

“விபத்து” இந்த வார்த்தையைக் கேட்டதும் அனைவரின் மனதும் பதறும். விபத்து என்பது அதில் சம்பந்தப் படுவோரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் ஒரு சம்பவம். நாம் நமது வாகனத்தை இயக்கும் போது நமக்கும் பிறருக்கும் எந்தவித பாதிப்பும் எழாத வகையில் பத்திரமாக வாகனத்தை இயக்கி பாதுகாப்பாக வீடு போய்ச் சேர வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாகும். இதற்காக அரசு அவ்வப்போது விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் நாமும் முழுமனதோடு பங்கேற்று பாதுகாப்பு விஷயங்களை மனதில் பதித்து கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும். இனி சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.
கார் ஜீப் முதலான நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் போது ஓட்டுபவரும் அவருக்கு அருகில் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் சீட் பெல்ட்டை அணியவேண்டும்.
இரண்டு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கும் போது வாட்ஸ்அப் செய்திகளைப் படிப்பதையும் குறுஞ்செய்திகளை அனுப்புவதையும் தவிர்த்து விடுங்கள். இது உங்கள் கவனத்தை திசை திருப்பி விபத்திற்கு வழி வகுக்கும். வாகனத்தை ஓட்டிக் கொண்டே மொபைல் போனில் பேசுவதையும் தவிர்க்கவேண்டும்.
மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டயம் ஹெல்மெட் எனும் தலைக் கவசத்தை அணியவேண்டும். பின்னால் அமர்ந்து செல்லுபவரும் கட்டாயம் ஹெல்மெட்டை அணிய வேண்டும். ஏனென்றால் ஓட்டுபவரைவிட பின்னால் அமர்ந்து செல்லுபவரே விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுபவராக இருப்பார். ஹெல்மெட் அணிவதை ஒரு பழக்கமாக நாம் கடைபிடிக்க வேண்டும்.
போக்குவரத்துக் காவலர் நம்மைப் பிடித்து அபராதம் விதிப்பாரே என்று பயந்து அவருக்காக நாம் ஹெல்மெட் அணியக்கூடாது. நம் உயிரைக் காக்க அவர் பணி செய்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் முழு பொறுப்பு நமக்கு உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒருபோதும் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்காதீர்கள். மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுவது என்பது அதை அருந்துபவருக்கும் வீட்டில் நம்மை நம்பி உள்ளோருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது தூக்கம் வந்தால் இன்னும் கொஞ்ச நேரந்தானே. போய்ச் சேரவேண்டிய இடத்தை அடைந்து விடலாம் என்று தொடர்ந்து வாகனத்தை இயக்காதீர்கள். இது மிகவும் ஆபத்தான செயல். வாகனத்தை பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோ அல்லது முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவிக்கொண்டோ தொடர்ந்து வாகனத்தை ஓட்டலாம்.
போக்குவரத்து விதிகளை நன்றாக அறிந்துகொண்டு புரிந்துகொண்டு அதைப் பின்பற்றி வாகனத்தை ஓட்டுங்கள். அரசாங்கம் விதிகளை வகுப்பது நமது நன்மைக்காகத்தான் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆபத்தான இடங்களில் அல்லது நெடுஞ்சாலைகளில் தேவையின்றி உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல முயலாதீர்கள். இது பெரும் விபத்திற்கு வழிவகுக்கும். தேவைப்பட்டால் எதிரே வாகனம் ஏதும் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு பின்னர் முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்ல முயற்சி செய்யுங்கள்.
உங்கள் வாகனத்தை உரிய காலத்தில் நன்றாக பராமரியுங்கள். முக்கியமாக பிரேக் நன்றாக இயங்குகிறதா என்பதை அவ்வப்போது சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். டயர்கள் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.