தனி வீடுகள் என்று இருந்த காலம் மாறி, தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன.அதிலும் மூன்று அல்லது நான்கு தளத்திற்கு மேல் கட்டப்படும் கட்டடங்களில் லிஃப்ட் (Apartment Elevator) என்பது கட்டாயமாக அமைக்கப்படுகிறது. லிஃப்ட்கள் எல்லா வயதினரும் உபயோகப்படுத்தும் ஒரு அத்தியாவசிய பொருளாகவே அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு ஆகிவிட்டது.
லிப்ட்டுகள் சரிவர இயங்கினாலும் மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு செய்ய வேண்டும். லிஃப்ட்டினுள் அலார மணி, அழைபேசி போன்றவை அமைக்க வேண்டும். இதையும் மீறி லிஃப்டில் சிக்கிக் கொண்டால் செய்ய வேண்டியவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
லிப்டில் சிக்கிக்கொண்டால் செய்ய வேண்டியவை:
* லிஃப்டில் செல்லும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் கோளாறு காரணமாக லிஃப்ட் பாதி வழியில் நின்று விட்டாலோ முதலில் பதற்றம் அடையக் கூடாது. பயத்தினால் பதற்றம் அடைந்தால் யோசிக்க இயலாது. அதுவும் இல்லாமல் தற்போது வரும் மாடர்ன் லிப்ட்டுகள் ஸ்ப்ரிங் குஷன், ஷாக் அப்சர்வர்களைக் கொண்டு வருவதால் லிப்ட் கீழே விழுந்தாலும் உள்ளிருப்பவர்களுக்கு ஆபத்து நேராமல் தாங்கிப்பிடிக்கும் விதத்தில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* லிஃப்ட் இருட்டாக இருக்கிறது என்பதற்காக மொபைல் வெளிச்சத்தை பயன்படுத்தாமல், லிப்டில் உள்ள அலாரம் மணி பட்டனையோ அல்லது அலைபேசி பட்டனையோ அழுத்த வேண்டும். மேலும் மொபைலில் சிக்னல் இருக்கிறதா என்பதையும் பார்த்து சிக்னல் இருந்தால், அந்தக் கட்டடத்தில் தெரிந்தவர் யாரேனும் இருந்தால் அவரைத் தொடர்புகொள்ள முயற்சிக்க வேண்டும் அல்லது உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
* கதவு திறக்கும் பட்டனை அழுத்தி கதவுகளை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் அல்லது ஏதாவது ஒரு தளத்திற்கான எண்ணை அழுத்த வேண்டும். அதை விடுத்து மேலே ஏறி தப்பிக்கலாம் என்று எதுவும் செய்யக் கூடாது. உதவிக்கு யாரேனும் வரும் வரை பொறுமை காக்க வேண்டும்.
* கதவுகளுக்கு இடையில் வெளிச்சம் தென்பட்டால் லிஃப்ட் ஏதாவது ஒரு தளத்தில் உள்ளது என்று அர்த்தம். அப்போது கதவுகளை தட்டி ஒலி எழுப்பி யாரையேனும் உதவிக்கு அழைக்கலாம். தங்களால் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை என்றால் இரு தளத்திற்கு இடையில் லிப்ட் உள்ளது என்று அர்த்தம். அப்போது எப்படி கூப்பிட்டாலும் அடுத்தவர் காதுக்குக் கேட்காது என்பதால் அலாரம் பட்டனை தொடர்ந்து அழுத்த வேண்டும். சத்தம் போட்டு சக்தியை வீணாக்கி விடாதீர்கள்.
* குழந்தைகளை தனியாக லிப்டில் செல்லவோ, ஆள் இல்லாத லிப்டுக்குள் பயணிக்கவும் அனுமதிக்காதீர்கள். அப்படியே மாட்டிக்கொண்டால் பொறுமையாக இருக்கச் சொல்லித் தர வேண்டும்.
* கட்டடத்தில் தீ பிடித்திருந்தால் லிப்ட்டை பயன்படுத்தக் கூடாது.
* லிப்டின் கதவுகளை மூடும்போது கை, கால் அல்லது வேறு பொருட்களை பயன்படுத்தி நிறுத்தவும் கூடாது, கூட்டமாக இருக்கும் லிப்டை தேர்ந்தெடுக்கவும் கூடாது. மேலும், கதவுகளின் இடையில் சிக்கும் விதத்தில் துணிகள், பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சௌகரியங்கள் அதிகரிக்கும்போது அசௌகரியங்களும் ஏற்படத்தான் செய்யும். கவனமாக வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் என்றென்றும் பாதுகாப்பாக இருக்க முடியும்.