
புதிதாக ஒரு இடத்திற்கு காரிலோ இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது நாய் துரத்தி வரும் அனுபவத்தை பெரும்பாலானோர் அனுபவித்திருப்பர். இதற்கான காரணம் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாய் வீட்டை காக்கும். இது தவிர மக்களுடன் மிகவும் அன்பாகவும், நட்பாகவும், நன்றியுணர்வுடமும் பழகக்கூடியதாக இருப்பதால்தான் வீட்டின் செல்லப் பிராணிகளில் ஒன்றாக நாய் இருக்கிறது. சோகம், மகிழ்ச்சி என்று நம்முடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு வீட்டு விலங்கு நாய் என்று கூட சொல்லலாம்.
ஆனால், சில நேரங்களில் நாய்கள் நமக்கு எமனாகவும் மாறிவிடும் என்று சொல்லலாம். நாய் குறுக்கே வந்ததால் வாகன விபத்து, நாய் துரத்தியதால் வாகன விபத்து என்பதையும் நாம் அதிகளவில் பார்த்திருப்போம். சில நேரங்களில் வாகனங்களின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நாய்கள் துரத்துவதோடு, கார்கள் பின்னால் ஓடுவதற்கு தங்களுடைய முழு பலத்தையும் பயன்படுத்துகினறன.
கார்களை, வாகனங்களை துரத்தும்போது நாய்கள் உங்களைத் துரத்துவதாக எண்ணுகின்றனர். ஆனால், அப்படியில்லை என்கின்றனர் நிபுணர்கள். நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம்.
சில நேரங்களில் உங்களின் வாகனங்களின் டயர்களில் நாய்கள் சிறுநீர் கழிப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த சிறுநீரின் வாசனை டயரில் இருப்பதால், நீங்கள் வேறு பகுதிகளில் வண்டிகளில் செல்லும்போது அந்த வாசனையை மற்ற நாய்கள் விரைவாக கண்டறிந்து கொள்கின்றன. இந்த வாசனையை மோப்பம் பிடித்துதான் நம்முடைய இடத்திற்கு வேறு நாய்கள் வருகிறது என்ற எச்சரிக்கை உணர்வால்தான் இருசக்கர வாகனம், கார்களுக்குப் பின்னால் நாய்கள் துரத்துகின்றன.
வேறு பகுதியைச் சேர்ந்த நாய்கள் தங்களுடைய பகுதிகளுக்கு வந்தாலே போதும் அந்த தெருவைச் சேர்ந்த நாய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அதனை குரைத்து விரட்டிவிடும். ஒவ்வொரு நாய்களுமே தங்களுக்கென்று தனி பகுதியை வைத்துக் கொள்ள விரும்புகின்றன. பிற பகுதியைச் சேர்ந்த நாய்கள் தங்களுடைய பகுதிகளுக்கு வருவதை ஒருபோதும் நாய்கள் விரும்புவதில்லை. இதனால்தான் மற்ற நாய்களைக் கண்டாலே பிற நாய்கள் ஒன்று கூடி குரைக்கும்.
நாய்கள் துரத்தும் சமயங்களில் பலர் அச்சமடைந்து வாகனங்களை வேகமாக இயக்கத் தொடங்கும்போது எதிர்பாராத விதமாக சாலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன.
நாய்கள் சிறுநீர் கழிப்பது நாய்கள் துரத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், சில நேரங்களில் வாகனங்கள் அதிவேகமாக சாலையில் செல்வது, வித்தியாசமான சப்தம் மிகுந்த ஒலிகளை எழுப்புவதும் நாய்கள் துரத்துவதற்கான காரணமாகும். நாய்கள் வேட்டையாடும் குணம்கொண்டவை என்பதால் வாகனங்களின் இயக்கத்தை இரைகள் ஓடுவதுபோல நினைத்தும் சில நேரங்களில் துரத்துகின்றன.
இனிமேல் வாகனம் ஓட்டும்போது நாய்கள் உங்களை துரத்தி வந்தால் மேற்கூறிய கருத்துக்களை நினைவில் வைத்து பதட்டப்படாமல் பொறுமையாக வாகனம் ஓட்டி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.