
பொதுவாகவே குழந்தைகள் 3 மாதங்கள் தொடங்கிய நிலையில், ம்ம் என்ற வார்த்தைகளை உச்சரிக்க தொடங்கிவிடுவார்கள். இதுவே பேசுவதற்கான முதல் படியாகும். படிப்படியாக மாதங்கள் செல்ல செல்ல ஒற்றை எழுத்துக்களால் பேச தொடங்குவார்கள். அ, இ, உ போன்ற சொற்களை உச்சரிப்பார்கள். இது நாளடைவில் வளர்ந்து வளர்ந்து இயல்பாகவே பேசும் பழக்கத்தை வளர்த்து விடும்.
ஆனால் நவீன காலத்தில் குழந்தைகள் அதிகம் போன், டிவி என அடிக்ட் ஆவதால் பேச்சில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பெற்றோர்கள் பலரும் அச்சமடைந்து வருகின்றனர். போன், டிவி பார்ப்பதன் மூலம் அவர்களின் முழு கவனம் பார்ப்பதில் மட்டுமே இருந்து விடுவதால், பேசுவதற்கான வாய்ப்பு குறைந்துவிடுகிறது. இதனால் தான் குழந்தைகளுக்கு அதிகம் மொபைல் போன், டிவி காட்டுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி இருக்கையில் உங்கள் குழந்தையை சீக்கிரம் பேச வைக்க என்ன செய்யலாம் என்று தெரிஞ்சுக்கோங்க..
பாடல்கள் மூலம் பயிற்சி
குழந்தைகளுக்கு எளிய பாடல்கள், கவிதைகள் சொல்லி, அவர்களை சொல்ல வைக்கும் போது பேச்சும் திறன் மேம்படுமாம். இசையோடு ஒரு வார்த்தையை கூறும் போது அது குழந்தைகளிடம் சீக்கிரம் சென்றடையும்.
தினசரி உரையை நாடகமாக்குதல்:
அன்றாட உரையாடல்களை நடித்து காட்டுவதன் மூலம் பேச்சு திறன் ஊக்குவிக்கப்படும்.
சொல் விளையாட்டுக்கள்:
வார்த்தை சங்கிலி போன்ற விளையாட்டுக்கள் பேசும் ஆற்றலை வளர்க்க உதவும்.
கதை கூறுதல்:
தினமும் சிறு கதை கூறி, பிறகு குழந்தையிடம் அதை சொல்ல சொல்ல வேண்டும். அல்லது ஏதாவது ஒரு கதை கூற வைக்க வேண்டும்.
விளக்க சொல்ல வைக்கவும்:
ஏதேனும் அவர்களுக்கு தேவையானதை செய்கையாக காட்டினால், அதை புரிந்து கொண்டாலும் சொற்களால் விளக்க சொல்லி பேச வைப்பது அவசியம். தினசரி இப்படி பயிற்சி செய்வதன் மூலம் ஈஸியாக பேசிவிடுவார்கள்.
அன்பும் ஊக்கமும்:
தவறாக பேசும் போது கண்டிக்காமலும், கிண்டல் செய்யாமலும் நம்பிக்கையுடன் ஊக்கமளித்தால் பேச தொடங்கிவிடுவார்கள்.
பெற்றோர்கள் அதிகம் குழந்தைகளிடம் உரையாடுவதை தொடங்கிவிட்டாலே, இது போன்ற பிரச்சனைகள் வராது. நவீன காலத்தில் வேலை வேலை என செல்வதால், குழந்தைகளிடம் செலவிடும் நேரமே குறைந்துவிடுகிறது.