

பெற்றோர் இயல்பாகவே குழந்தைகளிடமிருந்து அன்பையும் மரியாதையையும் எதிர்பார்க்கிறார்கள். குழந்தைகள் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு வளர்ந்து வரும்போது, பெற்றோர்கள் தங்களையறியாமலே பின்பற்றி வரும் சில தவறான பழக்க வழக்கங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் மீதான மரியாதை குறைவதற்கு காரணமாகிவிடுகிறது. அவ்வாறான பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பெற்றோர்-பிள்ளைகள் ஆகிய இரு தரப்பும் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிள்ளைகளின் கருத்தைக் காது கொடுத்து பெற்றோர் கேட்காதபோதும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாதபோதும் பிள்ளைகளுக்கு பெற்றோர் மீதான மரியாதை குறைய ஆரம்பிக்கிறது.
பெற்றோர் குழந்தைகளுக்கு சொல்லித்தரும் நல்ல விஷயங்களை தவறாமல் தாங்களும் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டியது அவசியம். அவ்வாறில்லாமல், நேர்மையாய் நடந்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு, பிறரிடம் அவர்கள் பொய் பேசுவதை குழந்தைகள் கேட்கும்போது பெற்றோர் மீதான மரியாதை தானாகக் குறையத் தொடங்கும்.
பிள்ளைகள் ஆர்வமுடன் செய்ய விரும்பும் ஒரு செயலை, பெற்றோர் குறுக்கிட்டு தடுக்க நினைக்கும்போது குழந்தைகள் சுதந்திரமற்றவர்களாக உணரவும், கோபம் கொள்ளவும் வாய்ப்பு உருவாகிறது. இது பெற்றோர்-பிள்ளைகள் ஆகிய இருவருக்குமிடையிலான இடைவெளியை அதிகரிக்கச் செய்கிறது.
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பவர்களாகவே உள்ளனர். அது நிறைவேறாத போது குழந்தைகளின் செயல்பாடுகள் பற்றி எதிர்மறையாக விமர்சனம் செய்யவும், பிற குழந்தை களுடன் ஒப்பிட்டுப் பேசவும் ஆரம்பிக்கின்றனர். இதனால் குழந்தைகள் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். பெற்றோரை மதிக்கத் தவறுகின்றனர்.
குழந்தைகள் வீட்டிலிருக்கும்போது, அவர்கள் இருப்பதையே கண்டுக்காமல் பெற்றோர் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பது, உணர்ச்சி பூர்வமாக உறவை பலவீனமடையச் செய்கிறது.
பிள்ளைகள் செய்யாத தவறுக்கு பெற்றோர் தண்டனையளிப்பதும், பின் உண்மை தெரியவரும்போது ஒரு சாரி (sorry) கூட சொல்லாமலிருப்பதும் குழந்தைகள் மனதில் பெற்றோர் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் குறையவே வழி வகுக்கும்.
ஒரு வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கும்போது, பெற்றோர் ஒரு குழந்தை மீது மட்டும் அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்களானால், மற்ற குழந்தைகள் அவர்கள் மீது, 'பாரபட்சம் காட்டும் நியாயமற்ற பெற்றோர்" என்ற குற்றச்சாட்டு கூறி அவர்களிடமிருந்து சிறிது விலகியிருப்பதையே விரும்புவர்.
பிள்ளைகளின் உணர்வுகளை மதிக்காமல், பிறரிடம் அவர்களைப் பற்றி குறை கூறிப்பேசுதல், கிண்டலடிப்பது, எல்லை மீறி இடர்படுத்துதல் போன்றவை பிள்ளைகளின் மனதிற்குள் பொது வெளியில் நம்மை மரியாதைக் குறைவாக நடத்தும் பெற்றோருக்கு நாம் ஏன் மரியாதை தரவேண்டும் என்ற எண்ணத்தை உண்டுபண்ணும்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய அன்பைக் கொடுத்து நியாயமாக நடந்துகொண்டால் அவர்களுக்குக் குழந்தைகளிடமிருந்து கிடைக்க வேண்டிய மரியாதை தானாகக் கிடைக்கும்.