தலைவாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டு உணவு அருந்துவது சமூகத்தில் பெரிய மரியாதையாகக் கருதப்படுகிறது. விசேஷங்களிலும், வீடுகளிலும் கூட எத்தனையோ முறை அதுபோன்று தலைவாழை இலையில் உணவு அருந்தி இருப்போம். என்றாவது ஒருநாள் வாழை இலையின் நடுவில் ஏன் கோடு இருக்கிறது என்பதைப் பற்றி யோசித்து இருப்போமா? இதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது.
ஆதிகாலத்தில் வாழை இலையின் நடுவில் தற்போது இருப்பது போல் கோடு இல்லையாம். இராமாயண காலத்துக்குப் பின்புதான் வாழை இலையில் கோடு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு சமயம் ஸ்ரீராமபிரான் தலைவாழை இலை போட்டு உணவருந்திக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கே அனுமன் வந்திருக்கிறார். அனுமனைக் கண்ட ஸ்ரீராமன், “நீயும் என்னோடு இந்த இலையிலேயே அமர்ந்து உணவருந்து” என்று கூறி இருக்கிறார்.
அதைக்கேட்ட அனுமன், ஸ்ரீராமனின் பேச்சை தட்டிக்கழிக்க மனமின்றி அந்த தலைவாழை இலையின் நடுவில் தனது பலம் பொருந்திய விரல் அழுந்த ஒரு கோடு போட்டாராம். அப்படி கோடு போடப்பட்ட தலைவாழை இலையின் இரண்டு பிரிவுகளில் ஸ்ரீராமன் அமர்ந்த இருந்த பக்கத்தில் எப்போதும் மனிதர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவையும், அதற்கு எதிரே அனுமன் அமர்ந்திருந்த மறு பக்கத்தில் குரங்குகள் விரும்பி சாப்பிடும் காய்கறிகளும் பழங்களும் பரிமாறப்பட்டன.
இன்றும் கூட விசேஷங்களில் நடைபெறும் விருந்துகளில் தலைவாழை இலையின் நாம் அமர்ந்திருக்கும் பக்கத்தில்தான் உணவு பரிமாறப்படுகிறது. அதற்கு எதிர்ப்புறம் காய்கறி கூட்டு, பொரியல் போன்றவை பரிமாறப்படுவதைக் காணலாம்.