குளிர்காலத்தில் ஏசியை ஆஃப் பண்ணி வைக்கிறீங்களா? அடுத்த சம்மரில் பர்ஸை காலி பண்ண ரெடியாகிடுங்க!

AC Blast
AC Blast
Published on

கார்த்திகை, மார்கழி மாதம் வந்துவிட்டாலே ஃபேன் கூடத் தேவைப்படாது. அந்த அளவுக்குக் குளிர் வாட்டி எடுக்கும். இந்த நேரத்தில் "ஏசியாவது, கூலராவது" என்று சொல்லி, நம் வீட்டு ஏசியை அணைத்து, அதற்கு ஒரு பிளாஸ்டிக் கவரைப் போட்டு மூடி வைப்பது நம்மில் பலரது வழக்கம். "அடுத்த நாலு மாசத்துக்கு இது தேவைப்படாது, தூசு படியாமல் பத்திரமாக இருக்கட்டும்" என்று நினைத்து நாம் செய்யும் இந்தச் செயல்தான், நம் ஏசிக்கு வைக்கும் மிகப்பெரிய ஆப்பு. குளிர்காலத்தில் ஏசியை மொத்தமாக மூடி வைப்பதால் ஏற்படும் விபரீதங்கள் என்ன, அதை எப்படித் தவிர்ப்பது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

உங்க வீட்டில் இருக்கும் AC பழுதாகி விட்டால், கவலைப்பட வேண்டாம்! உடனே புது AC வாங்க...

எலிகளுக்கு ஒரு சொகுசு பங்களா!

பொதுவாகவே எலிகள் மற்றும் அணில்கள் குளிர்காலத்தில் இதமான வெப்பம் இருக்கும் இடத்தைத் தேடி அலையும். நீங்கள் ஏசியைப் பயன்படுத்தாமல், அதைச் சுற்றி ஒரு கவரையும் போட்டு மூடி வைக்கும்போது, அது எலிகளுக்கு மிகவும் பாதுகாப்பான, இருட்டான, வெப்பமான வீடாக மாறிவிடுகிறது. 

உள்ளே நுழையும் எலிகள் சும்மா இருக்காது; ஏசியின் மிக முக்கியமான பாகமான 'பிசிபி' (PCB) போர்டுகளையும், வயர்களையும் கடித்துக் குதறிவிடும். அடுத்த கோடையில் நீங்கள் ஏசியைப் போடும்போது அது வேலை செய்யாது. எலிகள் கடித்த வயர்களை மாற்றவே ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

உறைந்து போகும் ஆயில்!

நாம் எப்படி நீண்ட நாட்களாக வண்டியை ஓட்டாமல் இருந்தால், இன்ஜின் ஜாம் ஆகிவிடுமோ, அதே நிலைமைதான் ஏசிக்கும். ஏசியின் இதயமாகச் செயல்படும் கம்ப்ரசருக்குள் (Compressor) ஆயில் இருக்கும். இதுதான் இயந்திர பாகங்கள் உராய்வின்றிச் செயல்பட உதவுகிறது. நீங்கள் 4 அல்லது 5 மாதங்கள் ஏசியை இயக்கவே இல்லை என்றால், அந்த ஆயில் கெட்டியாகி, பிசுபிசுப்புத் தன்மையை அடைந்துவிடும். திடீரெனக் கோடை காலத்தில் ஏசியை ஆன் செய்யும்போது, கம்ப்ரசர் இயங்க முடியாமல் திணறும்; அல்லது பழுதாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
Gas Lighter |இனி கேஸ் லைட்டர் தீர்ந்துவிட்டால் உடனே தூக்கி போடாதீர்கள்..!
AC Blast

கேஸ் கசிவு ஆபத்து!

ஏசிக்குள் இருக்கும் குளிரூட்டும் வாயு (Refrigerant Gas) தொடர்ந்து சுழற்சியில் இருந்தால்தான் நல்லது. நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் தேங்கும்போது, ரப்பர் சீல் காய்ந்து போவதாலோ அல்லது அழுத்த மாறுபாட்டாலோ கேஸ் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில், கேஸ் கசிந்தது தெரியாமலே சுவிட்சை போடும்போது விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

"அப்போ குளிரிலும் ஏசியை ஓடவிடச் சொல்றீங்களா?" என்று கேட்காதீர்கள். தினமும் ஓட்டத் தேவையில்லை. குறைந்தது 15 நாட்களுக்கு ஒருமுறையாவது, ஒரு 15 நிமிடங்கள் ஏசியை ஆன் செய்து வையுங்கள். இப்படிச் செய்வதால், உள்ளே இருக்கும் ஆயில் இளகும், கேஸ் சுழற்சி சீராகும், இயந்திரம் சூடாவதால் எலிகள் உள்ளே கூடு கட்டாது.

இதையும் படியுங்கள்:
ஏசி அறையில் இனி ஆரோக்கியத்திற்கு பயமில்லை! இந்த 5 விஷயங்களைச் செய்யுங்க!
AC Blast

தூசு படியாதா?

ஏசியை ஆஃப் செய்து வைத்திருந்தால் உள்ளே தூசு போகாது என்று நினைப்பது தவறு. உண்மையில், ஏசி ஓடும்போதுதான் காற்றை உள்ளிழுப்பதால் ஃபில்டரில் தூசு சேரும். சும்மா இருக்கும் ஏசிக்குக் கவர் போடவில்லை என்றாலும் பெரிய பாதிப்பு இல்லை.

பணம் கொடுத்து வாங்கிய பொருளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அதைக் கெடுத்துவிடாதீர்கள். குளிர்காலத்தில் சும்மா உறங்கிக்கொண்டிருக்கும் உங்கள் ஏசியை, அவ்வப்போது தட்டி எழுப்புங்கள். இது சிறிய வேலைதான், ஆனால் அடுத்த கோடை காலத்தில் சர்வீஸ் சென்டருக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்வதைத் தவிர்க்க இது ஒன்றே வழி. பராமரிப்பு என்பது உபயோகிப்பதில் இருக்கிறதே தவிர, மூடி வைப்பதில் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com