தற்காலத்தில் உலகமெங்கிலுமுள்ள வயதானவர்களின் ஆயுட்காலம் நீண்டுகொண்டே போவதைக் காண்கிறோம். அப்படி சூப்பர் சீனியர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் முதியவர்களின் உடல் நலத்தோடு மன நலத்தையும் ஆரோக்கியமுள்ளதாய் ஆக்குவதே அவர்கள் தரமான வாழ்க்கையை வாழ்வதாக அர்த்தம் கொள்ளப்படும். அதற்கு அவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகளில் முதன்மையாக உள்ளது சுவாரஸ்யமான சில விளையாட்டுகள் எனலாம். அவற்றுள் 10 விதமான விளையாட்டுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவது சீனியர் சிட்டிசன்களின் அறிவற்றால் திறனை மேம்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். மற்றவர்களுடன் சேர்ந்திருப்பது அவர்களின் உணர்வுகளை சமநிலைப்படுத்தும்.
2. சுடோக்கு என்னும் புதிர்களை விடுவிக்கும் விளையாட்டு அவர்களின் ஞாபக சக்தி, பிரச்னைகளை அணுகும் ஆற்றல், ஈடுபாடு போன்றவை அதிகரிக்க உதவும். இந்த விளையாட்டை ஒருவர் தனியாகவும் ஆட முடியும்.
3. பிரிட்ஜ் அல்லது சாலிடைர் போன்ற கார்டு கேம் சீனியர்களின் கவனம் மற்றும் தர்க ரீதியாக சிந்திக்கும் திறனை மேம்படுத்தும். பல கார்டு கேம்களுக்கு போர்த் தந்திரம் போன்ற உத்திகளை பிரயோகிக்கும் திறன் மற்றும் விரைவாக முடிவெடுக்கும் திறமையும் தேவைப்படும். இதனால் அவர்களின் மன ஆரோக்கியம் மேம்படும். நல்ல பொழுதுபோக்காகவும் அது அமையும். பல பேர் சேர்ந்து விளையாடும்போது நட்புடன்கூடிய நல்ல உறவு அமையவும் வாய்ப்பு உண்டாகும்.
4. க்ராஸ் வேர்ட் பஸில் விளையாடுவது மொழியின் சொற்கோவை, ஞாபக சக்தி மற்றும் பிரச்னைகளை கையாளும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த உதவும். இந்த விளையாட்டும் தனி நபராக அல்லது வேறொருவருடன் சேர்ந்தும் விளையாடக் கூடியது.
5. ஜிக்ஸா பஸில் விளையாடும்போது சிறு சிறு துண்டுகளை கவனமாக சேர்த்து பெரிய உருவங்களை உருவாக்கும்போது பொறுமையின் அளவு உயர்கிறது.
6. இரண்டிரண்டாக கலந்திருக்கும் வெவ்வேறு நிறம் மற்றும் உருவம் கொண்ட பிளாஸ்டிக் துண்டுகளை ஜோடி சேர்ப்பது மற்றொரு சவாலான விளையாட்டு. இந்த மெமரி கேமை திறமையுடன் விளையாடுபவர்களின் ஞாபக சக்தி குறைய வாய்ப்பில்லை.
7. பிங்கோ என்பது ஒரு சோசியல் கேம். மனக் கிளர்ச்சியூட்டும் இந்த கேம் விளையாட சிதறாத கவனமும் விரைவாக முடிவெடுக்கும் திறனும் தேவை. பலருடன் சேர்ந்து விளையாடுவது மிகுந்த உற்சாகம் தரும்.
8. செஸ் மற்றும் ஸ்க்ரப்பில் போன்ற போர்டு கேம் விளையாடும்போது மூளையின் ஆற்றலை ஒருமுகப் படுத்தி பல உத்திகளைக் கையாண்டு நீண்ட நேரம் யோசித்து முடிவெடுக்க வேண்டிய நிலை வரும். இதனால் அவர்களின் மன ஆரோக்கியம் பல வழிகளில் மேன்மை அடையும்.
9. ஒருவரின் பொது அறிவையும் ஞாபக சக்தியையும் உபயோகித்து விளையாட வேண்டியது ட்ரைவியா கேம் (Trivia Game). பலவிதமான தலைப்புகளில் தொடுக்கப்படும் கேள்விக் கணைகளை திறமையுடன் எதிர்கொள்வது ஒருவரது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும் உதவும். பலருடன் சேர்ந்து விளையாட, நட்பு வட்டம் உருவாகும்.
10. குழுவாக சேர்ந்து ஆளுக்கொரு கதை சொல்லும்போது ஒவ்வொருவரின் கற்பனைத் திறன், படைப்பாற்றல், பழைய கதைகளை நினைவுபடுத்தி வெளிப்படுத்துதல் போன்ற பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும். சீனியர்கள் இதை மிகவும் ரசித்து என்ஜாய் பண்ணுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
சீனியர்கள் மனதளவில் ஆரோக்கியம் நிறைந்து வாழ்க்கையை கொண்டாட இதை விட வேறென்ன வேண்டும்?