மழைக்காலம் தொடங்கிவிட்டாலே புயல் வந்துவிடுமோ, மழை வெளுத்து வாங்கி விடுமோ, அதனால் உணவுப் பொருட்களில் விலை அதிகரித்து விடுமோ என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக பெரும்பாலான இல்லத்தரசிகள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்து விடுகிறார்கள்.
இதனால் பணம் மிச்சமாவது உண்மைதான். ஆனால், நாம் ஒரு பொருளை நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதால் அதன் மருத்துவ குணங்கள் மற்றும் சத்துகள் குறையாமல் இருக்குமா என்பது கேள்விக்குறிதான். இது எல்லா பொருள்களுக்கும் பொருந்தாது என்றாலும், சில பொருட்களை சேமித்து வைக்கக் கூடாது. அத்தகைய சில பொருட்களை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
அஞ்சறைப்பெட்டி பொருட்கள்: நாம் வாசனைக்காகவும் சுவைக்காகவும் சமையலில் சேர்க்கும் மிளகு, மஞ்சள், சீரகம், சோம்பு, மசாலா பொருட்கள் உள்ளிட்ட அனைத்திலும் சத்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும்தான் இதில் சத்துக்களும் மருத்துவ குணங்களும் இருக்கும். அதனால் இந்தப் பொருட்களை அதிகம் வாங்கி சேமிக்க வேண்டாம்.
எண்ணெய் வகைகள்: நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் எல்லா வகை எண்ணெய்களும் நீண்ட நாட்கள் சேமித்து வைத்தால், அது நாளடைவில் அதன் தன்மையை இழந்து விடும். இதனால் எண்ணெய்களை ஒரு மாதத்திற்கு தேவையானதை மட்டும் வாங்கி சேமித்து வையுங்கள்.
பால் பொருட்கள்: பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, உள்ளிட்ட பொருட்கள் சீக்கிரத்தில் கெட்டுப்போய் விடும். அதனால், இந்தப் பொருள்களை தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கி பயன்படுத்துவதுதான் மிகவும் நல்லது.
தக்காளி: தக்காளி விலை எப்போது ஏறும், இறங்கும் என்று தெரியாது. இப்படி நாளுக்கு நாள் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை உயர்ந்து வருகிறது. அதன் தேவை அதிகம் இல்லை என்றாலும், விலை உயர்ந்து விடுமோ என்ற பயத்தில், மக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் வாங்கி சேமித்து வைக்கின்றனர். ஆனால், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக நாள் சேமித்து வைப்பதால் அதன் ஆரோக்கிய பலன்களைப் பெற முடியாது.
பருப்பு வகைகள்: பொதுவாக, மக்கள் பருப்பு வகைகளை அதிகம் வாங்கி சேமித்து வைப்பது உண்டு. ஆனால், பருப்பு வகைகளை மாதக் கணக்கில் சேமித்து வைக்கும்போது, சத்துக்கள் மற்றும் ஆரோக்கியப் பலன்களை இழக்க நேரிடும்.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் அன்றாடம் சமைக்கும் மருத்துவ குணம் கொண்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களை தரமாக உபயோகித்து வீட்டில் உள்ள அனைவரின் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாப்போம்.