வயதாகிறதே என்று வருந்துகிறீர்களா? இப்படி ஒரு கணக்கு போடலாமா?

Old people
Old people
Published on

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்று சொல்வது போல, ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இளமையில் இருந்து முதுமை என்கின்ற நிலையை அடைவது, இயல்பாக மனித வாழ்க்கையில் நிகழக்கூடிய ஒரு மாற்றமே! எனவே  முதுமை அடைவதை எண்ணி கவலைப்பட வேண்டிய அவசியம்  இல்லை.

அதே சமயம் வயதாகிறதே என்று வருந்துபவர்களுக்கு, அவர்கள் முதுமை அடைவதை எண்ணி, மனதை தளர விடாமல் இருக்க…  ஒரு வித்தியாசமான கணக்கு மூலம், ஒரு ஆறுதலை, நம்பிக்கையை தர முடியும் .

குழந்தை பருவத்தில் காணப்படுகிற குதூகலம், அறியாமை, எல்லாம் நம்முடைய இளமை பருவத்தில் மாறி விடுகிறது. குழந்தை பருவத்தில் நம்மிடம் இருந்த கவலையை கையில் எடுத்துக்கொள்ளாத மனநிலை இளமை பருவத்தில் நம்மிடம் காண முடிவதில்லை. இளமையில் வெளிப்படுகின்ற வேகம், பலம், துடிப்பு எல்லாம் முதுமையில் வருவதில்லை. 

இளமையில் இருந்த உடல் வலிமை, வயது முதிர்வடையும் போது குறையலாம். ஆனால் மனதை தெளிவாக, தெம்பாக வைத்திருக்கும் மனிதர்களிடம் இளமையின் சுறுசுறுப்பு குறையாமல் இருப்பதை காண முடியும்.

உண்மையில் வயதாவது என்பது உடலுக்குத் தானே ஒழிய, மனதிற்கு இல்லை என்பதை நாம் உணர வேண்டும். முக்கியமாக வயதாகிவிட்டது என்று வருத்தப்படுகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால்,  அந்த வாய்ப்பு நிறைய பேருக்கு கிடைப்பதே இல்லை என்பது தான். ஆம் நமது வாழ்நாளில் நோய்கள்  இல்லாமல் வாழ்வது;அல்லது அவைகளிடம் இருந்து  மீண்டு நீண்ட ஆயுளுடன்  வாழ்வது  என்பதே ஒரு சாதனை தானே!.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றைய காலகட்டத்தில் எல்லா வயதிலும் நோய்நொடிகள் வந்து போகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. நாம் சம்பாதிப்பது எல்லாம் மூன்று வேளை உண்ணும் உணவுக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் தேவையாகிறது. 

யாராவது ஒருவர் தனது இளமை பருவத்தில், வாழ்க்கையின் நிதர்சனமான சவால்களை சந்திக்க பயந்து நடுங்கினாலோ, அல்லது ஓடி ஒளிந்தாலோ, அப்போதுதான் அவருக்கு முதுமை வந்து விட்டது என்று பொருள். 

ஏனெனில் இயலாமை எனும் பயத்தை முதுமையில் தான் பொதுவாக காண முடியும். அதே நேரத்தில் அறுபது வயது தாண்டியும், ‘என்னால் முடியும்’ என்று எவரெஸ்ட் மலையை ஏறி விட துணிகின்றவர்கள் மனதில இளமையாக இருப்பவர்களிடம் காணப்படுகின்ற துடிப்பும் ஆர்வமும் வயதான பிறகும் வெளிப்படுகிறது.

வேலை வாய்ப்பு, காதல், திருமணம், குழந்தை பெறுதல், குடும்ப பொறுப்பை கையில் எடுத்து நடத்துதல் மற்றும் ஒரு தொழில் தொடங்கி முன்னேற முடிவெடுத்தல் என்பது போன்ற அனைத்து சுய முயற்சிகளிலும், ஏமாற்றங்கள், இழப்புகள்,தோல்விகளை சந்திக்க நேரிடும் போது, உங்கள் மனம் தளர்ந்து போனானாலும் ... இந்த கணக்கை போட்டு பாருங்கள். 

வாழ்க்கையை பற்றி யாரோ ஒருவரின் சிந்தனையில் தோன்றி, பகிர்ந்து கொண்ட  ஒரு சிறிய கணக்கை.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். இதனால் மனதில் முதுமையை  பற்றிய பயம் தெளியலாம். தோல்விகளை கையாளும் திறன் அல்லது புதிய ஆற்றல் பிறக்கலாம். 

இதையும் படியுங்கள்:
உங்கள் காதலன்/காதலி உண்மையாக இருக்கிறார் என்பதைக் காட்டும் 7 அறிகுறிகள்!
Old people

இந்த கணக்கு ஒரு சிறிய உளவியல் சார்ந்த சிந்தனையில் இருந்து துவங்குகிறது.

  • முதலில் ஒரு மனிதருடைய ஆயுள் காலம் பொதுவாக 80 வயதில் இருந்து 90 ஆக இருக்கலாம் என்று நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • உங்கள் இன்றைய வயது 20 எனில் இன்னும் நீங்கள் 80-90 வயதை அடைய 60 முதல் 70 ஆண்டு காலம்  தேவைப்படும். ஆக இப்போது இருபது வயதில் இருக்கும் உங்களிடம் குறைந்தது அறுபது ஆண்டு ஆயுள் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். 

  • இதைப்போலவே உங்கள் வயது 30 எனில் இன்னும் உங்களுக்கு 50 முதல் 60 ஆண்டு காலம் ஆயுள் இருக்கிறது.

  • உங்கள் இன்றைய வயது 50 எனில் இன்னும் உங்களுக்கு 30 முதல் 40 ஆண்டு காலம் ஆயுள் இருக்கிறது. 

இப்போது நீங்கள் தோல்வி, ஏமாற்றம் , இழப்பு என்று எந்த சூழ்நிலையில்  இருந்தாலும் அது உங்களுக்கு இறுதி அல்ல. இன்னும் சாதிக்க வயதும் இருக்கிறது... வாழ்க்கையும் இருக்கிறது என்ற நம்பிக்கையை இந்த கணக்கின் மூலம் பெற முடியும்.

கவனித்து பார்த்தால், நாம் பிறந்து, வளர்ந்து, வாழ்க்கையை முழுசா ஆரம்பிக்க  எடுத்துக்கொண்ட இருபது ஆண்டு கால அளவே...  ஒரு நீண்ட கால வாழ் நாட்கள் என்பது போல தெரியும். குழந்தை பருவத்தில் இருந்து ஒரு கல்லூரியில் படித்து முடிக்க எடுத்து கொண்ட கால அளவை விட அதிக நாட்கள் ... ஆண்டுகள் இருக்கின்றதே!. 

ஆக நீங்கள் மனது வைத்தால், நம்பிக்கையை வளர்த்து கொண்டால் இன்னும் கூட சந்தோசமா வாழ முடியுமே.!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com