
குழந்தைகளுக்கு பொம்மைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், அவை குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். பொம்மைகளை வாங்கும் முன் பெற்றோர் அது குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொம்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. பறக்கும் பொம்மைகள்: பறக்கும் பொம்மைகள் அல்லது ஹெலிகாப்டர்களைப் போல பிரப்பல்லர்கள் அல்லது சுழலும் ஃபேன்களைக் கொண்ட பொம்மைகள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த பொம்மைகள் குழந்தைகளின் கண்கள், பற்கள் மற்றும் முகத்தில் காயங்களை ஏற்படுத்தலாம். முகத்தில் அடிபட்டால் மூளைக்கும் பாதிப்பு ஏற்படும்.
2. பிளாஸ்டிக் மற்றும் மண் பொம்மைகள்: சில பிளாஸ்டிக் பொம்மைகளில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. குழந்தைகள் இவற்றை வாயில் வைத்து கடிக்கும்போது அதில் உள்ள ரசாயனங்கள் வயிற்றில் போகும் அபாயம் இருக்கிறது. இவை நீண்ட கால பாதிப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். மேலும், மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளையும் குழந்தைகள் வாயில் வைக்கும் அபாயம் இருக்கிறது. எனவே இந்த மாதிரி பொம்மைகளை தவிர்க்க வேண்டும்.
3. காந்தம் மற்றும் பேட்டரிகள் உள்ள பொம்மைகள்: இந்த வகையான பொம்மைகள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை. இவற்றில் உள்ள காந்தங்கள் மற்றும் பேட்டரிகளை குழந்தைகள் தெரியாமல் வாயில் போட்டுக்கொள்ளும் அபாயம் உள்ளது. இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். காந்தம் குழந்தைகளின் குடலுக்குள் போய் ஒட்டிக்கொண்டு விடும். அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டி வரும். இது இரைப்பை குடல் பாதிப்பு மற்றும் தொற்று நோயையும் ஏற்படுத்தும். பேட்டரிகளை விழுங்கும்போது அதில் உள்ள ரசாயனங்கள் உடைந்து வயிற்றில் கலந்து விடும் அபாயமுண்டு.
4. பொம்மைத் துப்பாக்கிகள்: குழந்தைகளுக்கு பொம்மைத் துப்பாக்கிகள் மிகவும் பிடிக்கும். ஆனால், இவற்றில் உள்ள நுரை ஈட்டிகள், துகள்கள் அல்லது பிளாஸ்டிக் தோட்டாக்கள் போன்றவை கண்கள் மற்றும் முகத்தில். கடுமையான காயங்கள், வெட்டுக்கள், கீறல்களை ஏற்படுத்தும். சிறிய பாகங்கள் அல்லது எரிபொருள்கள் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். குறிப்பாக, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு.
5. குளியல் பொம்மைகள்: குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பி அவர்களை எளிதாகக் குளிக்க வைப்பதற்காக செய்யப்படும் பொம்மைகள். ஆனால், இவை தண்ணீரில் நனைவதால் அவற்றில் பாக்டீரியாக்கள் உருவாகக் கூடும். அதில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டால் பயம் இல்லை என்று நிறைய பெற்றோர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. பாக்டீரியாக்களை முழுமையாக அகற்ற முடியாது. எனவே, இந்த பொம்மைகள் குழந்தைக்குத் தேவையில்லை. பொம்மைகளில் உள்ள பாக்டீரியாக்கள் குழந்தைகளுக்கு சருமம் சம்பந்தமான நோய்களைக் கொண்டு வரலாம்.
6. சத்தமிடும் பொம்மைகள்: இந்த வகை பொம்மைகள் குழந்தைகளை எரிச்சல் ஊட்டலாம். மென்மையான அவர்களது கேட்கும் திறனையும் பாதிக்கும். எனவே, இந்த பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.
7. சிறிய பாகங்களை உடைய பொம்மைகள்: இந்த வகை பொம்மைகள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இவற்றில் உள்ள சிறிய பாகங்களை குழந்தைகள் விழுங்கி விடும். சில சமயம் பெற்றோர்கள் கவனிக்காமல் விடும்போது மூக்கு, வாய் அல்லது காதுக்குள் போட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம்.
8. கூரான முனை கொண்ட பொம்மைகள்: இவை குழந்தைகளின் கண்களில் இடித்து விட்டால் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது. மேலும், குழந்தைகளின் மென்மையான உடலில் காயங்களை ஏற்படுத்தலாம். எனவே, குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கும்போது அவை பாதுகாப்பானவையா என்று பார்த்து வாங்குவது மிகவும் அவசியம். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பொம்மை வாங்கித் தந்தாலும், உடனிருந்து பெற்றோர் கண்காணிப்பது மிகவும் அவசியம்.