ஃபேஷன் சைக்காலஜி என்றால் என்ன?

ஃபேஷன் சைக்காலஜி என்றால் என்ன?

ன்ன இப்படி டிரஸ் பண்ணியிருக்கீங்க? சுத்தமா நல்லாவே இல்ல தெரியுமா? போய் வேற டிரஸ் மாத்திட்டு  வாங்க’ என்று யாரேனும் சொன்னால், ‘நிஜமாகவே நம் உடை நன்றாக இல்லையோ’ என்று நினைக்கத் தோன்றும், அது எத்தனை அழகான விலையுயர்ந்த ஆடை அணிந்திருந்தாலும் சரி. சில சமயங்களில் அத்தனை ஈர்ப்புடையதாக இல்லாமல் இருக்கும் ஒரு சாதாரண உடைக்காக பாராட்டும் வாங்கியிருப்போம். ஏன் இப்படி நடக்கின்றது? நமக்கு பிடித்த உடை மற்றவர்களுக்கும் ஏன் பிடிப்பதில்லை? பிறருக்குப் பிடித்த உடை நமக்கும் ஏன் பிடிப்பதில்லை? என பல கேள்விகள் எழும் அதற்கு பெயர் தான் ஃபேஷன் சைக்காலஜி என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஷோரூம் பளீச் வெளிச்சத்தின் மாயை

இது மற்றவர்களை மட்டும் சார்ந்ததல்ல. நம் உடையைப் பற்றிய நம் கண்ணோட்டத்தின் மீதும் தாக்கத்தை உருவாக்கும். உதாரணத்திற்கு, கடையில், மிகவும் கவனத்துடன் பார்த்துப் பார்த்து ஆசையாக வாங்கிய புடவையோ, சட்டையோ, வேறு ஏதேனும் உடையோ, இரண்டு மூன்று முறை அணிந்த பின்பு அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்பட்டு விடும். இதற்குக் காரணம் கடையில் உள்ள விளக்குகளும், ட்ரையல் ரூமின் கண்ணாடியும் தான். அந்த பளீர் வெளிச்சத்தில் நம் கண்களுக்குத் தெரிவதெல்லாம் பளபளக்கும் ஒரு புதிய ஆடை!  நம் வீட்டின் சாதாரண விளக்கில் மிகச் சாதாரணக் கண்ணாடி முன்பு பார்க்கும் போது ஒரு சராசரி உடையாக மாறி விடுகிறது. இந்த மாதிரி நிகழ்வை நாம் எல்லோரும் ஒரு முறையேனும் அனுபவப்பட்டிருப்போம்.

ஏன் இவ்வாறு நடக்கிறது என்று நினைத்து குழம்பிப் போவோம். இதற்கு முக்கியக் காரணம் ஆடை அணிதலைப் பற்றிய நம்முடைய தவறான கருத்தாகும். உடை என்பது நம்மை மற்றவர்களின் கண்களில் அழகாகக் காட்ட வேண்டும் என்று புரிந்து வைத்திருப்பதால்தான். உடையை ஒரு அழகு சாதனப் பொருளாக பாவிக்கும் எண்ணம்தான், ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு உடை மேல் உள்ள ஈடுபாட்டை குறைய செய்கிறது. இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஆடை அணிவதன் அர்த்தத்தையும் காரணத்தையும் தெரிந்துகொண்டாலே போதுமானது.

காரணம் ஒன்று – பாதுகாப்பு:

ரு ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி கடவுளை வேண்டுகிறோம். பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் படுத்திக்கொள்கிறோம். அதே போல, நம் உடலுக்கும் தோலுக்கும் பாதுகாப்பு வேண்டி அணிவதுதான் உடை. வெயில், மழை, தூசு, குளிர் மற்றும் இதர ஆபத்திலிருந்து நம்மைக் காக்கும் காவலனே உடையாகும். வெளிப்புற சூழலில் இருந்தும், நமக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய விஷயங்களிருந்தும் நம்மைப் பாதுக்காக உதவும் உபகரணம் தான் ஆடையாகும்.

