தமது வாழ்நாள் முழுவதும் யாசகம் எடுத்த ஒருவர் திடீரென்று ஒரு நாள் இறந்து விடுகிறார். அங்குள்ள மக்களெல்லாம் சேர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரின் உடலை நகர்த்தும்போது போர்வைக்கு அடியிலே ஏகப்பட்ட பணக்கட்டுகள். அவர் தனது வாழ்க்கை முழுவதும் யாசகம் பெற்ற பணமாகவே அது இருக்க வேண்டும்.
என்ன ஒரு கொடுமை! அவர் தன்னிடம் இருந்த பணத்தை துளி கூட செலவு செய்யவில்லை. இத்தனை நாட்களாக தன்னிடம் அத்தனை பணத்தையும் வைத்து கொண்டு தான் மறுபடியும் யாசகமே பெற்றே வாழ்ந்து வந்துள்ளார்.
அவர் நினைத்திருந்தால் நல்ல உடை, உணவு, தங்குமிடமென்று தான் சேமித்து வைத்திருந்த பணத்தை பயன்படுத்தி இருந்திருக்கலாமல்லவா? இப்போது அவர் இறந்து விட்டார். இனி, அவர் சேமித்து வைத்த பணத்தால் என்ன பயன் வரப் போகிறது.
இந்தக் கதையை கேட்கும்போது உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா? நாமும் நம் வாழ்க்கையை இப்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிகப்படியாக எதிர்காலத்தை பற்றியே யோசித்து ஓடிக்கொண்டிருக்கிறோம். ‘எதிர்காலத்தில் வாழ்ந்து கொள்ளலாம். இப்போது பணமே பிரதானம். முதலில் நிறைய பணம் சேமிக்க வேண்டும். பிறகு அதை வைத்து வாழ்ந்து கொள்ளலாம்’ என்று நினைப்பதுண்டு. ஆனால், வாழ்வின் அழகியல் என்னவென்று தெரியுமா? நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்று நினைப்பார். இங்கு எதிர்பாராத விஷயங்கள் எதிர்பாராத நேரத்தில் நடக்கும். அதை எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கையாகும்.
எனவே, உங்கள் வாழ்க்கையில் எது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை இன்றே செய்துவிடுங்கள். காலம் தாழ்த்த வேண்டாம். எதையும் தள்ளிப்போட வேண்டாம். உங்களுக்குப் பிடித்த உணவை சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இன்றே வாங்கிச் சாப்பிடுங்கள். உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டுமே என்று நினைத்து அதை தள்ளிப்போட வேண்டாம். உங்களுக்குப் பிடித்தமான இடத்திற்கு இன்றே கிளம்பிப் போங்கள். ‘எனக்கு நேரமில்லை, அதிகம் வேலை பளு இருக்கிறது’ என்று சாக்கு போக்குகள் சொல்லி உங்கள் ஆசையை தள்ளிப்போடாதீர்கள்.
உங்கள் காதலை உங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் இன்றே வெளிப்படுத்துங்கள். தயங்கிக்கொண்டு பிறகு பார்க்கலாம் என்று விடாதீர்கள். வாய்ப்புகள் ஒருமுறையே கிடைக்கும். யாரையேனும் மன்னிக்க வேண்டும் அல்லது யாரிடமாவது மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அதையும் இன்றே செய்து விடுங்கள். உங்களின் ஈகோவை அதில் காட்ட வேண்டாம்.
நீங்கள் உங்களுக்குப் பிடித்த பொருளை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டு பின்பு அது விலை அதிகமாக இருப்பின் வாங்காமல் வரும் பழக்கம் உடையவரா? இன்றே அந்தப் பொருளை வாங்கி விடுங்கள். பணம் என்னமோ சற்று அதிகம் செலவானாலும், அந்தப் பொருளை வாங்குவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அளவில்லாததாய் இருக்கும். அதுவே முக்கியமானதாகும்.
நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ‘நாம் இங்கே தற்காலிகமாகவே தங்கியிருக்கிறோம். அதற்காக நாம் கொடுக்கும் வாடகை என்ன தெரியுமா? நம்முடைய வாழ்நாள். இங்கு நாம் வாழும் நாட்கள் தீர்ந்துபோகும் முன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் முக்கியம்’ என்பதை உணர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வோம்.