வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள் விளைந்து அதை உபயோகப்படுத்தும்போது ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. அதன் ஒவ்வொரு பருவமும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக, உணர்வுபூர்வமாக இருக்கும். செயற்கையான பூச்சிக்கொல்லிகள் எதுவும் தெளிக்காமல் இயற்கையான முறையில், காய்கறிகளை விளைவிக்கும்பொழுது அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம். ருசியும் தனித்தன்மையுடன் இருக்கும். வீட்டில் காய்கறி வளர்க்கும் முறை பற்றி இந்த பதிவில் காண்போம்!
பொதுவாக காய்கறி தோட்டத்தை வீட்டின் பின்புறத்தில் அமைப்பது வழக்கம். இதனை நீள் சதுரமாக அமைக்கலாம். தோட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நம்மால் செல்லும்படியாக இடம் விட்டு வசதியாக அமைக்கப்பட வேண்டும். வருடத்தில் ஒவ்வொரு பருவ காலத்தில் ஒவ்வொரு வித காய்கறிகள் விளையக்கூடும். அதனால் இடத்தை சிறுசிறு பகுதிகளாக பிரித்து நடுவே பாதை அமைத்து பாத்தி கட்ட வேண்டும்.
பகுதிகளாக பிரிக்கப்பட்ட நிலங்களுக்கு நடுவே கட்டப்பட்ட பாத்திகளில் முள்ளங்கி, டர்னிப் , பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளை விளைவிக்கலாம்.
செடிகளை அதிகாலை நேரங்களில் நடுவது நல்லது. முட்டைக்கோஸ், காலிபிளவர், கத்தரிக்காய் போன்றவை சற்று நாள்பட வளரும் காய்கறிகள். இந்த செடிகளின் இடையே வேகமாக வளரக்கூடிய முள்ளங்கி, டர்னிப், பசலைக் கீரை பாலக் மற்றும் அனைத்து கீரை வகைகளையும் நடலாம். வெண்டை கத்திரி போன்ற செடிகள் வளர்ந்து வரும்போது சாம்பலை அதன் மீது தெளித்து, தண்ணீரை அடித்து விட்டால் பூச்சிகள் அரிப்பது மட்டுப்படும்.
பப்பாளி, வாழை, நார்த்தை, எலுமிச்சை, முருங்கை, மாமரம் முதலியவற்றை தோட்டத்தின் வடக்கு பக்கமே நட வேண்டும். ஏனெனில் மற்ற இடங்களில் இதை வளர்த்தால், அவற்றின் நிழல் காய்கறி செடிகளின் மீது பட்டு அவற்றை வளர விடாமல் தடுத்துவிடும்.
கோவைக்காய், பீன்ஸ், அவரை போன்ற கொடிகளாக விளையும் செடிகளை நூல் அல்லது சணல் மூலம் அழகான முறையில் வேலிகள் மீது படர விடலாம்.
காய்கறிகளில் சிலவற்றை ஒரு முறை விளைந்தபிறகு செடியை பிடுங்கிவிட வேண்டி இருக்கும். அந்த இடங்களில் மறுபடியும் அதே செடிகளை விளைய வைக்க விதைகளையோ, இளங் கன்றுகளையோ தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
தோட்டம் போட இடம் இல்லாதவர்கள் செடிகளை தொட்டிகளிலோ, பெட்டிகளிலோ, மூங்கில் கூடைகளிலோ, சிமெண்ட் தொட்டிகளிலோ, பழைய பிளாஸ்டிக் பக்கெட்களிலோ போடலாம்.
செடிக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்புத் தண்ணீராக இருக்கக்கூடாது. தோட்டம் போடப்படும் பகுதியில் உள்ள மண் அதிக அளவு ஆசிட், ஆல்கலைன் பகுதிகளாக இருக்கிறதா என்பதை சோதித்து ஜிப்சம் மற்றும் சுண்ணாம்புக் கல்லைத் தேவைக்கு ஏற்ப சேர்த்துப் பதப்படுத்திக்கொள்ளலாம்.
களிமண்ணாக இருந்தால் செடிக்கு விடப்படும் தண்ணீர் வடியாமல் தங்கியிருக்கும். இதற்கு மணலையும் இயற்கை உரத்தையும் சேர்த்து நிலத்தை சரிப்படுத்த வேண்டும்.
ஆற்று மணலாக இருந்தால் அந்தப் பகுதியில் செடிக்கு தேவையான அளவு தண்ணீர் தாங்காது. எனவே, தேவைக்கேற்ப செம்மண் கலந்து இயற்கை உரத்தையும் கலந்துகொள்ளவும்.
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, முளைக்கீரை, வல்லாரை, புதினா போன்ற கீரை வகைகளையும் இலைகளை மட்டும் பறித்துத் தண்டுகளை நட்டுவைத்தால் வளர்ந்துவிடும்.
பூச்செடிகளும் நடலாம். கனகாம்பரம், வாடாமல்லி இவற்றின் விதைகளைப் போட்டு வளர்க்கலாம்.
வெங்காயம், வெந்தயம், கடுகு, மல்லி இவைகளின் விதைகளை போட்டாலே நன்கு செடி வளரும்.
மஞ்சள், இஞ்சியை மணலுக்கு அடியில் புதைத்து, சிறிது நீர் தெளித்துவந்தால் முளைத்துவிடும் .பிறகு வேண்டியவற்றை வெட்டி விட்டு மீண்டும் புதைத்து வைத்தால் முளைத்து விடும்.
தொட்டிகளில் செடியை வளர்ப்பவர்கள் குறிப்பாக ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழமான சிமெண்ட் தொட்டிகளை பயன்படுத்தினால், திரும்பத் திரும்ப செடிகளை நடுவதற்கு வசதியாக இருக்கும். தொட்டியில் செம்மண், மணல், கார்டன் ப்ளூம் உரத்தை 3:2:1 என்ற விகிதத்தில் கலக்கவும். கீரை வகைகளை சாதாரண பிளாஸ்டிக் தட்டுகளில்கூட வளர்க்கலாம்.
பூச்சு மருந்து தெளிக்காமல் இயற்கையான பூச்சிக் கொல்லிகளை தேர்ந்தெடுத்து தெளிக்க வேண்டும். அதிக சூரிய வெளிச்சத்திலோ, மழைக்காலத்திலோ, வேகமாக காற்றடிக்கும்போதோ பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது. செடிகளுக்கு காலையிலும் மாலையிலும் தேவைக்கு ஏற்ப தண்ணீர் விடவும். இயற்கை உரங்களை போட்டு வளர்க்கப்படும் செடிகளில் வளரும் காய்கள் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தவையாக இருக்கும்.