறோம். சமீபத்தில் வெளியில் சென்றபோது கைபேசி எடுத்துச் செல்ல மறந்து (வாட்ச் கட்டும் பழக்கம் இல்லை) சென்றபோது வழியில் அருகில் இருந்த கையில் வாட்ச் அணிந்திருந்த பெண்மணியிடம் நேரம் கேட்க, அவர் அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே, ‘சாரி இந்த வாட்ச் ஓடாது! சும்மா அழகுக்காக கட்டி இருக்கிறேன்’ என்றாரே பார்க்கலாம்.