மறுசந்திப்புகள் - முதியவர்களின் மிக மகிழ்ச்சியான தருணங்கள்!
பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை குழுவாக மீண்டும் சந்திப்பது ஓர் அற்புத அனுபவத்தை அளிக்கும். குறிப்பாக முதியவர்களுக்கு அது அந்தக் கால இணைப்புகளை மீட்டெடுக்கும். வருடங்கள் செல்லச் செல்ல இந்த நிகழ்வுகள் ஏதோ சமூக சந்திப்புகள் என்பதையும் தாண்டி உணரப்படும். நினைவில் தேக்கி வைக்கும் மகிழ்ச்சியான தொடர்புகளை எண்ணிப் பார்க்க வைக்கும். முதியவர்களைப் பொறுத்தவரை அது காலச் சக்கரத்தில் ஏறி பின்னோக்கிச் சென்று அவர்களின் அப்பாவித்தனம் நிறைந்த அந்தக்கால உலகம், கனவுகள் மற்றும் அவர்கள் வாழ்க்கையையே மாற்றிய நட்புகள் ஆகியவற்றுக்குக் கடத்திச் செல்லும்.
பழமையை நோக்கி ஒரு பயணம்:
கரும்பலகையில் சாக்பீஸால் எழுதப்பட்ட பாடங்கள், கவலையற்ற சிரிப்பு, குறும்பு, தோழமை போன்ற எளிமையான அந்தக் கால நினைவுகளை மறுசந்திப்புகள் மீட்டெடுக்கும். வாழ்க்கையின் பொறுப்புகள் தங்களை அழுத்துவதற்கு முன்பாக எப்படி இருந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கும் வாய்ப்பாக இவை அமைகின்றன. பள்ளியின் தாழ்வாரங்கள், தங்களின் வீடாகவே எண்ணிய கல்லூரி வளாகம் போன்றவற்றை எண்ணும்போது உணர்ச்சி வெள்ளம் சூழும். முதல் வகுப்பில் சேர்ந்தபோது ஏற்பட்ட இனம்புரியாத உற்சாகம், போட்டியில் வென்ற பெருமை, பட்டப் படிப்பு முடிந்தபோது மகிழ்வும் துயருமாகக் கலந்து நடைபெற்ற பிரிவு நாள் போன்றவை உணர்வுகளைத் தூண்டும்.