
கண்ணாடி பொருட்களுள் முகம் பார்க்கும் கண்ணாடி, ஜன்னல் கதவு கண்ணாடி, கண்ணாடி பாட்டில்கள், மூக்குக் கண்ணாடி என்று பல உள்ளன. அவற்றை உடையாமல் பாதுகாக்கவும், சுத்தமாக வைத்திருக்கவும் சில கண்ணாடி டிப்ஸ் .
ஜன்னல் கண்ணாடி கதவுகள், பாட்டில்கள் போன்றவற்றை, துணிகளுக்கு போடும் நீலத்தை நீரில் கலந்து, கழுவி, பிறகு வெந்நீரில் அலம்பி, துடைத்து விட்டால், பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.
முகம் பார்க்கும் கண்ணாடிகள் மீது சோப்பு நீரைத் தடவி, மெல்லிய துணியால் துடைத்து விட்டால், சுத்தமாகி, பளிச்சிடும்.
கண்ணாடி பொருட்கள் வர்ணம் ஏதும் ஒட்டிக்கொண்டால், அவற்றின் மீது சூடான வினிகரை தடவினால், வர்ணம் மறைந்து விடும்.
கண்ணாடி பாட்டில்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைத்தால் சுத்தமாகிவிடும். பாட்டில் வாய் சிறிதாக இருந்தால், எலுமிச்சம் பழத் துண்டுகளை பாட்டிலில் போட்டு, வெதுவெதுப்பான நீர் நிரப்பி, குலுக்கி சுத்தம் செய்யலாம். சன்னமான பிரஷ் கொண்டும் சுத்தம் செய்யலாம்.
முகம் பார்க்கும் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி இவற்றின் மீது சுண்ணாம்புத் தூளை தூவி தேய்த்து விட்டு, பிறகு ஒரு சுத்தமான துணியால் துடைத்து விட்டால் அவை பளபளக்கும்.
மூக்கு கண்ணாடிகளை யுடி கோலானால் துடைத்து விட்டால் பளிச்சென்று ஆகிவிடும்.
கண்ணாடி டம்ளர்களில் சூடான பானம் ஊற்றுவதற்கு முன், ஒரு ஸ்பூனை போட்டுவிட்டு, பிறகு பானத்தை ஊற்றினால், சூட்டினை ஸ்பூன் எடுத்துக் கொள்ளும். டம்ளர் விரிசல் ஆகாமல் இருக்கும்.
கண்ணாடி, பீங்கான் பொருட்களை வெள்ளை வினிகர் கொண்டு தேய்த்துக் கழுவினால், அவற்றில் படியும் கறைகள் நீங்கும். அவற்றில் உள்ள செராமிக்கும் போகாது.
கண்ணாடி பொருட்களை கவனமாக கையாள வேண்டும். கை தவறி உடைந்து விட்டால், கீழே விழும் கண்ணாடித் துகள்களை சுத்தம் செய்வது சிரமம்.