பல் வலிக்கு சில பாட்டி வைத்தியம்!

பல் வலிக்கு சில பாட்டி வைத்தியம்!

‘பட்டால்தான் தெரியும் பல் வலி’ என்பார்கள். அந்த வகையில், வலியோடு சேர்த்து மிகப்பெரிய மன உளைச்சலையும் கொடுக்கும் ஒரு உடற் பிரச்னையாக உள்ளது பல் வலி. இதை ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போதே கவனித்து, ஒரு சில வைத்தியங்களைச் செய்து குணமாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம். பல் வலிக்கு நிவாரணம் தரும் ஒருசில எளிய பாட்டி வைத்தியங்களை இந்தப் பதிவில் காண்போம்.

சின்ன வெங்காயத்தை சாதாரணமாக மென்று தின்றால் வலி அதிகமாகாமல் இருக்கும். வலி அதிகமாக இருந்தால், சின்ன வெங்காயம் அல்லது வெள்ளரியை மெல்லிசாக நறுக்கி அதை பற்களுக்கு அடியில் வைக்கலாம். இதனால் வலி குறைந்துவிடும்.

கிராம்பு எண்ணெயை பல் வலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வெதுவெதுப்பான உப்பு நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதனால் வீக்கம் குறைந்து வலியும் மட்டுப்படும்.

கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவினாலும் பல் வலி குறையும்.

பூண்டு பற்களை சிறிது தட்டி வலி உள்ள இடத்தில் வைக்கவும். இது பற்களில் இருக்கும் கிருமிகளை நீக்கி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி வலி இருக்கும் இடத்தில் வைத்து இஞ்சியை மென்றால் பல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

பல் வலி இருக்கும்போது, சிறிது கொய்யா இலைகளை வாயில் போட்டு மெல்லத் தொடங்குங்கள். சிறிது நேரத்தில் படிப்படியாக நிவாரணம் பெறுவீர்கள். இது தவிர, கொய்யா இலைகளை வேகவைத்து வடிகட்டி, அந்த தண்ணீரைக் கொண்ட வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.

சூடான புதினா டீ பேக்கை எடுத்து பல் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து ஒத்தடம் கொடுப்பதும் பல் வலிக்கு நிவாரணமாக இருக்கும்.

பல் வலிக்கு தேன் நல்ல வலி நிவாரணியாக உள்ளது. எனவே, ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்பளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாயை கொப்பளித்து வர, பல் கூச்சத்தால் ஏற்படும் வலி நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com