வாஷிங்டன் ஆப்பிள், காஷ்மீர் ஆப்பிள், சிம்லா ஆப்பிள், ஃப்யூஜி ஆப்பிள் என பயிரிடப்படும் இடங்களின் பெயரோடு பலவிதமாக அழைக்கப்படும் ஆப்பிள்கள் உண்மையில் தோன்றிய இடம் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான்தான். உலக அளவில் சீனாதான் ஆப்பிளை அதிகம் விளைவிக்கிற நாடு. கஜகஸ்தானில் உற்பத்தியான ஆப்பிள் இந்தியா வந்ததற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.
கஜகஸ்தானின் அல்மட்டி நகரில் இருந்து இந்தியா வந்த ஆப்பிள் முதலில் காஷ்மீரில் மட்டும்தான் பயிரிடப்பட்டது. பின் முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் மூலமாக இந்தியா முழுவதும் அது பரவியது. குறிப்பாக, தொழுநோயாளிகளுக்கு பணிவிடை செய்ய இந்தியா வந்த சாம்வேல் ஸ்டோக்ஸ் என்ற அமெரிக்கர் ராஜபுத்திர பெண் ஒருவரை திருமணம் செய்து ஹிமாச்சல பிரதேசத்தில் தனது மனைவியின் சிறு நிலத்தில் ஆப்பிள் சாகுபடி செய்தார். அது தனது சுவையாலும் நிறத்தாலும் அருகில் இருந்த உள்ளூர் மக்களை ஈர்த்ததால், அதை பலரும் பயிரிட்டு வளர்த்ததுதான் இன்றைய உலகப் புகழ்பெற்ற சிம்லா ஆப்பிள்.
ஆப்பிள்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள் என பல்வேறு வண்ணங்களில், 7500க்கும் மேற்பட்ட வகைகளில் உலகம் எங்கும் விளைவிக்கப்படுகிறது. இவை பொதுவாக காய்க்கத் தொடங்குவதற்கு 3 வருடங்கள் முதல் அதிகபட்சமாக 8 வருடங்கள் வரை ஆகிறது. ஆப்பிள் அதிகளவு நார்ச்சத்து கொண்டவை. வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் என பல முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை. ஆப்பிள் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மையும் பெற்றது. மூளை, இதயம் மற்றும் உடல் தசைகளுக்கு வலிமையையும் இது சேர்க்கிறது. நுரையீரல், குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது.
இவற்றை அப்படியே சாப்பிடலாம் அல்லது வேகவைத்து ஆப்பிள் பை, ஜூஸ், ஜெல்லி, ஜாம் என செய்தும் சாப்பிடலாம். ‘அப்படியென்றால் ஆப்பிளால் தீங்குகளே கிடையாதா?’ என்றால் ஒரு சிலருக்கு ஆப்பிள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். அதிக அளவில் உட்கொள்ளும்பொழுது ஆப்பிள் பழத்தின் அமிலத்தன்மை பற்களின் எனாமலுக்கு தீங்கு விளைவிக்கும். அதன் பெக்டின்கள் செரிமானத்தை குறைக்கக் கூடும்.
ஆப்பிள் குறித்து பலவிதமான நம்பிக்கைகள் மட்டுமல்லாமல், உலகெங்கும் பல வகையான வரலாறுகளும் இது சம்பந்தமாகக் கூறப்படுகிறது. ஒரு ஆண் மகன் ஒரு பெண்ணிடம் ஆப்பிளை தூக்கி எறிந்தால் அவளை திருமணம் செய்ய விரும்புவதாக பொருளாம். அந்த ஆப்பிளை அப்பெண் கீழே விழாமல் பிடித்தால் அவளுக்கு விருப்பம் என்று பொருளாம்.
ஐரோப்பியர்களுக்கு ஐட்டூன், தோர் போன்ற கடவுள்களுக்கும் சாகாவரத்தை அளித்த பழம் என்றும், சமர்கண்ட் என்ற மந்திர பழம் என்று அரேபியர்கள் நம்புவதும் என ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பிரசித்தி பெற்றது இந்த ஆப்பிள் பழம்.
ஆதாமும் ஏவாளும் உண்ட முதல் கனிதான் மனித இனத்திற்கே துன்பம் ஏற்படக் காரணம் என்று கூறப்பட்டாலும் தீமைகளைக் காட்டிலும் நன்மைகளே ஆப்பிளில் அதிகம் உள்ளது.
ஆப்பிள்கள் நீண்ட நாட்கள் கெடாமல் பளபளப்பாக இருப்பதற்காக இதன் மீது தடவப்படும் வேக்ஸ்களை நீக்க தோலை எடுத்துவிட்டு உண்ணலாம் அல்லது சிறிது நேரம் சுடு தண்ணீரில் போட்டு எடுக்கலாம்.