நேர்காணலில் திறமையை வெளிப்படுத்தினால் தான் அனைவருக்கும் வேலை கிடைக்கும். என்னதான் அனைத்தையும் சரியாகச் செய்தாலும், சிலர் நேர்காணலில் சில தவறுகளை செய்து சொதப்புகின்றனர். இதன்படி, நேர்காணலில் நாம் எந்தத் தவறுகளை எல்லாம் செய்யக் கூடாது என்பதை இப்போது பார்ப்போம்.
ஓர் இளைஞன் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அனைவரும் கேட்கும் கேள்வி யாதெனில், எங்கே வேலைக்குப் போகிறாய்? எவ்வளவு சம்பளம்? என்பது தான். இன்றைய காலத்து இளைஞர்களுக்கு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும், ஆசை மட்டும் போதாது அல்லவா! அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சியும் மிக முக்கியம். வேலைக்குச் செல்ல படிப்பு ஒரு நுழைவுச்சீட்டு மட்டும் தான். தான் கற்ற கல்வியின் திறனை நேர்காணலில் வெளிப்படுத்தினால் தான் வேலை நிச்சயம். ஆனால், இன்று பலரும் நேர்காணலில் பல்வேறு தவறுகளை செய்கின்றனர். இதனால் பலருடைய வேலைவாய்ப்பு “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்ற பழமொழியைப் போலத் தான் இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் பணியமர்த்தல் துறையினர் நேர்காணலை அறிவிக்கும் போது, நேரம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். முடிந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வரலாம். ஆனால், நேரம் தவறி தாமதமாக வந்தால் அவர்களிடத்தில் ஒரு எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்தி விடும். மேலும் மற்றவர்களின் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்ற எண்ணத்தையும் உண்டாக்கி விடும். ஆகையால் இதனைத் தவிர்க்க தாமதமாக வருவதை முன்கூட்டியே தெரிவித்து விட்டு, வந்தவடனே ஒரு மன்னிப்பு கேட்டு விடுவது சிறப்பாக இருக்கும்.
ஒரு நேர்காணல் நடைபெறும் இடத்திற்குச் செல்ல சிறந்த நேரம் எதுவென்றால் திட்டமிடப்பட்டுள்ள நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு செல்வது தான். இந்த 5 நிமிடம் ஆனது வெகு சீக்கிரமும் அல்ல; தாமதமும் அல்ல.
நேர்காணல் செல்வதற்கான நேரத்தினை இந்த அளவிற்குத் துல்லியமாக கடைபிடிக்க வேண்டியது அவசியமா?
இது ஒரு சாதாரண விஷயம் தானே என பலரும் நினைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த சாதாரண விஷயம் தான் மற்றவர்களிடம் இருந்து உங்களை தனித்துக் காட்ட உதவுகிறது. வேலைக்கான நேர்காணல் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், நீங்கள் இதற்குத் தயாராக இருப்பதைக் காட்டும் போது நேர்காணல் மிகவும் எளிதாகிறது. ஆகவே நேர்காணலில் நேரத்தைக் கடைப்பிடிப்பது என்பது, உங்களின் தயார்நிலையை நிரூபிக்கும் முதல் மற்றும் முக்கிய படியாகும்.
நேர்காணல் செல்லும் இடங்களில் சகப் போட்டியாளர்களுடன் தேவையற்ற வீண் பேச்சுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து விடுங்கள்.
நேர்காணலில் எப்போதும் பதில் மட்டுமே கூறாமல், நீங்களும் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கலாம். இதனால் உங்களைப் பற்றிய எண்ணத்தையும், தன்னம்பிக்கையும் உயர்த்திக் காட்டும்.
பணியமர்த்தல் அதிகாரி கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை எனில், அதற்காக பதட்டப்படாதீர்கள். ஏனெனில் நீங்கள் தெரியாது என சொல்வதற்காகத் தான் சில கடினமான கேள்விகளை அவர் கேட்கிறார் என புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நிறுவனத்திற்கு நேர்காணல் செல்வதற்கு முன்பாக அவர்கள் தேடுகின்ற அடிப்படைத் தகுதிகள் என்னென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு கூடுதலாகவே உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள். நேர்காணலுக்கு வேலைதேடிச் செல்வதாக நினைக்காமல், வாய்ப்பைத் தேடிச் செல்வதாக எண்ணிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நேர்காணலில் வெற்றி கிடைக்கும்.