கூகுளுக்கு நல்லாசிரியர் விருது!
அகில உலக நல்லாசிரியர் விருது கொடுப்பது என்றால் நீங்கள் யாருக்குக் கொடுப்பீர்கள்?
யோசிக்கவே வேண்டாம் – கூகுளுக்குதான்!
ஆமாம், இப்போதைய உலகம் மாதா, பிதாவிற்குப் பிறகு, ஆசிரியர் ஸ்தானத்தை கூகுளுக்குதானே கொடுத்துக் கொண்டிருக்கிறது!
பொதுவாக ஆசிரியர் என்பவர் யார்? மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பவர்.
நல்லாசிரியர் என்பவர் யார்? மாணவன் சான்றோனாக வர வேண்டுமே என்ற அக்கறையுடனும், பொறுப்புடனும் கூடவே கண்டிப்புடனும் பாடங்களை போதிப்பவர்.
அந்த காலத்து குருகுலம் முதல் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கல்வி பயிற்றுவிக்கும் நடைமுறையில் ஆசிரியர், மாணவன் மீது பொறுப்பு மிகக் கொண்டிருந்தார். அதாவது அவர் வழங்கிய பிரம்படி, குட்டு, தோப்புகரணம், வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தல், விளையாட்டு மைதானத்தை பத்து முறைச் சுற்றி வரச் செய்தல், ‘இனி இப்படிச் செய்ய மாட்டேன்‘ என்று நூறுமுறை எழுதச் செய்தல் என்பன போன்ற தண்டனைகளால் அவன் படிப்பு, ஒழுக்கம், விளையாட்டு என்ற எல்லா நற்பண்புகளையும் சீரிய முறையில் வளர்த்துக் கொள்ளச் செய்தார். சிலசமயம் அவனுடைய பெற்றோரை வரவழைத்து, அவர்களை தலைமை ஆசிரியர் முன் நிற்க வைத்து, அவன் செய்த தவறை விளக்கிச் சொல்லி, பிறகு தன் தவறை உணர்ந்து கொண்ட மாணவனை, பெரியவர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைப்பதும் நிகழ்ந்ததுண்டு.
இப்போது இப்படி எந்தவகையிலும் மாணவனை தண்டிக்க முடியாது என்பதால்தான் 'நற்பது ஆண்டுகளுக்கு முன்பு' என்று மேலே குறிப்பிட்டேன்.
சரி, இப்போது கூகுளுக்கு வருவோம். தண்டனையே கொடுக்காத உத்தம ஆசான், கூகுள்.
ஆமாம், ஏதோ ஓரிடத்துக்கு வாகனத்தில் பயணிக்கிறோம். புறப்படும் இடத்திலிருந்து போய்ச் சேரும் இடம் வரையிலான வழித்தடத்தை கூகுள், வரைபடமாகக் காட்டுகிறது. எத்தனை மீட்டருக்குப் பிறகு வலது அல்லது இடது பக்கம் திரும்ப வேண்டும்; எத்தனை கிலோ மீட்டர் தூரத்துக்கு நேராகச் செல்லலாம்; ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் போக்குவரத்து நெரிசலாக இருக்கிறது, ஆகவே மாற்று வழியில் செல்லலாம் என்றெல்லாம் நமக்கு வழிகாட்டுகிறது கூகுள் மேப். தேவைப்பட்டால் கூடவே மென்மையான பெண் குரலிலும் அந்த வழிகாட்டல் தொடருகிறது.
ஆனால், எங்காவது ஓரிடத்தில் நாம் அது காட்டும் இடது திருப்பத்துக்கு பதிலாக வலது பக்கமாகத் திரும்பிவிட்டால், 'டேய், முட்டாளே, நான் எங்கே வழி காட்டுகிறேன், நீ எங்கே போகிறாய்?‘ என்று நம்மைத் திட்டி, அது கொஞ்சம்கூட கோபித்துக் கொள்ளாது, இல்லையா? ‘ஓஹோ, நீ இந்த திருப்பத்தில் செல்ல விரும்புகிறாயா, சரி, இங்கிருந்து நீ சென்று சேர வேண்டிய இடத்துக்கு நான் வழி காட்டுகிறேன், கவலைப்படாதே!‘ என்று சொல்லி நாம் வழிமாறிய இடத்திலிருந்து வேறு வழிதடத்தை நமக்குக் காட்டுகிறது. அதாவது நம்மை தண்டிக்க விரும்பாத, நம் போக்குபோலவே நம்மை அரவணைத்துச் செல்லும்ஆசான்!
இது மட்டுமா, நமக்கு ஏதேனும் விவரம் தேவை என்று அதை சொடுக்கி விட்டால், செய்த தப்புக்கு ஆயிரத்தெட்டு காரணங்களைச் சொல்லும் கணவன் போல, நம் தேடு வார்த்தைக்குத் தொடர்பான நூற்றுக் கணக்கான விஷயங்களைப் பட்டியலிடுகிறது, கூகுள். இதனால் நம் தேடு பொருள் எந்த குறிப்பிட்ட விஷயத்துக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதை நம்மால் பளிச்சென்று தெரிந்து கொள்ள முடிகிறது. உடனே அதைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறோம்.
இதில் மிகப் பெரிய அனுகூலம் என்னவென்றால், சூரியனுக்குக் கீழே உள்ள எந்த விஷயத்துக்கும் இதுபோல நூற்றுக்கணக்கான சாய்ஸ் கொடுக்கக் கூடிய வாத்தியார், கூகுளைத் தவிர வேறெவரும் இலர் என்பதுதான். அத்தனை சாய்ஸும் ஒன்றுக்கொன்று எப்படியாவது தொடர்பு கொண்டவையாகவே இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும் - அதாவது நாம் தேடும் விஷயத்துக்கு கூகுள் தரும் விவரங்கள் எல்லாமே அடுத்தடுத்து, மேன்மேலும் அதே விஷயத்தின் பல கூடுதல் தகவல்களைத் தருவதாக அமைந்திருப்பதுதான்!
இப்போது சொல்லுங்கள், கூகுள் அகில உலக நல்லாசிரியர் விருது பெற முற்றிலும் தகுதியானதுதானே?