தன்னம்பிக்கைத் துளிகள்!

தன்னம்பிக்கைத் துளிகள்!
Published on

ரு திரைப்படத்தை பார்த்த திருப்தியின்றி மிகச் சோர்வுடன் போனில் பேசிக்கொண்டிருந்த அம்மாவை காரணம் கேட்டேன். ”படத்தில் சம்பந்தமில்லாத இடத்தில் ரொம்ப வயலென்ஸ். கேட்டா ஹீரோவை ‘மாஸா’ காமிக்கணுமாம். பத்தாததுக்கு சென்சார் பண்ணப்படாத கெட்ட வார்த்தைகள் கொண்ட வசனங்கள் வேற...” என்ற அம்மாவின் ஆதங்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. இக்காலத்தில் வெளிவரும் சினிமா மற்றும் வெப்-சீரீஸ் மட்டுமின்றி, பள்ளிக்கூடத்திலும் தகாத வார்த்தைகளின் பிரயோகம் தலைவிரித்தாடுகிறது. காரணம், அவ்வாறு பேசுவதினால் தங்களுடைய தைரியமும் துணிச்சலும் கூடுவதாக அவர்கள் எண்ணுவதுதான்.

எனது தோழியும் கூட அவர்களில் ஒருத்தியே. அவளும் இதே போன்ற காரணத்தை சொல்லுவாளோ என்று தெரிந்துகொள்ள, ‘கோபம் வருதுன்னு ஒரு காரணத்துக்காக தகாத வார்த்தைகளை உபயோகம் பண்றது சரியா?’ என்று கேட்டே விட்டேன். அவள் அளித்த பதிலோ சில நொடிகளுக்கு என்னை ஸ்தம்பிக்க செய்தது. ‘இந்த உலகமே ரொம்ப மோசம். நம்ம கூட இருக்கற வங்களும் சரியில்ல. எல்லாம் பொய் சொல்லிக்கிட்டு, மத்தவங்கள ஏமாத்திட்டு இருக்காங்க. இவங்களுக்கு நடுவுல பிழைக்கணும்னா, இந்த மாதிரியெல்லாம் பேசித் தான் ஆகணும். மொதல்ல அவங்கள நிறுத்தத் சொல்லு, திருந்தத் சொல்லு; அப்புறம் நானும் கெட்ட வார்த்தை பேசறத நிறுத்தறேன்’ என்றாள். வயதில் என்னைவிட வெறும் இரண்டு வருடம் மூத்தவள் தான். அதற்குள் வாழ்கையின் மீதும், உலத்தின் மீதும் இத்தனை வெறுப்பும் சலுப்புமா? என்று எண்ணி வருந்தினேன். அவளின் ஆதங்கத்திலும் உண்மை இருக்கத்தான் செய்தது. இருப்பினும், சரியில்லாத செயல்களை செய்வதற்கு ஏதோ காரணம் சொல்லி நியாயப் படுத்துவதால் மட்டும், அது சரி என்று உருமாறிவிடாது. இம்மாதிரியான காரணங்கள் ‘நொண்டிச் சாக்கு’ [lame excuse] என்பார்களே, அதுதான்.  

இந்த உரையாடல் நடந்து முடிந்து ஒரு வாரத்திற்குப் பின், என் தந்தையுடன் இதைப் பற்றி போனில் பேசினேன். அவர் தனக்கு நிகழ்ந்த அனுபவம் ஒன்றை என்னிடம் பகிர்ந்தார். என் தந்தை சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். அப்படியொரு சாதாரண சனிக்கிழமையன்று, கோவில் வாசலில் நின்று வாகனங்களுக்கு டிக்கெட் கொடுக்கும் நபரை சந்திக்க நேர்ந்தது. அவர், அந்த பணிக்கு புதிதாக வந்தவர். ஆனால் வயது எழுபதிற்கு மேல் இருக்கலாம். அவரின் பேச்சும் நடவடிக்கையும் சற்று சலிப்புடன் வேண்டா வெறுப்பாக அந்த வேலையை செய்வது போல் இருந்தது. சிரிப்பு என்பதை முற்றிலும் மறந்தவராக தென்பட்டார். சில வாரங்களுக்கு அவரின் பேச்சும் நடவடிக்கையும் இவ்வாறே தொடர்ந்தது. எந்தவித மாற்றமுமில்லாமல்.

