கேஸ் சிலிண்டர் விலை உங்களை பயமுறுத்துகிறதா? இதைச் செய்தால் ஒரு மாதம் கூட வரும்!

Gas Cylinder saving Tips
Gas Cylinder saving Tips
Published on

ன்றைய பொருளாதாரச் சூழலில் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் மாத பட்ஜெட்டிலும் பெரும் துண்டை விழுங்குவது சமையல் எரிவாயுச் செலவுதான். சிலிண்டர் விலை (Gas Cylinder) ஏறிக்கொண்டே செல்லும் நிலையில், அது எப்போது தீர்ந்துவிடுமோ என்ற கவலை இல்லத் தரசிகளுக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்காகப் புதிய கருவிகளையோ அல்லது அடுப்புகளையோ வாங்க வேண்டிய அவசியமில்லை. 

நம் அன்றாடச் சமையல் முறைகளில் ஒரு சில மாற்றங்களைச் செய்தாலே போதும், ஒரு சிலிண்டரை வழக்கத்தை விடக் கூடுதல் நாட்களுக்குப் பயன்படுத்த முடியும். பணத்தை மிச்சப்படுத்துவது என்பது பணத்தைச் சம்பாதிப்பதற்குச் சமம் என்பார்கள். அந்த வகையில் எரிவாயுவைச் சேமிக்க உதவும் சில புத்திசாலித்தனமான வழிமுறைகளைப் பார்க்கலாம் வாங்க.

திட்டமிடல்!

சமையலறைக்குள் நுழைந்தவுடனே அவசரமாக அடுப்பைப் பற்ற வைக்கும் பழக்கத்தைப் பலரும் கொண்டுள்ளனர். இதுதான் எரிவாயு வீணாவதற்கான முதல் காரணமாகும். அடுப்பைப் பற்ற வைப்பதற்கு முன்பே காய்கறிகளை நறுக்கி வைப்பது, மசாலாப் பொருட்களை எடுத்து வைப்பது போன்ற அனைத்து முன் தயாரிப்புகளையும் முடித்துவிட வேண்டும்.

எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும்போது கடுகைத் தேடினால், அந்த இடைவெளியில் எரிவாயு வீணாகக் காற்றில் கரைகிறது. தொழில்முறை சமையல்காரர்கள் பின்பற்றும் இந்தத் தயார்நிலை உத்தி, உங்கள் வேலையை எளிதாக்குவதோடு எரிபொருளையும் மிச்சப்படுத்தும்.

மூடி வைத்தால் மிச்சமாகும்!

சமைக்கும்போது எப்போதுமே பாத்திரத்தை மூடி வைத்துச் சமைப்பது மிகச் சிறந்த பழக்கமாகும். திறந்த பாத்திரத்தில் சமைக்கும்போது வெப்பம் வெளியேறி விடுவதால், உணவு வேகுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் மூடி வைக்கும்போது உள்ளே உருவாகும் நீராவியானது உணவைச் சீக்கிரமாக வேக வைக்கும். இது ஒரு சிறிய பிரஷர் குக்கரைப் போலச் செயல்படும். உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை வேக வைக்கும்போது மூடி போட்டு வைத்தால் பாதி எரிவாயு மிச்சமாகும்.

ஊறவைப்பது!

அரிசி, பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் ராஜ்மா போன்ற கடினமான தானியங்களைச் சமைப்பதற்கு முன்பு, அவற்றைச் சிறிது நேரம் நீரில் ஊற வைப்பது நல்லது. நன்கு ஊறிய பொருட்கள் அடுப்பில் வைக்கும்போது மிக விரைவில் வெந்துவிடும்.

அதேபோல, திறந்த பாத்திரத்தில் சமைப்பதை விடப் பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவது எரிவாயுவைச் சேமிக்கும் மிகச் சிறந்த வழியாகும். குக்கரில் விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும். உள்ளே இருக்கும் வெப்பமே மீதமுள்ள உணவை வேக வைத்துவிடும்.

இதையும் படியுங்கள்:
வீடுகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளுக்கான காரணம் தெரியுமா?
Gas Cylinder saving Tips

சரியான பாத்திரம்!

நாம் சமைக்கும் உணவின் அளவிற்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்வு செய்வது முக்கியம். மிகக்குறைந்த அளவு உணவைச் சமைக்கப் பெரிய பாத்திரத்தைப் பயன்படுத்தினால், அந்தப் பாத்திரம் சூடாவதற்கே அதிக எரிவாயு செலவாகும். அதேபோல, சிறிய பாத்திரத்தைப் பெரிய பர்னரில் வைத்தால், தீச்சுடர் பாத்திரத்தின் அடிப்பாகத்தைத் தாண்டி பக்கவாட்டில் வெளியேறும். இது பணத்தை நெருப்பில் இடுவதற்குச் சமம். பாத்திரத்தின் அடிப்பாகத்தில் மட்டும் தீ படுமாறு சரியான பர்னரைத் தேர்வு செய்ய வேண்டும்.

மிதமான தீ!

எந்த உணவாக இருந்தாலும் அது கொதிநிலை வரும் வரை மட்டுமே அதிகத் தீ தேவைப்படும். ஒருமுறை கொதிக்கத் தொடங்கிவிட்டால், தீயைக் குறைத்து 'சிம்'மில் வைப்பதே புத்திசாலித்தனம். அதிகத் தீயில் வைப்பதால் நீர் வற்றுமே தவிர உணவு சீக்கிரம் வேகாது. மேலும், பர்னர்களை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும்.

இதையும் படியுங்கள்:
கேஸ் ஸ்டவ் தீ குறைவா எரியுதா? வீட்டிலேயே எளிதா சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்!
Gas Cylinder saving Tips

தீ நீல நிறத்தில் எரியாமல் மஞ்சள் நிறத்தில் எரிந்தால், பர்னரில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம். இது எரிவாயுவை வீணாக்குவதுடன் ஆபத்தானதும் கூட. அடைப்பைச் சரி செய்தால் எரிவாயு முழுமையாகப் பயன்படுத்தப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com