
வாழ்க்கை என்பது சோதனைகள் நிறைந்தது. எவருக்கும் வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கையாய் இருந்ததில்லை. சந்திக்கும் சவால்களை தைரியமாய் எதிர்கொண்டு வெற்றியுடன் கடந்து வந்த ஒவ்வொருவரும் இரும்பு இதயம் படைத்தவர் என தாராளமாய்க் கூறலாம். இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் சோதனைகளை கடந்துவிட்டவர்கள் வேறு எதற்கும் பயப்படத் தேவையில்லை. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
உங்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவரை இழக்கும் தருணம்:
ஆழ்ந்த அன்பு கொண்ட ஓர் உயிர் உங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிவதால் வரும் துக்கம் அளப்பரியது. அந்த இழப்பு உங்களை வாழ்க்கை பாதுகாப்பற்றது, அர்த்தமற்றது என்றெல்லாம் நினைக்கத் தூண்டும். வாழ்க்கையில் இதுவும் ஓர் அங்கம் என்றெண்ணி மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புவது உங்கள் வலுவான மீட்சித் தன்மையை காட்டும்.
பணக் கஷ்டத்தை எதிர்கொள்ளல்:
கடன் மற்றும் வேலை இல்லாதது போன்ற காரணத்தால் வரும் பணக் கஷ்டம் மன உழைச்சல் தருவதாகவும் சுய மதிப்பை இழக்கச் செய்வதாகவும் இருக்கும். செலவைக் குறைத்தும், கிடைத்த வேலை செய்தும், பணக் கஷ்டத்திலிருந்து விடுபடும்போது உங்கள் மதிப்பு நிதி நிலமையுடன் இணைந்ததல்ல என்பதை உணர்வீர்கள்.
உடைந்த இதயத்தை குணப்படுத்திக்கொண்டு வருதல்:
நீண்ட நாள் உறவு திடீரென பிரியும் போதும் நம்பியவர் துரோகம் பண்ணும்போதும் உங்கள் இதயம் உடைவது இயற்கை. திறந்த மனதுடன் நீங்கள் அதை ஏற்றுக்கொள்வது உங்களின் தைரியத்தை கூறும்.
சம நிலையற்ற மன ஆரோக்கியத்துடன் போராடுதல்:
மன அழுத்தம், வருத்தங்கள் ஆகியவற்றுடன் மௌனமாக போராடும்போது அவை வெளியில் தெரியாதபடி மனதை வறுத்தெடுக்கும். சுயமாக அதைக்கடந்து வரும்போது உங்களின் இதயம் இரும்பாலானதோ என எண்ணத்தோன்றும்.
இட மாற்றத்தை எதிர்கொள்ளல்:
புதியதொரு சிட்டி அல்லது நாட்டுக்கு இடம் பெயர்ந்து செல்லும்போது வாழ்க்கையை முதலிலிருந்து ஆரம்பிப்பது போன்ற உணர்வு உண்டாகும். புதியவைகளுக்கு பழகிக்கொண்டு, வளைந்து கொடுத்து வாழ்வது புதிய அனுபவம் தருவதுடன் நீங்கள் யாரென்று நிரூபிக்கவும் உதவும்.
நிராகரிக்கப்படும் அனுபவம்:
பதவி உயர்வு போன்றவை மறுக்கப்படும்போது, நிராகரிப்பை எரி பொருளாக்கி மேலும் வளமாக வளர முயற்சிப்பது உங்கள் மன வலிமையை எடுத்துரைக்கும்.
தோல்வியை கடந்தும் வாழ்வது: தொழில் முறை அல்லது தனிப்பட்ட தோல்வியால் துவண்டு போய்விடாமல், விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் முயன்று
இலக்கை அடைவது, ஏமாற்றத்தை துச்சமாக நினைத்து தூக்கி எரியும் உங்களின் மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக்காட்டும்.
உங்களை நீங்களே உயர்திப் பிடிக்க வேண்டிய தருணம்: பேச வேண்டிய இடத்தில் பேசவும், மௌனம் காக்க வேண்டிய நேரம் மௌனமாயிருந்தும், எல்லைக் கோட்டை வகுத்து அதை எவரும் மீறாமல் பாதுகாத்தும், சண்டைகளை தவிர்த்தும் வாழும்போது உங்களின் உள் மன பலம் அனைவரையும் வியக்க வைக்கும்.
கனவு நிறைவேறாமல் போவது:
நீண்ட நாள் கனவு நிறைவேறாமல் போகும்போது உடலின் ஒரு பகுதியே உங்களை விட்டுச் சென்றது போன்ற உணர்வுவரும். அதை போகட்டும் என விட்டுவிட்டு வேறொன்றில் கவனம் செலுத்தும்போது உங்களின் பலம் வெளி உலகத்துக்கு தெரிய வரும்.