

தற்போது உள்ள காலக்கட்டத்தில் திருமணம் என்பது ஒரு பொறுப்பு மிகுந்த சுமையாகவே இளைய சமூகத்தினரால் பார்க்கப்படுகிறது. திருமணம் செய்து குழந்தை, குடும்பம், பிரச்னை, மனஉளைச்சல் என்று வாழ்வதற்கு யாரும் விரும்பவில்லை என்றே சொல்லலாம். சீனாவில் உள்ள பெண்கள் இந்த விஷயத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். எங்களுக்கு திருமணமே வேண்டாம்! கென்ஸ் மட்டும் போதும் என்று சொல்கிறார்கள். அது என்ன கென்ஸ்? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
சினிமாவில் Barbie பொம்மையின் துணையாக வரும் 'கென்' கதாபாத்திரத்தை மையமாக வைத்தே இந்தப் பெயர் உருவானது. சீனாவில் வேலைக்கு சென்று நன்றாக சம்பாதிக்கும் நிதி சுதந்திரம் உள்ள பெண்கள் 'கல்யாணமே வேண்டாம்' என்று கூறுகிறார்கள். கல்யாணம் செய்தால் அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும் அதற்கு பதிலாக அவர்களுக்கு ஒரு துணை மட்டுமே இருந்தால் போதும் என்று கூறுகிறார்கள். அதற்காக கென்ஸ் (Kens trend) என்ற சேவை முளைத்துள்ளது.
அதாவது இந்த கென்ஸின் வேலை என்னவென்றால், ஒரு கணவன் அல்லது காதலன் செய்ய வேண்டிய பல காரியங்களை இவர்கள் ஒரு சேவையாக செய்கிறார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது, சமைப்பது, போர் அடித்தால் ஷாப்பிங்கிற்கு துணையாக செல்வது, டென்ஷனாக இருக்கிறது மனது சரியில்லை என்றால் ஆறுதல் சொல்வது போன்று ஒரு துணையிடம் இருந்து நமக்கு கிடைக்கும் உணர்வுப்பூர்வமான எல்லா விஷயங்களையும் செய்வார்கள்.
நெருக்கமான உறவு, பெண்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது போன்றவற்றிற்கு ஸ்ரிக்ட்லி நோ. இது ஒரு வேலை, அந்த வேலைக்கு ஏற்ற ஊதியம் நேரத்தை வைத்து கணக்கிட்டு இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு சீன பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சுதந்திரம், மனநிம்மதி இதன் மூலம் கிடைக்கிறது. திருமண வாழ்க்கையில் மாட்டிக்கொண்டு மகிழ்ச்சியை இழந்து வாழ்வதற்கு விருப்பமில்லை என்கிறார்கள்.
இந்த கென்ஸ் சிஸ்டத்தில் பெண்கள் தான் பாஸ். அவர்கள் சொல்வது தான் நடக்கும். காசு கொடுத்தால் வேலை நடக்கிறது. எந்த ஒரு வாக்குவாதமும் கிடையாது. இதனால் மனம் நிம்மதியாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள். சீனாவில் இது பெரிய சேவை தொழிலாகவே வளர்ந்துக் கொண்டு வருகிறது. இளமையாக பார்க்க அழகாக இருக்கும் ஆண்களை கென்ஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.
எப்போது கூப்பிட்டாலும் சேவை செய்ய தயாராக இருக்க வேண்டுமாம். இது இன்றைய தலைமுறை பெண்களின் மனநிலையை தெளிவாக சொல்கிறது. சமூகம் எவ்வளவு வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இது உதாரணமாக இருக்கிறது.