காரணம் இரண்டு – கலாச்சார வெளிப்பாடு:

நாம் உண்ணும் உணவு, பேசும் மொழி, பழக்க வழக்கங்கள், நடந்து கொள்ளும் விதம் போன்றைவை நம் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் ‘நன்றி’, ‘தயவுசெய்து’ அல்லது ‘மன்னிப்பு’ போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது தலை சாய்த்து வணங்கும் தோரணையில் வெளிப்படுத்துவர். அதைப் பார்த்தாலே அவர் ஏதேனும் ஒரு தென் கிழக்கு ஆசிய நாட்டை சேர்ந்தவர் என்று தெரிந்துவிடும். நம் நாட்டில் ஒருவரை சந்தித்ததும் இரு கரங்களையும் கூப்பி வணக்கம் சொல்வதும் ஒரு கலாச்சார வெளிப்பாடுதான். அது போல, நாம் உடுத்தும் உடையும் நம் கலாச்சாரத்தை வெளிப்படுத்த உதவும் ஒன்று தான். கிராப் டாப் போன்ற உடைக்கு ஏற்றவாறு சேலை ஒன்றை உடுத்துவதும், ஃபார்மல் சட்டைக்கு வேஷ்டி உடுத்துவதும் நம் நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன. காரணம், சில குறிப்பிட்ட வகை ஆடைகள் நம் நாட்டில் தான் முதல் முதலில் தோன்றின.

காரணம் மூன்று – சுய வெளிப்பாடு:

‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது நம்மை மற்றவர்கள் எடை போடுவதற்காக இல்லை. நாம் யார், நமக்கு எந்த வகை உடை பிடிக்கும், எது பொருந்தும் என்று நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்ளத்தான். Self-expression – சுய வெளிப்பாடு என்பது நம் பேச்சிலும் நடத்தையிலும் மட்டும் இல்லை. நாம் உடுத்தும் உடையிலும் தான் உள்ளது. ஒருவருக்கு பாரம்பரிய உடை அணிவது பிடித்திருக்கலாம்; அவர் குடும்பத்தில் மற்றொருவருக்கு நவீன உடை உடுத்துவதில் ஆர்வம் இருக்கலாம்; மூன்றாமவருக்கு இந்த இரண்டு வகை உடைகள் அணிவதும் பிடித்திருக்கலாம்; நான்காமவருக்கு மிகவும் பளிசென்ற வண்ணங்கள் கொண்ட ஆடைகள் பிடித்திருக்கலாம். இதில், எதுவும் சரியோ தவறோ இல்லை உடை அணிவது அவரவரின் விருப்பத்தைம் சமூக அந்தஸ்தையும் பொறுத்தது. மற்றவர்கள் நம்மைப் பற்றி கணிப்பதற்கு முன்பு ‘நான் இப்படித்தான்’ என்று தோற்றத்தாலேயே அவர்களின் எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நாம் உடை உடுத்தும் விதம் தான்.

காரணம்  நான்கு – நடைமுறைத்தன்மை:

ம்முடைய உடல் எப்படிப்பட்டது, நடைமுறை வாழ்க்கையில் எந்த வித உடை பொருந்தும், எது அணிவதற்கும் வேலை செய்வதற்கும் வசதியாக இருக்கும், நம்முடைய வேலை எப்படிப்பட்டது போன்ற விஷயங்களும் நம் உடையை தேர்வு செய்யும் விதத்தை நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு ஆசிரியை ஒருவருக்கு பள்ளிக்கு செல்லும் போது சேலை அணிய விருப்பம் இருக்கலாம். பல மணி நேரம் நின்று வகுப்புகள் எடுப்பதற்கும், படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கும், வானிலைக்கு ஏற்றவாறுமான சேலையை வாங்குவது நல்லது. ‘ஏண்டா இந்த உடையைப் போட்டோம்’ என்றில்லாமல், ‘நல்லவேளை, இந்த உடையைப் போட்டேன்’ என்று நினைக்கும் விதத்தில் இருக்கும் உடைகள் நடைமுறைத்தன்மையை வெளிப் படுத்துகின்றன.

முடிவில், ஆடை உடுத்தும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்தை எண்ணி பயப்படவோ கவலைப்படவோ வேண்டாம். நாம் உடுத்தும் உடை சூழ்நிலைக்கும், மேலே சொன்ன விளக்கங்களுடனும் பொருந்தினாலே போதுமானது. உங்களுக்கு என்று ஒரு தனி ‘ஸ்டேட்மன்ட்டை’ [statement] உருவாக்குங்கள். மேலும் விளம்பரங்களில் கூவிக்கூவி அழைப்பது போல தள்ளுபடி இருக்கும் எல்லா நேரங்களிலும் உடை வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. எப்பொழுது என்ன உடை வாங்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே முடிவு செய்யுங்கள்; விற்பனையாளர்களோ விளம்பரங்களோ உங்களுடைய ஃபேஷன் சைக்காலஜியை திசைதிருப்ப விட வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com