வாழ்க்கை முழுவதுமே வாய்ப்புதான்!

வாழ்க்கை முழுவதுமே வாய்ப்புதான்!
Published on

நாம் நினைக்காமலேயே பல வாய்ப்புகள் நம் முன்னே வருகின்றன. ஆனால், நாம் அநேகமாக தவறான வாய்ப்பையே தேர்ந்தெடுத்து விடுகிறோம். தனது பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்படி ராதாவிடம் சொல்லுகிறாள் அவளுடைய அக்கா. இப்போது ராதா முன்பு பல வாய்ப்புகள் விரிகின்றன. பாடம் சொல்லிக் கொடுத்ததாகப் பெயர் பண்ணி, நல்ல பெயர் வாங்கிக்கொண்டு போகலாம். வீணாகத் தன்னை அக்கா வேலை வாங்குகின்றாள் என்று பிறரிடம் குறை கூறலாம். பிள்ளைகளின் இயல்புகளைக் கவனித்து அவர்களுக்கு ஏற்ற வண்ணம் பாடம் சொல்லிக் கொடுப்பதனால் தானும் படித்துக் கொள்ளலாம்.

எவ்வாறாயினும் ராதா ஏதேனும் ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். அவள் எந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்? நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

லுவலகத்தில் எதிர்பாராமல் மேலதிகாரி இரண்டு நாள் விடுமுறை எடுத்திருக்கிறார். அதனால் ரமாவிற்கு நேரம் கிடைத்திருக்கிறது. அவள் அப்போது அரட்டையடித்து பிற்கால மனக்கசப்புகளுக்குக் காரணமாகலாம். அங்கொன்றும் இங்கொன்றும் ஒழுங்கில்லாமல் கிடக்கும் விவரங்களை ஒன்றுதிரட்டி ஒரு உருப்படியான வேலையைச் செய்து எதிர்கால வேலைகளை எளிதாக்கலாம். நாவல் படிக்கலாம். நல்லதோர் கருத்தை எண்ணிப் பார்த்து, அதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று எழுதிப் பார்க்கலாம்.

எதைச் செய்தாலும் அவளுக்குத் திருப்தியே. ஆனால், எந்தத் திருப்தியை அவள் விரும்புகிறாள்? நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்கள்? சிந்திப்போமா சிநேகங்களே!

விருப்பங்களும் வாய்ப்புகளும்: கண்ணில் படும் அழகில் மயங்குவோர் விருப்பம், எரிச்சல் ஊட்டியவர்க்கு எதிரடி கொடுக்குமோர் விருப்பம், சோம்பலில் விருப்பம், வெறுப்பதில் ஓர் விருப்பம் என்று மனிதனின் சின்ன விருப்பங்கள் பல. இவற்றுடனே, எதிர்கால நன்மையை எண்ணும் விருப்பம், அன்பில் விருப்பம், முயற்சியில் விருப்பம், அனைவரும் நலனை அடைவதில் விருப்பம் எனச் சிறந்த விருப்பங்களும் உள்ளன.

இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்ய சூழ்நிலை இடம் தரும்போது உயர்ந்த எண்ணம் கொண்டவன் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கின்றான். சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்கின்றான். மற்றவனோ சூழ்நிலையின் கைப்பாவை ஆகின்றான். ஆசைப்பட்டு மோசம் போகின்றான். ஆக, சூழ்நிலையைக் கையாளும் முறையில்தான் நல்ல வாய்ப்பு பிறக்கிறது. சூழ்நிலை எதுவானாலும் அதில் ஒரு நல்லதைக் காண்கின்றான் புத்திசாலி. தன் மனத்திலுமோர் உயர்ந்த பண்பை வலுவாக்கிக் கொள்கின்றான்.

கச்சிதமாகச் செய்யும் வேலை கவனத்தை வளர்க்குமானால், சாதாரண வேலையும் ஓர் வாய்ப்பே. தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவுமானால், எதிர்ப்படும் இடையூறும் ஓர் வாய்ப்பே. ஒழுங்காக இல்லையே ஓவியத் திறமை என்று எண்ணாமல், உள்ளதை பொழுதுபோக்காய்க் கொள்ளலாமே. சுற்றுலா சென்றவிடத்து சாப்பாடு தயாராகவில்லையே என்று சுற்றியிருப்போர் எரிச்சல்படுகையில் இயற்கையை வரைந்து இன்பம் எய்தலாமே!

வீட்டு வேலைகளுக்குப் பின் மிஞ்சுவது அரை மணி நேரம்தான் என்று ஏன் ஆதங்கப்படுகின்றீர்கள்? தொடர்ந்து தினமும் தமிழிலக்கியம் படிக்கலாம். இல்லை, யோகாசனமே உங்கள் விருப்பம் என்றால், அதைத் தவறாது செய்யலாம். பூ வேலையில் ஆர்வமுள்ளவர்கள் அதில் புதுமைகள் செய்யலாம். அதிலும் இதிலுமாக நுனிப்புல் மேய்வதை விடுத்து, ஏதேனும் ஒன்றில் புலமை பெறலாம்.

சூழ்நிலையைக் குறை சொல்பவர்கள் இதைக் கவனிக்க வேண்டும். ஒரு நாளில் கிடைப்பது சிறிது நேரமே ஆனாலும், ஏதேனும் ஒன்றை விடாப்பிடியாகத் தொடர்ந்து செய்தால், ஒரே துறையில் உள்ளத்தை ஒன்றச் செய்தால், முன்னேற்றம் நிச்சயம். மலைச் சிகரம் ஒன்றில் ஏறியவன் மற்ற சிகரங்களையும் பார்க்க முடிவதுபோல், பல விஷயங்களை அறிந்து கொள்வதும் நிச்சயம்.

வாழ்க்கை முழுவதுமே வாய்ப்புதான். எதை விரும்புகிறோம் என்று புரிந்து கொண்டால், அதை எப்படியெல்லாம் தேடிக்கொள்ளலாம் என்பதும் தெரிந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com