ஒரு நாள் சனிக்கிழமை மாலையன்று, வழக்கம் போல் என் தந்தையும் சென்றிருக்கிறார் கோவிலுக்கு. சூரியபகவான் உறங்க செல்லும் நேரம் என்பதால், அவரின் ஒளியும் அந்நேரத்தில் சற்று மங்கலாக இருந்தது. அதனால், அந்த டிக்கெட் வழங்கும் முதியவர், என் தந்தையின் இருசக்கர வாகனத்தில் இருக்கும் மருத்துவர் ஸ்டிக்கரை கவனிக்கவில்லை. என் தந்தை அவரை நெருங்கி, ‘உங்களுக்கு பிரஷர் இருக்கா?’ என்று கேட்டார். அதில் என்ன மாயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை, முதல் முறையாக அந்த முதியவர், சற்று இளகின முகத்துடன், “ஆமாங்க சார்” என்று தொடங்கி, தன் உடல் நலம் பிரச்சனைகளை பட்டியலிட்டு சொல்லலானார். அவர் சொல்வதை பொறுமையாக செவிமடுத்து, சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு, சுவாமி தரிசனம் முடிந்து, வண்டியெடுக்கத் திரும்பி வரும்போது அங்கொரு பெரும் மாற்றத்தை கண்டார் என் தந்தை. அந்த முதியவர் எல்லோரிடமும் மிகவும் கனிவுடன் பேசியபடி டிக்கெட்டுகளை வழங்கிக்கொண்டிருந்தார்.

இதைவிட ஆச்சரியமூட்டும் நிகழ்வொன்று அதற்கடுத்த வாரம் நடந்தது. அந்த முதிவரின் மனைவியும் அவருடன் வந்திருந்தார். இருவரும் சிரித்துப் பேசியபடி, வேலையைக் கவனித்துக் கொண்டும், வாடிக்கையாளர்களிடம் இலகுவாக பேசியபடியும் இருந்ததைக் கண்ட என் தந்தைக்கு ஒரு கனிவான, அக்கறையான வார்த்தை ஒரு நபரை எப்படி மாற்றியிருக்கிறது என்று மிகுந்த மகிழ்ச்சி.

என் தோழியிடமும், தந்தையுடனும் நடந்த உரையாடல் களின் மூலம், நான் புரிந்து கொண்டது என்னவென்றால், இந்த உலகத்தை பற்றியும் சக மனிதர்களை பற்றியும் குறை கூறிக்கொண்டிருப்பவர்கள், அந்த நிலைமையை மாற்ற எந்தவொரு முயற்சியும் எடுப்பதில்லை என்பதே. அப்படி குறை சொல்லாதவர்கள், தன்னால் முடிந்த அளவு, தன்னை சுற்றியுள்ள நிலைமையை மாற்றும் முயற்சியில்  இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒரு முறை கூட தன்னால் இயன்றவரை முயலாமல், வெறுமனே குறை கூறியும், சலித்துக்கொண்டும் இருப்பவர்களால்  இந்த உலகம் ஒரு சதவீதம் கூட மாறி விடப்போவதில்லை. குறிப்பாக இக்காலத்து கெட்டிக்கார இளைஞர்கள், அறிவியல் தொழில் நுட்பங்களில் புகுந்து விளையாடுபவர்கள், முன்கூறியது போல் பொறுப்பில்லாத காரணங்களால் ஒதுங்கி கொள்வது நியாயமல்லவே.

ஒருமுறையேனும் முயன்றுதான் பாருங்களேன்! ஏனெனில், நம்முடன் வாழும் சராசரி-சக மனிதர்களையும், இந்த உலகத்தைம் புரிந்துகொள்வதென்பது,  நியூட்டனின் விதிகளை விட மிக எளிமையானதே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com