உடல் ஆரோக்கியத்துக்காக காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவது நல்லதாகும். இருப்பினும், நாம் அனைவருமே அவற்றை சரியான முறையில் உட்கொள்கிறோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். காய்கறிகளையும், பழங்களையும் நாம் சரியான முறையில் உட்கொண்டால் மட்டுமே அதற்கான முழு பலனைப் பெற முடியும். இந்தப் பதிவில் தோலுடன் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். சில பழங்களை தோல்களை நீக்கிவிட்டு சாப்பிடுவதால் அவற்றில் உள்ள சத்துக்கள் பெருமளவில் குறைகிறது.
அந்த வகையில் முதல் பழமாக ஆப்பிள் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் ஆப்பிளை அப்படியே நறுக்கி சாப்பிடுவார்கள். ஆனால். சிலர் அவற்றின் தோலை சீவி விட்டு சாப்பிடுவார்கள். ஆப்பிள் தோலில் வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. எனவே, ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதுதான் நல்லது.
சப்போட்டா பழத்தையும் நாம் தோலுடன்தான் சாப்பிட வேண்டும். இந்தப் பழத்தின் அனைத்து நன்மைகளும் அதன் தோலில்தான் ஒளிந்துள்ளன. தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதால், அதிலுள்ள பொட்டாசியம், இரும்புச்சத்து, விட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் போன்ற சத்துக்கள் உங்களுக்குக் கிடைப்பதில்லை. இவை அனைத்துமே அதன் தோலிலேயே உள்ளது.
நம் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளை அதிகரிக்க கிவி பழம் சாப்பிடுவது நல்லதாகும். இது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்கும். ஆனால், பெரும்பாலானவர்கள் இதன் தோலை உரித்த பிறகு சாப்பிடுவார்கள். இந்தப் பழத்தில் அதன் சதைப்பற்றை விட தோலிலேயே அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அடுத்ததாக, பேரிக்காயையும் நாம் தோலுடன்தான் சாப்பிட வேண்டும். இதை தோலை நீக்கிய பின் சாப்பிடுவதால் அதன் சத்துக்கள் பெரிதும் குறைகின்றன. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிற்றின் ஆரோக்கியத்துக்கு நல்லதாகும்.
இறுதியாக, பிளம் பழத்தையும் நாம் தோலுடன்தான் சாப்பிட வேண்டும். இதன் தோலிலும் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளன. இவற்றை தோலை நீக்கி சாப்பிடும்போது அவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்கள் பலவற்றை நாம் இழக்க நேரிடும்.