
நம்ம வாழ்க்கையில சிலபேரை நம்மால தவிர்க்கவே முடியாது. அவங்க நம்ம கூட வேலை பார்க்குறவங்களா இருக்கலாம், உறவினர்களா இருக்கலாம், ஏன் நம்ம வீட்டுக்குள்ளேயே கூட இருக்கலாம். இவங்ககிட்ட பேசுனாலே நம்ம சக்தியெல்லாம் உறிஞ்சுற மாதிரி ஒரு ஃபீலிங் வரும்.
தேவையில்லாம நம்மளை வம்பிழுக்கிறது, குத்திக் காட்டிப் பேசுறது, நம்ம சந்தோஷத்தைக் கெடுக்குறதுன்னே இருப்பாங்க. இவங்ககிட்ட சண்டை போட்டா நம்ம நிம்மதிதான் போகும். கண்டுக்காம விட்டாலும் விடமாட்றாங்க. இந்த மாதிரி நச்சு மனநிலை கொண்டவங்கள (Toxic People) சமாளிக்கிற ஒரு சூப்பரான உளவியல் முறைதான் இந்த 'கிரே-ராக்கிங்' (Grey-Rocking). வாங்க, அதப்பத்தி கொஞ்சம் விளக்கமா, பார்ப்போம்.
கிரே-ராக்கிங்ன்னா (Grey-Rocking) என்ன?
பேரைக் கேட்டதும் ஏதோ பெரிய டெக்னிக்னு நினைக்காதீங்க. விஷயம் ரொம்ப சிம்பிள். ஒரு புல்வெளியில ஆயிரக்கணக்கான பச்சை புற்களுக்கு நடுவுல ஒரு சாம்பல் நிற பாறை (Grey Rock) கிடக்குதுன்னு கற்பனை பண்ணிக்கோங்க. உங்க கண்ணு எதை நோக்கிப் போகும்? நிச்சயமா அந்தப் பாறையைத் தாண்டி, அந்தப் பசுமையான புல்லை நோக்கித்தான் போகும்.
ஏன்னா, அந்தப் பாறையில சுவாரஸ்யமா பார்க்குறதுக்கு ஒண்ணுமே இல்லை. அது ஒரு உயிரில்லாத, உணர்ச்சியில்லாத பொருள். அதே மாதிரிதான், நச்சு மனநிலை கொண்டவங்க நம்மகிட்ட வம்பிழுக்க வரும்போது, நாமளும் அந்த சாம்பல் நிறப் பாறையை மாதிரி எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாம, அவங்களுக்குப் போர் அடிக்கிற மாதிரி நடந்துக்கிறதுக்கு பேர்தான் கிரே-ராக்கிங்.
இதை எப்படி பயன்படுத்துறது?
அவங்க நம்மளைக் கோபப்படுத்தவோ, அழவைக்கவோ, இல்லை நம்மகிட்ட இருந்து ஏதாவது ஒரு உணர்ச்சிகரமான பதிலை எதிர்பார்க்கவோதான் முயற்சி செய்வாங்க. அதுதான் அவங்களுக்கு ஒரு விதமான சந்தோஷம். ஆனா நாம அதுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
உதாரணத்துக்கு, அவங்க உங்களை ஏதாவது குத்திக் காட்டிப் பேசும்போது, நீங்க பதிலுக்குக் கோபமா கத்தாம, "ஓ அப்படியா சரி", "ம்ம்ம்", "அப்படியா இருக்கலாம்" அப்படின்னு ரொம்ப சாதாரணமா, எந்த உணர்ச்சியும் இல்லாத குரல்ல பதில் சொல்லணும். அவங்க கண்ணைப் பார்த்துப் பேசாம, வேற எங்கேயாவது பார்த்துக்கிட்டே பேசணும்.
மொபைலைப் பார்த்துக்கிட்டே, "ம் சரி" னு சொல்றது மாதிரி நடந்துக்கணும். உங்ககிட்ட இருந்து எந்தவிதமான சுவாரஸ்யமான பதிலும் வராதப்போ, அவங்களுக்கு போர் அடிச்சிடும். ஒரு சுவர்ட்ட பேசுனா என்ன ஃபீலிங் வருமோ, அதே ஃபீலிங் அவங்களுக்கு உங்ககிட்ட பேசும்போது வரணும்.
எதிர்பார்க்கும் பலன் என்ன?
ஒரு கொசு நம்மகிட்ட இருந்து ரத்தத்தை உறிஞ்சத்தான் வரும். ஆனா, நம்ம உடம்புல ரத்தமே இல்லைன்னா அது என்ன பண்ணும்? கொஞ்ச நேரம் கத்திப் பார்த்துட்டு, வேற ஆளைத் தேடிப் போயிடும். அதே கணக்குதான். இந்த நச்சு மனிதர்களுக்கு நம்மளோட உணர்ச்சிகள்தான் அவங்களோட தீனி. நாம அந்தத் தீனியைக் கொடுக்காதப்போ, அவங்களுக்கு நம்ம மேல இருந்த ஆர்வம் குறைஞ்சிடும். "இவன்கிட்ட பேசிப் பிரயோஜனம் இல்லை, ஒரு ரியாக்ஷனும் கொடுக்க மாட்றான்" அப்படின்னு அவங்களே நம்மளை விட்டு மெதுவா விலகிப் போக ஆரம்பிச்சிடுவாங்க.
ஒன்னு மட்டும் நல்லா ஞாபகம் வெச்சுக்கோங்க. இந்த கிரே-ராக்கிங் முறையை எல்லார்கிட்டயும் பயன்படுத்தக் கூடாது. உண்மையிலேயே நம்ம மேல அக்கறை இருக்கிறவங்க நம்மகிட்ட கோபப்பட்டா, அவங்ககிட்ட உட்கார்ந்து பேசித் தீர்க்கணும். ஆனா, ஒருவருடைய நோக்கமே நம்மளைக் காயப்படுத்துறதுதான்னு உங்களுக்குத் தெரியுதோ, அவங்ககிட்ட இருந்து உங்களைப் பாதுகாத்துக்க இது ஒரு அருமையான கருவி.