மழைக் காலத்தில் தோட்ட பராமரிப்பு!

மழைக் காலத்தில் தோட்ட பராமரிப்பு!

ழைக்காலத்தில் நம் தோட்டத்தைப் பராமரிப்பது ஒரு சவாலான விஷயம்தான். அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் நன்றாக பராமரிக்கலாம் .அதை பராமரிக்கும் வழிமுறைகள் பற்றி இந்தப் பதிவில்  காண்போம்! 

நிறைய தென்னை மரங்கள் இருந்தால், அதில் தொங்கிக் கொண்டிருக்கும்  மட்டைகளை எல்லாம் சுத்தப்படுத்தி, ரோட்டோரத்தில் வைத்து, துடைப்பம் கிழிக்க பயன்படுத்துபவர்களுக்கு அளிக்கலாம். பாக்கி உள்ளதை கார்ப்பரேஷனுக்கு போன் செய்தால் துப்புரவு பணியாளர்கள் வந்து எடுத்துச் செல்வார்கள்.  தேங்காய்  ஓடுகளை  தோட்டங்களில் விசிறி எறியாமல் அவ்வப்போது எரித்து விட வேண்டும். இல்லையென்றால் ஒரு ஓரத்தில் அடுக்கி வைத்து அதை மதிப்பு கூட்டிவிற்கும் கலைப் பொருட்கள் செய்பவர்கள் கேட்க வந்தால் அவர்களிடம்  கொடுத்து விடலாம். தேங்காய் மட்டைகளை தென்னை மரத்திற்கு அடியில் பதித்து வைத்தால் அதுமழை நீரை சேமித்து வைக்கும். தேங்காய் நார்களை பொடியாக்கி செடிகளுக்கு உரமாக போட்டுவிடலாம். 

மற்ற மா, பலா, சப்போட்டா, சாத்துக்குடி போன்ற மர வகைகள் இருந்தால், அவை பக்கத்து வீட்டை தொட்டுக்கொண்டிருந்தாலும், மின் கம்பிகளைத் தொட்டுக்கொண்டிருந்தாலும், மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதை வெட்டி விடுவது நல்லது. இதனால் மழைக்காலத்தில் வரும் புழு, பூச்சிகள் ஜன்னல் வழியாக வீட்டினுள் வருவது தடுக்கப்படும். காற்றில் மரக் கிளைகள் மின் ஒயர்களை உரசி ஷாக் அடிப்பதும் தடுக்கப்படும். 

மேலும் தோட்டத்திற்குள் வளரும் மூலிகைச் செடிகளில் மழை நீர் அதிகம் தேங்கினால், அவை அழுகி விட வாய்ப்புகள் அதிகம். ஆதலால் தண்ணீர் வடிவதற்கான வடிகால்களையும் தோட்டத்திற்குள் அமைத்து, மூலிகைகளை காப்பாற்ற வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக அதிக குப்பை சேராதபடியும் அடைசல் இல்லாதபடியும் தோட்டத்தை வைத்துக் கொண்டால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அலைவதைத் தடுக்கலாம். 

 தோட்டம் முழுவதும் சேரும் குப்பைகளை குழி வெட்டி போட்டு புதைத்தே ஆக வேண்டும்.

வாழை மரங்கள் அதிகமாக இருந்தால் அவற்றிற்கு தக்க முட்டு கொடுத்து விட வேண்டும். அப்பொழுதுதான் காற்றில் சாயாமல் இருக்கும். 

தோட்டத்திற்குள் வளரும் பிரண்டை, வெற்றிலை, தூதுவளை போன்ற கொடி வகைகளை  மதில் சுவர் மேல் ஏற்றி விட்டால் ரோட்டோரத்தில் செல்பவர்கள் பறித்து செல்ல ஏதுவாக இருக்கும். இல்லையேல் அவர்கள் அடிக்கடி நம்மை அழைத்து பறித்து தர கூறுவார்கள்.

அதேபோல் சில பூ மர வகைகளையும், துளசி கற்பூரவள்ளி போன்ற மூலிகைச் செடிகளையும் ரோட்டோரத்தில் வைத்துவிட்டால் நடைவாசிகள் பறித்து செல்ல ஏதுவாக இருக்கும். இது போன்ற மூலிகை செடிகள் மழைக்காலத்திற்கு மிகவும் அவசியமாக பயன்படும் என்பதால் இப்படிச் செய்யலாம். 

வீட்டைச் சுற்றிலும் மழைக்காலத்தில் தேற்றாங் கொட்டையை அரைத்து தெளிப்பது, வாசல் படிகளில் மஞ்சள் திருநீறுகளை தூவுவது போன்றவற்றை பின்பற்றினால் வீட்டிற்குள் புழு, பூச்சிகள் வருவது குறையும். 

தோட்டத்தில்   மரம், செடி, கொடிகள் அதிகமாக இருக்கும் பொழுது, கொசு வளர்ச்சியும் அதிகமாகவே இருக்கும். அதற்கு தோட்டத்தில் இருக்கும் கொய்யா, வேம்பு, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பச்சை இலைகளை பறித்து ஒரு இரும்பு சட்டியில் போட்டு அதன் மேல் சாம்பிராணி வைத்து புகை மூட்டம் போடலாம். கொசு ஓரளவு மட்டுபடும். 

துளசி, சிறியாநங்கை, வெற்றிலை போன்ற  செடிகள் வளரும் இடங்களிலும் பாம்பு அடைவதை நான் பார்த்திருக்கிறேன். இதன் தேவை இந்த மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும் என்பதால் அதை பறிக்க செல்பவர்கள் கவனமுடன் செல்வது அவசியம். 

இவை ஒவ்வொன்றையும் இப்படி பார்த்து பார்த்து பராமரித்து வந்தால் மழைக்காலத்தில் தோட்ட பராமரிப்பு சுமையாக இருக்காது. நோய்த் தொற்றும் நம்மை அண்டாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com