கங்கா தசரா கொண்டாட்டம்!

ஆன்மிகம்!
கங்கா தசரா கொண்டாட்டம்!

‘கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதீ

நர்மதே சிந்து காவேரீ ஜலேஸ்மின் சன்னிதிம் குரு’

கங்கையின் அவதாரத்தைக் கொண்டாடும் ஓர் இந்துப் பண்டிகை இது. புனித கங்கை வானிலிருந்து பூமிக்கு வந்த நாள் வைகாசி வளர்பிறை (சுக்ல பக்ஷ) தசமியெனக் கூறப்படுகிறது.

ஹரித்வார், வாரணாசி, ரிஷிகேஷ், அலகாபாத் போன்ற பல இடங்கள் கொண்டாட்டங்களின் முக்கிய இடங்களாகும். பக்தர்கள் கங்கைக் கரையில் கூடி நீராடி ஆரத்தி செய்வது வழக்கம். பத்து நாட்கள் கொண்டாடப்படும் ‘கங்கா தசரா’ சமயம், ஆற்றில் குளிப்பது பத்து பாவங்களை அல்லது பத்து வாழ்நாள் பாவங்களில் இருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது.

கங்கா தசரா, ‘கங்காதரன்’ மற்றும் ‘பாப ஹர தசமி’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வருடம், 30.5.2023 (நாளை) பாப ஹர தசமி வருகிறது.

கங்கை நதிக்குச் சென்று அனைவராலும் நீராட இயலாது. அதனால், வீட்டிலேயே நாம் நீராடுகின்ற நீரில் கங்கை இருப்பதாக எண்ணி நீராடலாம்.

தண்ணீரை மோதிர விரலால் தொட்டு ‘ஓம்’ என எழுதி தியானம் செய்து மேற்கூறிய எளிய ஸ்லோகத்தைக் கூற, அந்நீர் கங்கை நீராக மாறிவிடும். ஸ்நானம் செய்கையில், கங்கை சம்பந்தப்பட்ட சுலோகமோ, பாட்டோ செய்யலாம்.

‘சிவபெருமானுடைய ஜடாமுடியில் வாசம் செய்துகொண்டும், நாராயணரின் பாதத்தை நீராடிக்கொண்டும், அனைவரின் பாவங்களை போக்கிக்கொண்டும் இருக்கும் புண்ணியவதி கங்கைத் தாயாரே உம்மை வணங்குகிறோம்’ என்பதை,

‘ஓம் நமசிவாயை நாராயண்யை தச

தோஷஹராயை கங்காயை சுவாஹா!’

என்கிற மந்திரத்தைக் கூறுவது நல்ல பலனை அளிக்கும்.

ஆற்றில் நீராடுவது, பக்தரை ஒரு நிலைக்குக் கொண்டுவரும். ‘ஹரா’ என்றால் அழிப்பது; ‘தசா’ என்றால் பத்து. ஆகையால்தான் கங்கா தசரா சமயம் பத்து நாட்கள் ஆற்றில் குளிப்பதை வழக்கமாக பலர் கொண்டுள்ளனர்.

யமுனை ஆற்றில் காத்தாடி பறக்க விடும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அநேகர் யமுனை நதியில் நீராடி பின்னர், வெள்ளரிக்காய், தர்பூசணி, லஸ்ஸி, சர்பத்  போன்றவைகளை பிரசாதமாக விநியோகிக்கின்றனர். பூக்களின் நடுவே சிறு விளக்கேற்றி வைத்து நதியில் மிதக்கவிட்டும் நதிக்கு ஆரத்தி காட்டியும் வழிபடுகின்றனர்.

புராணக் கதைப்படி, பிரம்மதேவர், கங்கையை வாழ்த்தி தமது கமண்டலத்திலிருந்து அவரை வெளியேற்ற, உற்சாகத்துடனும், வேகமாகவும் கங்கா எல்லா இடத்திற்கும் பரவுகிறாள். அவளுடைய வீரிய சக்தியைச் சற்றே தடைசெய்ய சிவபெருமான் தனது ஜடாமுடியில் வைத்துக்கொள்கிறார்.

உத்தராகண்ட் பகுதியில் நடக்கும் கங்கா – தசரா கொண்டாட்டத்துக்கு உலகின் பல இடங்களிலுமிருந்து மக்கள் வருவது பெருமைக்குரிய, வணங்குவதற்குரிய விஷயமாகும்.

“கங்கா மாதா கி ஜெய்!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com