

வீட்டு சமையலுக்கு மக்கள் பெரும்பாலும் கேஸ் ஸ்டவ் உபயோகித்து வந்தாலும் இண்டக்ஷன் அடுப்பின் உபயோகமும் பரவலாக இருக்கிறது. இந்த இரண்டு அடுப்புகளில் எது சிறந்தது என்பது பற்றிய விரிவான விளக்கத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வேலை செய்யும் விதம்!
கேஸ் அடுப்பு எல்.பி. ஜி எனப்படும் திரவ மயமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு அல்லது இயற்கை எரிவாயுவால் இயங்குகிறது. சிலிண்டரில் இருந்து வரும் எரிவாயு அடுப்பில் உள்ள பர்னர்களை வழியாக அதன் மேல் இருக்கும் பாத்திரத்தை சூடுபடுத்தி சமைக்கிறது. சமைக்கும் போது பாதி எரிவாயு அதனை சுற்றி இருக்கும் காற்றில் வீணாக்கப்படுகிறது.
இண்டக்ஷன் அடுப்பு மின்சாரத்தில் இயங்குகிறது. சமையல் பாத்திரங்களை சூடாக்க மின்காந்த புலன்கள் பயன்படுகிறது. இதனால் அடுப்பின் மேல் வைக்கும் பாத்திரம் வேகமாக சூடாகிறது. இது கேஸ் அடுப்பை விட 50 சதவீதம் வேகமாக செயல்பட்டு சமையலும் விரைவாக முடிகிறது. இது 90ல இருந்து 95% வரை மின்சாரத்தை சமையலுக்கு பயன்படுத்துகின்றன. அதே சமயம் கேஸ் அடுப்பு 50 சதவீதம் எரிவாயு ஆற்றலை மட்டுமே பயன்படுத்துகிறது. இன்டக்சன் அடுப்புகளில் தொடர்ந்து சமைக்கும்போது மின்சாரக் கட்டணம் குறையும்
விலை!
கேஸ் அடுப்பை விட இன்டக்சன் அடுப்பின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் மாத மாதம் ஏறும் சிலிண்டர் விலையை கணக்கிடும் போது இண்டக்ஷன் அடுப்புக்காக செலவு செய்யும் தொகை பெரிதாகத் தோன்றாது.
பாதுகாப்பு!
இன்டக்ஷன் அடுப்பில் இருக்கும் மிகப்பெரிய நன்மை என்னவென்றால் இதில் சமைக்கும் உணவு மட்டுமே சூடாகிறது. அடுப்பும், பாத்திரமும் சூடாவதில்லை. இதனால் வயதானவர்கள் முதல் சிறுவர் சிறுமியர் வரை இதை உபயோகிக்க எளிதாக இருக்கும். அடுப்பு சூடு பட்டு புண்கள் எதுவும் ஆகாது. ஆனால் கேஸ் அடுப்பில் சமைக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடுப்பு அல்லது பாத்திரங்களைத் தெரியாமல் தொட்டுவிட்டால் காயமாகி விடும். அதே போல கேஸ் லீக் ஆகிவிட்டால் ஆபத்தாகிவிடும்.
கேஸ் அடுப்பில் சமைக்கும் போது அது சுற்றுப்புறத்தையும் சேர்த்து சூடாக்குவதால் முறையான காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். ஆனால் இண்டக்ஷன் அடுப்பிற்கு இதுபோன்ற தேவைகள் எதுவும் இல்லை. அது சமையலறையை குளிர்ச்சியாகவே வைத்திருக்கிறது. மிகக் குறைந்த அளவு வெப்பத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது
பாத்திரங்கள்!
கேஸ் அடுப்பில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், அலுமினியம், பித்தளை, மண் பாத்திரங்கள், நான் ஸ்டிக் போன்றவற்றை உபயோகப்படுத்தி சமைக்கலாம். ஆனால் இண்டக்ஷன் அடுப்பில் இது வேலைக்காகாது. அதற்கென்று பிரத்யேகமாக உள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், காஸ்ட் அயர்ன் செய்யப்பட்ட (வார்ப்பு இரும்பு) பாத்திரங்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்.
இடம்/ பராமரிப்பு!
கேஸ் அடுப்பு, சிலிண்டர் வைக்க அதற்கென்று தனியாக இடம் ஒதுக்க வேண்டும். இண்டக்ஷன் அடுப்புக்கு சிறிது இடமே போதும். மேலும் அதை எங்கும் எளிதாக நகர்த்தவும், எடுத்துச் செல்லவும் முடியும்.
சமையல் முடித்த பிறகு இண்டக்ஷன் அடுப்பைத் துடைப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. ஆனால் கேஸ் அடுப்பில் அதன் பர்னர்கள், அடுப்பு மேடை போன்றவற்றில் பிசுபிசுப்பு ஏற்பட்டு அதை சுத்தப்படுத்துவது சற்றே கடினமான விஷயமாகும்.
எது சிறந்தது?
தற்கால சமையலறைகளுக்கு பாதுகாப்பு, எரிபொருள் மற்றும் விரைவாக சமைத்தல் போன்ற காரணங்களுக்காக இன்டக்சன் அடுப்புகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆனால் இதற்கு மின்சாரம் இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். கேஸ் அடுப்பில் மின்சாரத்தை பற்றிக் கவலையில்லை. எனவே அவரவருக்கு தோதான பட்ஜெட், சமையலறை அமைப்பு, சமைக்கும் முறைக்கேற்றவாறு இரண்டு அடுப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.