
நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தும் சூழல் உருவாகும். அப்படி அடுத்தடுத்து உருவாக்கப்படும் ஹோட்டல்கள், மால்கள், தியேட்டர்களில் மக்கள் நேரக்கணக்கில் இருப்பதால் அங்கேயே கழிப்பறை வசதி வழங்கப்படும். இது அனைத்து இடங்களிலுமே இருக்கும்.
அப்படி நீங்கள் சென்ற அந்த கழிப்பறைகளில் இந்த வினோத விஷயத்தை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பொதுவாக கதவு என்பது வெளியில் நடப்பது உள்ளே தெரியாமல் இருப்பதற்காகதான். அதனால் மேல் சுவர் முதல் கீழே தரை வரை கதவு இருக்கும். ஆனால் மால், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள கழிப்பறைகளில் மட்டுமே கீழே சில இடைவெளி விட்டு தான் கதவுகள் அமைக்கப்பட்டிருக்கும். இது மிகவும் சாதரண விஷயம், அடிக்கடி பார்க்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும், அது ஏன் என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியாது.
அதிக மக்கள், அதாவது கூட்டம் அதிகரிக்கும் இடங்களில் உள்ள கழிப்பறைகளை அடிக்கடி சுத்தம் செய்யும் சூழல் இருக்கும். இதனால் இந்த இடைவெளி சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு ஏதுவாக இருக்கும். தண்ணீர் ஊற்றினால் எளிதில் வெளியேறிவிடும். ஈஸியாக மாப், போட்டு அந்த இடத்தை சுத்தம் செய்யமுடியும். அதிக நேரம் எடுக்காது.
அதே போல் பொது கழிப்பறை என்பதால் யார் யாரோ வந்து பயன்படுத்துவார்கள். அவர்கள் யார் என்று கூட நமக்கு தெரிந்திருக்காது. இந்த சூழலில் அவர்கள் மயக்கமடைந்துவிட்டாலோ, ஏதேனும் கழிப்பறையில் பிரச்சனைகளை சந்தித்து மாட்டி கொண்டாலோ, இந்த இடைவெளி மூலம் கண்டறிந்து பிரச்சனைகளை சரி செய்யமுடியும்.
அதே போல் சில நயவஞ்சக செயலில் ஈடுபடுபவர்கள், இது போன்ற பொது கழிப்பறைகளை தவறாக பயன்படுத்துவார்கள். புகைபிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட பல தவறான செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த இடைவெளி மூலம் அவர்களின் தவறுகளை கண்டறிந்து எச்சரிக்கலாம்.
மேலும் ஒரு கதவு தயாரிப்பதற்கான விலை அதிகமே. அது தரையோடு தரை இருப்பதால் அடிக்கடி தண்ணீர் பட்டு குறைந்த வருடங்களிலேயே சேதமடைந்துவிடும். இந்த பிரச்னையும் இதன் மூலம் தீர்ந்துவிடும். பொது கழிப்பறைகளில் காற்றோட்ட பிரச்சனைகள் இருக்கும். இந்த இடைவெளி மூலம் அந்த பிரச்னையையும் சரி செய்துவிடலாம்.
இப்படி பல காரணங்களுக்காக தான் கதவின் கீழ் இடைவெளி வைக்கப்படுகிறது.