நம்முடைய சுரிதார் பழசாகப் போனாலும் துப்பட்டாக்கள் மெருகழியாமல் காட்சியளிக்கும். தூக்கிப் போடவும் மனம் வராது. என்ன செய்யலாம்?
1) நல்ல அழகான பூப்போட்டவற்றை ஜன்னலுக்கு திரைகளாக பயன்படுத்தலாம்.
2) இப்போதெல்லாம் துணிகளாக வாங்கி சல்வார், சுரிதார் தைத்துக் கொள்வதால் அவற்றிலுள்ள துப்பட்டாக்கள் நல்ல நீள, அகலத்துடன் இருக்கும். அவற்றில் நல்ல கனமானவற்றை அடியில், பால்ஸ் வைத்து தைத்து திரைச்சீலைகளாக்கலாம். கீழே சமிக்கி அல்லது மணிசரங்கள் வைத்தும் அழகுபடுத்தலாம்.
3) அழகான பிரிண்டட் பாலியஸ்டர் துப்பட்டாக்களை டீ.வி, ப்ரிட்ஜ் போன்றவற்றிற்குக் கவராக மாற்றலாம்.
4) ப்ளெயின் காட்டன் துப்பட்டாக்களை தலையணை உறைகளாக்கலாம்.
5. சுமாரான காட்டன் துப்பாட்டாக்களை உபயோகப் படுத்தப்படாத சூட்கேஸ்கள், ஏர்பேக்குகளை சுற்றி மூடி வைத்தால் தூசி படியாமல் சேதமடையாமல் இருக்கும்.
6) ஜரிகை வேலை செய்யப்பட்டவற்றை மேஜை விரிப்பாக்கலாம்.
7) காட்டன் துப்பட்டாக்களை இரண்டு அல்லது மூன்றை ஒரே அளவாக வெட்டி, ஒன்றின் மேல் ஒன்றை வைத்து தைத்து மிதியடி ஆக்கலாம்.
8) துப்பட்டா தேவையை விட நீளமாக இருக்கிறதா? தேவையான அளவு வைத்துக்கொண்டு மீதியை கைக்குட்டை ஆக்குங்கள். இல்லாவிட்டால் ரப்பர் பேன்டை நடுவில் வைத்து தைத்து டிரஸ்ஸிற்கு மேட்சான கிரஞ்சியாக மாற்றுங்கள்.
9) ப்ளெயின் துப்பட்டாக்களின் எம்ப்ராய்டரி வேலை செய்து உணவு மேஜை விரிப்பாக்கலாம்.
10) ஓரளவு Contrast ஆக இருக்கும் துப்பட்டாக்களை ஒன்றை டாப்ஸ் ஆகவும் மற்றொன்றை bottom ஆகவும் மாற்றி சிறு குழந்தைகளுக்கு மிடி, சுரிதார் தைக்கலாம்.
11) எனது உறவினர், யாருக்காவது பெண் குழந்தை பிறந்தால் போதும் உடனே துப்பாட்டக்களை பயன்படுத்தி சிறு சிறு கவுன்கள் தைத்து பரிசளித்து விடுவார். அந்தக் குழந்தையின் பெயரையும் எம்ப்ராய்டரி செய்துவிடுவார். எல்லோராலும் பாராட்டப்படும் பரிசு இது.
12) என் தோழி ஒருத்தி புதியதாக காட்சியளிக்கும் துப்பட்டாவிற்கு பொருத்தமாக டிரஸ் வாங்கிக்கொள்வாள். அதனுடைய துப்பட்டாவை பயன்படுத்தி ஒருநாள், பழையதை பயன்படுத்தி ஒருநாள் இரண்டை ஒன்றாக்கி, ஒன்றை இரண்டாக்கி விடுவாள்.
(என்ன செய்தாலும் பயன்படுத்த முடியாத நல்ல துப்பட்டா தேமேயென்று இருக்கிறதா? பேசாமல் பெட்டியின் அடியில் போட்டு வையங்கள். ஒருநாள் நாம் அதற்குப் பொருத்தமாக உடை வாங்கிக் கொள்ள மாட்டோமா என்ன?