குளிர்காலத்தில் ஏன் அவசியம் நெய் சாப்பிட வேண்டும் தெரியுமா?

நெய்
நெய்

பொதுவாக. குளிர்காலத்தில் அதிகமாக பசிக்கும். உடலில் ஈரப்பதம் இல்லாததால் சரும வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படும். மேலும், குளிருக்கு இதமாக, சூடான வறுத்த உணவுகளை மனம் நாடும். பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை உண்ண ஆசைப்படுவோம். ஆனால், அவற்றில் உள்ள கொலஸ்ட்ரால் உடலுக்கு நல்லது அல்ல. கொழுப்புச் சத்தைக் கூட்டி, உடலுக்கு எல்லாவித தீமைகளுக்கும் வந்து சேர வழிவகுக்கும்.

உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு: குளிர்காலத்தில் உடலுக்கு கொழுப்பு சத்து அவசியம். அது இருந்தால்தான் நமது உடல் குளிரைத் தாங்கும் சக்தி பெறும். ஆனால், அந்தக் கொழுப்பு நல்ல கொழுப்பாக, உடலுக்கு நன்மை சேர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும். அது நெய்யில் இருக்கிறது. எனவேதான் குளிர்காலத்தில் அவசியமாக தினமும் நெய் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அதுவும் பசு நெய்யாக இருத்தல் நல்லது.

நெய்யின் பண்புகள்: குளிர்காலத்தில் சரும வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. உடலில் தோன்றும் சரும வறட்சியை நீக்குவதில் நெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கொழுப்புகளை வழங்குவதோடு, சருமத்தின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்குத் துணைபுரிந்து, பளபளப்பான சருமத்தைத் தருகிறது. இதிலுள்ள கொழுப்பு உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. குளிரை தாங்கும் சக்தியைத் தருகிறது.

நெய்யில் உள்ள சத்துகள்:

1. நெய் அதிக வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டது. இது வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, அமினோ ஆசிட்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ளது.

2. நெய்யில் உள்ள பியூட்ரிக் ஆசிட் உட்புற குடல்களின் இயக்கம் ஆரோக்கியமாக செயல்பட ஆதரவாக இருக்கிறது.

3. நெய்யில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட்டுகள் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கிறது. மேலும் சருமத்திற்கு போஷாக்கு அளித்து உடலை பளபளப்பாக வைக்கிறது.

நெய்யின் பயன்கள்:

உதடு வெடிப்பை சரி செய்கிறது: குளிர்காலத்தில் உதடுகள் ஈரப்பசை இன்றி காய்ந்துபோகும். மேலும், உதடுகள் வெடித்து, எரிச்சலை உண்டாக்கும். அதை எளிமையாக சரி செய்கிறது நெய். விரல் நுனியில் ஒரு துளி நெய்யை எடுத்து, உதடுகளின் மேல் மெதுவாக மசாஜ் செய்யவும். இரவில் அப்படியே விட்டு விட்டு, அடுத்த நாள் காலையில் கழுவிக் கொள்ளலாம். இரண்டே நாட்களில் உதடு வெடிப்பு சரியாகி, மென்மையான மற்றும் மிருதுவான உதடுகளாக மாறியிருக்கும்.

சளி மற்றும் இருமலை தடுக்க உதவுகிறது: குளிர்காலத்தில் சளி மற்றும் இருமல் ஆகியவை அடிக்கடி ஏற்படும். சுவாச பிரச்னைகளும் தலைதூக்கும். நெய்யை தவறாமல் உட்கொள்வது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்குகிறது. இது உடலில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. சளி, இருமலை சரி செய்து சுவாசப் பிரச்னைகளை சரிசெய்கிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது: நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளதால், வீக்கத்தைக் குறைக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவும். இது வயிற்றில் அமில சுரப்பைத் தூண்டவும் உதவுகிறது, அதனால் உண்ணும் உணவுகள் எளிதில் ஜீரணமாகி, ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக, நெய்யை எப்போதும் உருக்கித்தான் பயன்படுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com