60+ மக்களே... உஷார்! பெருகிவரும் ஆன்லைன் மோசடிகள்! முதியோரைக் குறி வைப்பது ஏன்?
2031இல் இந்தியாவில் உள்ள முதியவர்களின் எண்ணிக்கை 19.4 கோடியை அடைந்துவிடும். வங்கி, ஷாப்பிங், ஆரோக்கியம் ஆகியவை தொடர்பான பலவித பரிவர்த்தனைகளுக்கு முதியவர்களும் ஆன்லைனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு இதுகுறித்த அதிக புரிதல் இல்லாததன் காரணமாக அவர்களைக் குறிவைத்து வைத்து மோசடிகள் நடைபெறுகின்றன. மோசடியான முதலீட்டு திட்டங்கள், அடையாள திருட்டு என்று பல விதங்களில் அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.
எதனால் முதியவர்கள் ஆன்லைன் மோசடிக்கு அதிகம் உள்ளாகிறார்கள்?
ஆன்லைன் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகக் கையாளுவதற்குத் தேவையான டிஜிட்டல் அறிவாற்றல் முதியவர்களுக்குக் குறைவாகவே இருக்கிறது. பொய்யான மின்னஞ்சல்கள், சந்தேகத்தை கிளப்பும் லிங்க்குகள், மோசடி வலைத்தளங்கள் போன்றவற்றை அவர்களால் இனம் கண்டுகொள்ள முடிவதில்லை. தனியாக வசிப்பதாலும் சமூகத்திலிருந்து ஒதுங்கி இருப்பதன் காரணமாகவும் அவர்கள் புதியவர்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார்கள். இந்தப் புதியவர்களில் மோசடி நபர்களும் நுழைந்து விடுகிறார்கள்.
முதியவர்கள் மீது ஆன்லைன் மோசடிகள் நடத்தப்படுவதன் விளைவு:
இந்த வகை மோசடிகள் முதியவர்களை மிக அதிகமாக பாதிக்கின்றன. மோசடிகள் காரணமாக பெரும் பண இழப்பு நேரும்போது அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஈட்டிய சேமிப்பை இழந்துவிடுகிறார்கள். துரோகம், அவமானம் போன்ற உணர்வுகள் அவர்களை ஆட்கொள்கின்றன. இதன் காரணமாக டிஜிட்டல் நடைமேடைகளின் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை முழுவதுமாக நீங்கி விடுகிறது. அவற்றிலிருந்து தங்களை முழுவதுமாக விடுவித்துக்கொள்வதால் அவை அளிக்கும் வசதிகளை அவர்களால் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை.