
நாம் உண்ணும் உணவில் இருந்து புரதம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் செலினியம் உள்பட பலவிதமான சத்துகள் கிடைக்கின்றன. இருப்பினும் எந்த உணவாக இருந்தாலும் அளவோடு உண்பதே சிறந்தது. அளவை மீறும் போது, அதனால் பக்க விளைவுகளும் ஏற்படும். அவ்வகையில் கோதுமையில் இருக்கும் ஒரு சத்து அதிகரிக்கும் போது நமக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கோதுமையில் புரதம், நார்ச்சத்து, துத்தநாகம், இரும்பு, வைட்டமின் பி, செலினியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன. இதில் செலினியம் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது; தைராய்டை குணப்படுத்துகிறது. ஆனால் இதன் அளவு அதிகரிக்கும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இவை உங்கள் அழகைக் கெடுக்கும் விதமாகவும் செயல்படும்.
தினந்தோறும் ஒவ்வொருவரும் வயதுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட அளவு செலினியத்தை எடுத்துக் கொள்ளலாம். அவ்வகையில் 1 வயது முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 15 mcg என்ற அளவிலும், 11 முதல் 17 வயது வரையுள்ள சிறுவர் சிறுமிகளுக்கு 55 mcg என்ற அளவிலும் செலினியத்தை எடுத்துக் கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் 70 mcg வரை செலினியத்தை எடுத்துக் கொள்ளலாம். இதுதவிர்த்து ஒரு நாளைக்கு அதிகபட்ச அளவாக 300 mcg என்ற அளவைத் தாண்டக் கூடாது எனவும் உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அளவைத் தாண்டும் போது நமக்கு சில பக்க விளைவுகள் ஏற்படும். அதில் முக்கியமான ஒன்று தான் தலைமுடி உதிர்தல். மேலும், நகங்களும் விழுந்து விடுமாம்.
சமீபத்தில் இது போன்றதொரு நிகழ்வும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் இருக்கும் சில கிராமங்களில் பெண்களுக்கு திடீரென தலையில் வழுக்கை விழுந்து விட்டதாம்.
ஆண்களுக்கு வழுக்கை விழுவது கூட இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாகி விட்டது. ஆனால் பெண்களுக்கு எப்படி வழுக்கை விழுந்தது என கிராம் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். அவர்கள் உணவுக்காக பயன்படுத்திய கோதுமையில் செலினியத்தின் அளவு அதிகமாக இருந்ததுதான் காரணம் என ஆராய்ச்சி முடிவுகளுக்குப் பின் தெரிய வந்தது.
இங்கு வாழும் பெண்களுக்கு திடீரென மயக்கம், தலைவலி, முடி உதிர்தல், காய்ச்சல், வாந்தி, தலையில் அரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இளவயது பெண்கள் தான். பிறகு பாதிக்கப்பட்ட பெண்களின் இரத்தம், தலைமுடி மற்றும் சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்த போது, அவர்களின் உடலில் செலினியத்தின் அளவு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கிராம மக்கள் அதிகம் உண்ணும் கோதுமையை ஆராய்ச்சி செய்த போது, அதில் வழக்கத்தை விட 150 மடங்கு செலினியம் அதிகமாக இருந்ததாகவும், ஜிங்கின் அளவு குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. செலினியம் அதிகமாக இருந்த கோதுமையால் தான், திடீரென இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என கிராம மக்களும் உறுதியாக நம்பினர். அதற்கேற்ப கோதுமை உண்பதை நிறுத்தியதும், முடி உதிர்தல் குறைந்து மீண்டும் தலைமுடி வளரத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
வட மாநிலங்களில் கோதுமைதான் பிரதான உணவு. இருப்பினும் எந்த உணவாக இருந்தாலும் அளவோடு உண்பதுதான் சிறந்தது.