அறுபது வயதானாலும் சிறுபிள்ளையாகவே இருக்கிறேன்!

விமானத்தைக் கண்டு அதிசயிக்கும் முதியவர்
விமானத்தைக் கண்டு அதிசயிக்கும் முதியவர்
Published on

‘அதிசயமான கண்டுபிடிப்பு எது?’ என்று என்னைக் கேட்டால் நான் யோசிக்காமல் உடனே சொல்லும் பதில் ‘விமானம்.’ சிறு வயதிலிருந்தே விமானம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னைக்குச் செல்லும் சமயங்களில் மீனம்பாக்கம் விமான நிலையத்தைக் கடந்து செல்லும்போது அங்கு நின்று கொண்டிருக்கும் விமானங்கள், ஏறும், இறங்கும் விமானங்களை என்னை மறந்து பார்த்து ரசித்தபடி கடப்பது வழக்கம்.

அது 1975ம் வருடம். எனது மாமா மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நான் எனது அப்பா, அம்மா மூவரும் அவர்கள் வீட்டிற்குச் சென்றோம். மாலை மூன்றரை மணிக்கு ஏர்போர்ட்டிற்கு அழைத்துச் சென்று விமானங்களைக் காட்டுவதாகச் சொல்லி என்னையும் அவருடைய மகள் கலாவையும் அழைத்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றார். அந்தக் காலத்தில் யாராவது தெரிந்தால் விமானத்திற்குள் சென்று பார்வையிடலாம்.

விமான நிலையத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு ஓடு பாதையில் மஞ்சள் நிற பயிற்சி ரக விமானம் (Dornier)  நின்று கொண்டிருப்பதை வியப்புடன் பார்த்தேன். எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு இளைஞர் என் மாமாவைப் பார்த்ததும் அவரிடம் நலம் விசாரித்தார். மாமா என்னை அவரிடம் காட்டி, ‘ஊரிலிருந்து வந்திருக்கிறான்’ என்றதும், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “இவர்களை என்னுடன் ப்ளேனில் ஒரு ரவுண்டு அழைத்துச் சென்று வரட்டுமா?” என்று  கேட்க, என் மாமா “சரி” என்றார். அவர் ஒரு பயிற்சி பைலட். அந்த இளைஞர் சிறிய விமானத்தின் கதவைத் திறந்து என்னையும் கலாவையும் ஏற்றி அமர வைத்து பெல்ட்டை மாட்டி விட்டார். மறுபுறம் உள்ள கதவைத் திறந்து அவர் ஏறி அமர்ந்து கொண்டார்.

சற்று நேரத்தில் அவர் எதையோ அழுத்த விமானத்தின் முன்புற காற்றாடி சுழலத் தொடங்கியது. சில வினாடிகளில் விமானம் மேலெழும்பி வானத்தில் வட்டமடித்தது. அவர் மெட்ராஸ் முழுவதையும் எங்களுக்கு சுற்றிக் காண்பித்தார். அரை மணி நேரம் பறந்து முடித்ததும் புறப்பட்ட இடத்தில் விமானத்தை இறக்கினார். எல்லாம் ஒரு கனவு போல இருந்தது. எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. விமானத்தை வேடிக்கை பார்க்கச் சென்ற எனக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்நாட்களில் இது ஒரு மாபெரும் அதிசயம்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றதும் என் நண்பர்களிடம், “நான் நேத்து ஏரோப்ளேனில் பறந்தேன்டா” என்று சொல்ல, அடுத்த விநாடியே “டேய் புளுகாதேடா” என்றார்கள். யாருமே நம்பவில்லை. எங்கள் அறிவியல் ஆசிரியர் இராமதாஸ் வகுப்பிற்குள் நுழைந்ததும் அவரிடம், “சார், நான் நேத்து ஏரோப்ளேன்ல பறந்தேன் சார்” என்று சொன்னேன். அவரும் “போடா கதை விடாதே. நானே இதுவரைக்கும் பறந்ததில்ல” என்றார். எனக்கு பெரும் ஏமாற்றம். ஏனென்றால் விமானத்தில் பறப்பது என்பது அக்காலத்தில் சாதாரண விஷயமல்ல.

இதையும் படியுங்கள்:
குடும்பத்தின் மகிழ்ச்சி இந்த 10ல்தான் அடங்கி உள்ளது!
விமானத்தைக் கண்டு அதிசயிக்கும் முதியவர்

கடந்த பதினைந்து வருடங்களாக நான் பலமுறை பல வகையான விமானங்களில் பறந்தாகி விட்டது. ஒரு முறை மலேசியா சென்று வந்தேன். விமானத்தின் உள்ளே அமர்ந்து பறப்பதைக் காட்டிலும் வெளியே நின்று தாழ்வாகப் பறக்கும் விமானங்களைக் கண்டு ரசிப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஏர்போர்ட்டினுள் விமானப் பயணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கையில் அழகான வெள்ளை சீருடை அணிந்து சிறிய டிராலி பேகை தள்ளிக் கொண்டு ஸ்டைலாகச் செல்லும் விமானிகளை இன்றும் நான் பிரமிப்புடன் பார்த்து வியக்கிறேன். எனக்கு இரண்டு ஆசைகள் உண்டு. எல்லா வகையான விமானங்களிலும் ஏறி இந்த உலகம் முழுவதையும் சுற்றி வர வேண்டும். அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் அதில் நான் விமானி ஆக வேண்டும்.

அறுபது வயதைக் கடந்த நான், இப்போதும் தாழ்வாகப் பறக்கும் விமானங்களை மகிழ்ச்சியோடு பார்த்து ரசிக்கும் வேளைகளில், “எத்தனையோ முறை விமானத்தில் பறந்து விட்டீர்கள். ஆனாலும், சின்னபிள்ளை மாதிரி இப்படி விமானத்தை ஆச்சரியமா பார்க்கிறீர்களே” என்று மனைவி சொல்லுவார். ஆனால், நான் என்னை மாற்றிக்கொள்ள முயற்சித்ததே இல்லை. நூறு வயதானாலும் இந்த விஷயத்தில் நான் சிறுபிள்ளையாகவே இருக்க விரும்புகிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com